மதுவந்தி அதிரடி.. உங்களுக்கென்ன கேடு? தயிர் சாதம்னு நினைச்சீங்களா? சென்னையில் வேலூர் இப்ராஹிம் நறுக்
சென்னை: ஒரு சமூகத்தை இழிவுப்படுத்தும்போது, பிசிஆர் சட்டத்தை, அரசு அமல்படுத்துவதுபோல், அந்தணர்களை இழிவுப்படுத்துவோருக்கு எதிராக, தமிழக அரசு சிறப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று பாஜகவின் வேலூர் இப்ராஹிம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், பிராமண சமூகத்தின் மீதான அவதூறு பிரச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து சமுதாய தலைவர்கள், தமிழக பிராமண சமூகத்தினர் பங்கேற்றனர்.

அப்போது, பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் பேசும்போது, "கடந்த ஒரு மாதம் முன்பு, ஒரு மேடையில் ஒரு பெண் பிராமண சமூகத்தை இழிவுபடுத்தியபோது, "அதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்' என்று அதே இடத்தில் தன் எதிர்ப்பை பதிவு செய்தவர் அர்ஜூன் சம்பத்.
அர்ஜூன் சம்பத்: அவரது வீரம், துணிவு, எதிர்ப்பாற்றல் தான் தமிழகத்தில் பிராமண சமூகத்தை இன்று மீண்டும் ஒரு முறை ஒன்று சேர்த்திருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் நடந்தும், பிராமண சமூகம் அமைதியாக இருந்தது எனக்கு வருத்தமாக இருந்தது.
பிராமணர் என்றால், சாம்பார் சாதம், தயிர் சாதம் சாப்பிடுவோர் என்றும், போகிற போக்கில் பூணுால் அறுக்க முடியும் என்றும், கயவர்கள் கூட்டம் கொட்டம் அடிக்கும்போது மவுனம் காக்கிறீர்களே... எனக்கு வேதனையாக இருக்கிறது. சுப்பிரமணிய பாரதியின் வாரிசு அல்லவா நீங்கள்? சுப்பிரமணிய சிவா வாரிசு அல்லவா நீங்கள்? உ.வே.சாமிநாத அய்யரின் வாரிசு அல்லவா நீங்கள்? இந்த தேசத்துக்கு உயிர்கொடுத்துப் பாடுபட்ட தலைவர்களை கொண்ட வீரம் மிகுந்த சமூகம் அல்லவா நீங்கள்?
பிராமண சமூகம்: தன்னுடைய சமூகத்தை ஒருவர் இழிவுபடுத்தும்போது, இன்னொரு சமூகத்தவர் குரல் கொடுக்கிறார் என்கிறபோது, நீங்கள் வேடிக்கை பார்க்கிறீர்களே' என்று பேசினேன். அதைக்கேட்டு நிறையப்பேர் என்னிடம் வேதனைப்பட்டார்கள். "பிராமண சமூகத்தை தட்டி எழுப்ப எந்த வார்த்தை பிரயோகத்தையும் பயன்படுத்த நான் தயாராக இருக்கிறேன்" என்றேன்..
அப்படிச்சொன்ன பிறகு தான் இப்போது மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. பிராமண சமூகத்தை இனிமேல் ஒருவரும் இழிவுபடுத்தி பேச முடியாது என்ற எச்சரிக்கையை தமிழக அரசுக்கும், திமுகவினருக்கும் இந்த கூட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது. ஒரு சமூகத்தின் மீது தேவையற்ற எண்ணங்களை இவர்கள் பரப்புகிறார்கள். பிராமண சமூகத்துக்காக நாங்கள் எதைச் செய்வதற்கும் தயாராக இருக்கிறோம். எங்கள் குரலை வலிமையாக பதிவு செய்வோம்.
பிசிஆர் சட்டம்: ஒரு சமூகத்தை இழிவுப்படுத்தும்போது, பிசிஆர் சட்டத்தை, அரசு அமல்படுத்துவதுபோல், அந்தணர்களை இழிவுப்படுத்துவோருக்கு எதிராக, தமிழக அரசு சிறப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும்.
ஒரு மாதத்திற்கு முன்பு, பேச்சு அரங்கு என்ற பெயரில் முதல்வரும் கூட, பிராமண சமூகத்தை இழிவுப்படுத்துவது போல நடந்து கொண்டிருக்கிறார்.. இது கண்டிக்கத்தக்கது.. இன்று இந்து மத்தை இழிவுப்படுத்துவோர், நாளை முஸ்லிம்களையும் இழிவுப்படுத்துவார்கள்.. எனவே இந்த அரசுக்கு, நம்முடைய அனைவரின் எதிர்ப்பையும் காட்ட வேண்டும்.
திருமாவளவன்: பிராமண சமூகத்தை இனி யாருமே இழிவுபடுத்த முடியாது.. இந்துத்துவம், சனாதான தர்மம் என்றால், அதை பாசிசம் என திமுக, காங்கிரஸ், விசிக இப்படி எல்லாருமே சொல்கிறார்கள்.. திருமாவளவன் கட்சியில் உள்ள ஆளூர் ஷாநவாஸ் எம்எல்ஏ, "திராவிட மாடல் என்றால், பிராமணர்கள் இல்லா கூட்டமைப்பை உருவாக்குவது" என்கிறார். ஒரு சமூகத்தை அழிக்க நினைப்பது தான் பாசிசம். அந்த பாசிசத்தை, திமுக அரசு செய்கிறது என்றால், அவர்கள் என்னுடைய செருப்புக்கு சமம்" என்றார்.
முன்னதாக, இந்த கூட்டத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஒய்.ஜி.மதுவந்தி பேசும்போது, "பிராமண சமுதாயம் ஒரு பெரிய சமுதாயம். எல்லாரும் ஒன்று சேர வேண்டும். இந்த சமுதாயத்தை கொச்சைப்படுத்தி பேச வேண்டியது கிடையாது. ஒரு சினிமா எடுத்தீர்கள் என்றால், அதில் ஒருத்தர் ஒரு சமுதாயத்தில் இருந்து வருகிறார் என்றால் அதை தைரியமாக சித்தரித்து சொல்ல வேண்டும்.
மதுவந்தி: அவ்வளவு பெரிய ராணுவ அதிகாரியை பற்றி படம் (அமரன்) எடுக்கிறீர்கள். அவர் ஒரு பிராமணர் என்று காட்டுவதில் உங்களுக்கு என்ன கேடு? யாரை பார்த்து பயப்படுகிறீர்கள்? திரைத்துறையில் நான் இருந்து கொண்டே தான் இதை கேட்கிறேன். மற்ற சமுதாயத்தை பற்றி நேரிடையாக சொல்கிறீர்கள்? பிராமணர் என்பதை ஏன் மறைக்கிறீர்கள்? பயத்தை போக்கி தைரியமாக களத்தில் இறங்குங்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications