Year Ender 2025: நாஸ்ட்ராடாமஸ், பாபா வாங்கா வெளியிட்ட.. அதிர வைக்கும் கணிப்புகள்.. 2025ல் நிறைவேறியதா? இல்லையா?
சென்னை: ஒவ்வொரு வருடமும் தொடக்கத்தில் நாஸ்ட்ராடாமஸ், பாபா வாங்கா மற்றும் மங்கா போன்றவர்களின் கணிப்புகள் வெளியாகும். அந்த வருடங்களுக்காக அவர்கள் மேற்கொண்டு இருந்த வரலாற்று ரீதியிலான கணிப்புகள் கவனம் பெறும். ஆனால் வருட கடைசியில் அந்த கணிப்புகள் நிஜமானதா என்பதை பற்றி பெரிதாக யாரும் பேசுவது இல்லை.
அந்த வகையில் நாஸ்ட்ராடாமஸ், பாபா வாங்கா மற்றும் ஜப்பானின் மங்கா தீர்க்கதரிசனங்களின் உண்மை நிலவரம் என்ன? 2025 ஆம் ஆண்டில் அவர்களின் கணிப்புகள் நிஜமானதா? அவர்கள் சொன்னதெல்லாம் நிறைவேறியதா? என்று இங்கே பார்க்கலாம்.
2025ம் ஆண்டில் சில கணிப்புகள் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தின, மற்றவை மீம்ஸாக பரவின. சில முன்னறிவிப்புகள் மட்டுமே நிஜத்தை நெருங்கின என்பது சுவாரசியமான ஒன்று. ஆண்டு முடிவடையும் வேளையில், உலகளாவிய கவனத்தைப் பெற்ற மிகப்பெரிய கணிப்புகள் மற்றும் உண்மையில் என்ன நிகழ்ந்தது என்பதை திரும்பிப் பார்ப்போம்.

பாபா வாங்காவின் கணிப்புகள்: நிஜமாக நடந்ததா?
பல்கேரிய ஆன்மிகவாதி பாபா வாங்கா, 2025 ஆம் ஆண்டிலும் சமூக ஊடகங்களின் விருப்பமானவராகவே இருந்தார். அவர் பெரும் பொருளாதாரச் சரிவு, ஆசியாவில் ஒரு பெரிய இயற்கை சீற்றம், புற்றுநோய் சிகிச்சையில் திருப்புமுனை ஆகியவற்றை கணித்ததாகப் பல காணொளிகள் பரவின.
உண்மையில் உலகளாவிய பொருளாதாரச் சரிவு இல்லை, சந்தைகள் நிலையற்றதாக இருந்தன. ஆனால் உலக அளவில் பெரிய பொருளாதார சரிவு ஏற்படவில்லை. எல்லா வருடமும் ஏற்படும் சிறிய சிறிய சரிவுகள் இருந்தன. அவரது ஆசிய இயற்கை பேரிடர் கணிப்பு ஓரளவிற்கு உண்மையானது. கடுமையான புயல் காலம், நிலநடுக்கங்கள் போன்ற நிஜ நிகழ்வுகளுடன் ஒரு பகுதிக்கு மட்டுமே பொருந்தியது. ஆனால், பெரிய அழிவுகள் நிகழவில்லை.
சுவாரஸ்யமாக, அவரது புற்றுநோய் சிகிச்சை குறித்த கணிப்பு 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளியான மருத்துவ முன்னேற்றங்களுடன் ஒத்துப்போனது. ரஷ்யாஸின் புற்றுநோய்க்கு வேக்சின் கண்டுபிடிக்கப்பட்டது. பல ஆராய்ச்சிக் குழுக்கள் துல்லியமான மரபணு சிகிச்சைகளில் கேன்சரை குணமாக்கலாம் என்று அறிவித்தன. இது முழுமையான குணம் இல்லாவிட்டாலும், குறிப்பிடத்தக்க அளவில் கேன்சர் சிகிச்சையில் கவனம் பெற்றது.
2025 ஆம் ஆண்டிற்கான நாஸ்ட்ராடாமஸ் கணிப்புகள்: தவறாக போனதா?
