Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலக காட்டுயிர்கள் தினம்: வன விலங்குகள் வேட்டையாடப்படுவது முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும்

இன்று உலக காட்டுயிர்கள் தினம். உணவு மற்றும் வியாபார நோக்கத்திற்காக வன விலங்குகள் வேட்டையாடப்படுவது முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: உணவு மற்றும் வியாபார நோக்கத்திற்காக வன விலங்குகள் வேட்டையாடப்படுவது முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். இதற்கு எதிராக வேட்டை தடுப்பு காவலர்கள் என்ற பணி வனத்துறையில் உருவாக்கப்பட்ட பிறகு நல்ல பலனை தந்துள்ளது என்றாலும் இன்னும் இது நடக்கிறது.

Sr. Project Associate, Care Earth Trust சந்திரசேகரன் பழனிச்சாமி ஒன்இந்தியா தமிழுக்காக எழுதியதாவது:-

இந்திய அளவில் வனப்பகுதியின் பரப்பளவு 14.24 % (1950) - இல் இருந்து 23.40 % (2018-19) ஆக உயர்ந்துள்ளது பாராட்டத்தக்கது. இதில், புலிகள் காப்பகத்தின் கீழ் புலிகள் உட்பட பல்வேறு வகையான விலங்கினங்கள் தாவர இனங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக உள்ள பரப்பளவு மட்டும் சுமார் 18500 ச.கி.மீ (1973-74) - ல் இருந்து 72803 ச.கி.மீ (2021-22) ஆக உயர்ந்துள்ளது.

புலிகளின் எண்ணிக்கை உயர்வு

புலிகளின் எண்ணிக்கை உயர்வு

புலிகள் காப்பகத்தின் எண்ணிக்கை 9-ல் இருந்து தற்போது 53 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம், புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது அதாவது 2006 -ல் 1411 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018-ல் 2967 ஆக உயர்ந்துள்ளது. புலிகள் வளமான காட்டின் அடையாளம் ஆகும். காட்டில் வாழும் புலிகள் உள்ளிட்ட வன உயிர்கள் மற்றும் புற்கள் உள்ளிட்ட வன தாவரங்கள் இயற்கைச் சமநிலையோடு இருந்தால்தான் காடும் வளமாயிருந்து நாடும் வளமாய் இருக்கும். இயற்கை ஒவ்வோர்‌ இனத்‌ தாவரங்களின்‌ எண்ணிக்கையும்‌, விலங்குகளின்‌ எண்ணிக்கையும்‌ ஒரே சீராக இருக்கும்படி பார்த்துக்‌ கொள்கிறது.

மனித விலங்கு மோதலுக்கு வித்திடும்

மனித விலங்கு மோதலுக்கு வித்திடும்

இவற்றில்‌ ஒன்று அதிகரித்து அல்லது குறைந்தாலும்‌ மற்றொன்று பாதிக்கப்பட்டு இயற்கையின்‌ சமநிலை சீர்குலையும்‌. உதாரணமாக, ஊன்‌ உண்ணிகளே இல்லாத காட்டில்‌ மான்‌ இனங்கள்‌ இருப்பின்‌ அவைகள்‌ பெருகி, புற்களையெல்லாம்‌ மேய்ந்து தீர்த்துவிடும். இவ்வாறு உணவுப் பற்றாக்குறை ஏற்படின், அவைகள்‌ விளைநிலங்களிலுள்ள பயிர்களை அழிக்கும். ஆனால், ஊன்‌ உண்ணிகள்‌ இருப்பின்‌ மான்களைப்‌ பிடித்துத்‌ தின்று அவற்றின்‌ அளவைக்‌ கட்டுப்படுத்திவிடும்‌. மாறாக, மான்கள்‌ இல்லாத இடத்தில் புலி, சிறுத்தை போன்ற ஊன்‌ உண்ணிகள்‌ இருப்பின்‌, உணவின்மையால்‌ அவைகள்‌ கால்‌ நடைகளைப்‌ பிடித்துத்‌ தின்னும்‌. இது மனித விலங்கு மோதலுக்கு இட்டுச்செல்லும்.

இயற்கையின்‌ சமநிலை

இயற்கையின்‌ சமநிலை

இந்நிலை ஏற்படாதவண்ணம்‌ இயற்கை கட்டுப்படுத்துவதைத்தான்‌ இயற்கையின்‌ சமநிலை (Balance of Nature) என்கிறோம். ஆனால், நடைமுறையில், சிலவகை செயலால் இந்த ‌இயற்கைச்‌ சமநிலையில் ‌சீர்குலைவு ஏற்படுகிறது. பல காரணங்கள் இருப்பினும், இரண்டு முக்கிய காரணங்களை இக்கட்டுரை விவாதிக்கிறது. இதில் முக்கியமான ஒன்று வனவளத்தை பாதிக்கும் அந்நிய தாவரங்கள் ஊடுருவல். குறிப்பாக, உண்ணிச் செடி, சீமை கருவேலம் மற்றும் பார்த்தீனியம் ஆகியவை இதில் அடங்கும். கர்நாடக வனப்பகுதியில் பார்த்தீனியத்தின் ஊடுருவல் ஒப்பீட்டு அளவில் மிக அதிகமாக உள்ளது.