நாஸ்ட்ராடாமஸ் இல்லாமல் எந்த ஓர் ஆண்டும் நிறைவடைவதில்லை. 2025 க்காக, அவரது கணிப்புகள் பலமுறை ஆய்வு செய்யப்பட்டது. உலகளாவிய ஆட்சி மாற்றங்கள், அதிகரித்த காலநிலை மாற்றம், பெரிய தொழில்நுட்ப புரட்சி ஆகியவை நிகழும் என்று கூறப்பட்டது.
உண்மையில், பல நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தாலும், அவை நாஸ்ட்ராடாமஸ் கணிப்பில் குறிப்பிடப்பட்ட "பெரிய தலைவனின் வீழ்ச்சி"யுடன் பொருந்தவில்லை. எந்த நாட்டின் பெரிய தலைவரும் ஆட்சியை இழக்கவில்லை. காலநிலை நிகழ்வுகள் தீவிரமடைந்தன என்பது உண்மைதான்.
தெற்கு ஐரோப்பாவில் காட்டுத்தீயும், வரலாறு காணாத வெப்ப அலைகளும் நாஸ்ட்ராடாமஸ் எச்சரிக்கைகளுடன் ஒப்பிடப்பட்டன. அவரது தொழில்நுட்ப கணிப்புகளும் ஓரளவுக்குப் பொருத்தமாகவே இருந்தன. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு விதிமுறைகள், குவாண்டம் ஆராய்ச்சி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முன்மாதிரிகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. அவர் முற்றிலும் சரியாக இல்லாவிட்டாலும், அவரது கணிப்புகள் நிஜ நிகழ்வுகளுடன் இணையம் பொருத்திப் பார்க்கும் அளவுக்கு நெகிழ்வானதாக இருந்தன.
ஜப்பானிய மங்கா கலைஞரின் கணிப்பு
1975 இல் மங்கா கலைஞராக அறிமுகமான ரியோ டாட்ஸ்கி, இந்த ஆண்டு 'புதிய பாபா வாங்கா' பட்டம் பெற்றார். 1980 முதல், அவர் எதிர்காலத்தை கணிக்கும் கனவுகளைப் பெற்றதாகக் கூறுகிறார், அவற்றை ஒரு நாட்குறிப்பு புத்தகத்தில் பதிவு செய்தார்.
1999 இல், தனக்கு வந்த கனவுகளில் சிலவற்றை "நான் கண்ட எதிர்காலம்" (The Future I Saw) என்ற மங்கா புத்தகமாகத் தொகுத்தார். இளவரசி டயானாவின் மரணம் மற்றும் கோவிட்-19 பெருந்தொற்று ஆகியவற்றை ரியோ துல்லியமாக் கணித்து இருந்தார்.
அவர் 2025 ஆண்டு பற்றி சில முக்கிய கணிப்புகளை வெளியிட்டு இருந்தார். ஜூலை 2025 இல் ஒரு பெரிய சுனாமி ஏற்படக்கூடும் என்று அவர் கூறினார். இது 2011 ஜப்பான் அனுபவித்ததை விட மூன்று மடங்கு பெரியதாக இருக்கும் என்றார்.
"இது ஜப்பானை மட்டுமல்ல, பிலிப்பைன்ஸ், தைவான், இந்தோனேசியா உட்பட பல இடங்களையும் பாதிக்கும்" என்று ரியோ கூறினார். இந்தக் கணிப்பு தீவிரமாகப் பரவியதால், ஜப்பானில் மக்கள் பயணத் திட்டங்களை ரத்து செய்யத் தொடங்கினர். பல ஆன்லைன் பயண தளங்கள் முன்பதிப்பு ரத்துகளின் அதிகரிப்பைப் பதிவு செய்தன. ஆனால் அவர் சொன்னது போல பெரிய சுனாமி பாதிப்புகள் ஏற்படவில்லை.
மொத்தத்தில் இந்த பிரபல கணிப்பாளர்கள் வெளியிட்ட கணிப்புகள் கொஞ்சம் 2025 நிகழ்வுகளுடன் பொருந்திப்போனாலும் அப்படியே சொன்னபடி நடக்கவில்லை என்பதே நிஜம்!












Click it and Unblock the Notifications