உண்ணிச் செடி

உண்ணிச் செடி

தமிழக வனப்பகுதியில் குறிப்பாக சத்தியமங்கலம் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்தில் இந்த மூன்று வகையான அந்நிய தாவரங்களும் உள்ளன. முதல் இரண்டு வகையான அந்நிய தாவரங்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசப்பட்ட அளவுக்கு மூன்றாவது தாவரம் அதாவது பார்த்தீனியம் குறித்து அதிகம் பேசப்படுவதில்லை. இந்த புலிகள் காப்பகங்களில் உண்ணிச் செடி மற்றும் சீமை கருவேலம் ஆகியவற்றை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைளுக்கு ஓரளவு பலன் தந்திருந்தாலும் இன்னும் கணிசமான தூரம் செல்லவேண்டியுள்ளது. உண்ணிச் செடியில் இரண்டு இனங்கள் உண்டு - ஒன்று லேண்டனா கேமரா (அந்நிய தாவரம்) மற்றொன்று லேண்டனா இண்டிகா (உள்ளூர் தாவரம்). இரண்டாம் இனம் மிக மிக குறைவாக இங்கொன்றும் அங்கொன்றுமாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ளது.

 சீமைக்கருவேலம்

சீமைக்கருவேலம்

லேண்டனா கேமராவை பிடுங்கும் போது உள்ளூர் தாவரத்தையும் சேர்த்து புடுங்கி விடக்கூடாது. லேண்டனா கேமரா குச்சியை கொண்டு டேபிள் சேர் உள்ளிட்ட பொருட்கள் செய்யப்படுகின்றன. ஆசனூர் - தாளவாடி செல்லும் வழியில் உண்ணி செடிகள் பிடுங்கப்பட்ட இடத்தில் புற்களை வளர்த்ததால் இன்று அங்கு மான்கள் மற்றும் யானைகளுக்கு தீவனம் கிடைக்கும் பகுதியாக மாற்றம் அடைந்துள்ளது. வனவளத்தை பாதிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கிறது சீமைக்கருவேலம். தொடர்ந்து பிடுங்கி வருவதன் மூலமே இதற்கு நல்ல பலன் கிடைக்கும். அந்நிய தாவரங்களை நீக்கும்போது சூழலியல் சேவைகள் சார்ந்த இதன் பொருளாதார மதிப்பு இன்னும் அதிகரிக்கும்.

வியாபார நோக்கத்திற்காக

வியாபார நோக்கத்திற்காக

வனத்துறையின் 2020 ஆம் ஆண்டின் ஒரு கணக்கீட்டின்படி, முதுமலை புலிகள் காப்பகம் அளிக்கும் சூழலியல் சேவைகளின் பொருளாதார மதிப்பீடு வருடத்திற்கு ரூ.14650 கோடிக்கும் மேல் என்று கணக்கிட்டு உள்ளது. வன வளத்தை பாதிக்கும் அந்நிய தாவரங்களை முழுமையாக நீக்கி மாற்று ஏற்பாடு செய்யும்போது இதன் மதிப்பு இன்னும் கணிசமாக அதிகரிக்கும். உணவு மற்றும் வியாபார நோக்கத்திற்காக வன விலங்குகள் வேட்டையாடப்படுவதை முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். இதற்க்கு எதிராக வேட்டை தடுப்பு காவலர்கள் என்ற பணி வனத்துறையில் உருவாக்கப்பட்ட பிறகு நல்ல பலனை தந்துள்ளது என்றாலும் இன்னும் இது நடக்கிறது.

34 புலிகள் இறந்துள்ளது

34 புலிகள் இறந்துள்ளது

இந்திய அளவில் 2012 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 1062 புலிகள் இறந்துள்ளன. இதில், இயற்கை, இயற்கை அல்லாத ஆனால் வேட்டையாடுதலும் அல்லாத காரணங்கள் (வாகனங்களில் அடிபட்டு இறப்பு மற்றும் விலங்குகளுக்குள் சண்டையிட்டு இறப்பு) மற்றும் வேட்டையாடுதல் ஆகிய காரணங்களால் இறக்கின்றன. 2018 ஆம் ஆண்டில் மட்டும் 101 புலிகள் இறந்துள்ளன. இதில், இயற்கை காரணத்தால் 54 புலிகளும், இயற்கை அல்லாத ஆனால் வேட்டையாடுதலும் அல்லாத காரணங்களால் 4 புலிகளும், மற்றும் வேட்டையாடுதல் மூலம் 34 புலிகளும் இறந்துள்ளன. இதில் வேட்டையாடுவதால் ஏற்படும் இறப்பை பூஜ்யம் ஆக்கவேண்டியது நமது கடமையாகும்.

வனவிலங்குப்‌ பாதுகாப்பு உறுதிமொழி

வனவிலங்குப்‌ பாதுகாப்பு உறுதிமொழி

இன்று, மார்ச் 3, 50 ஆவது உலக காட்டுயிர்கள் தினம் ஆகும். இந்நாளில் நாம் எடுக்க வேண்டியது கீழ் காணும் உறுதிமொழியை, "மனித நாகரிகத்தின்‌ அடித்தளமான இயற்கைச்‌ சூழ்நிலையைக்‌ காப்பதன்‌ அடிப்படை இன்றியமையாமையை நன்கு உணர்ந்து, இன்றைய தலைமுறையினரின்‌ நாளைய வளங்காணும்‌ நம்பிக்கைக்‌ குரிய, குறைந்துவரும்‌ காட்டுப்‌ பகுதிகளையும்‌, மறைந்துவரும்‌ விலங்கினங்களையும்‌ பேணிக்காப்பதில்‌ நான்‌ முனைந்து பணியாற்றுவேன்‌ என முழு மனத்தோடு உறுதி கூறுகின்றேன்."

(மூலம்: பி. ச. சுப்பையன்‌, எம்எஸ்சி, இந்திய வனவிலங்குகள்‌, தமிழ்நாட்டுப்‌ பாடநூல்‌ நிறுவனம்‌, 1974, ஜூன்.)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+