நீங்களும் இந்தியாவில் தானே இருக்கிறீர்கள்? இல்லையா? தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் பரபர கேள்வி!
சென்னை: தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா (JNV) பள்ளிகளை அமைப்பதை மாநில அரசு ஏன் எதிர்க்கிறது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. நீங்கள் இந்திய குடியரசில் இல்லையா என்று தமிழ்நாட்டை பார்த்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
மத்திய அரசின் இத்தகைய கல்வித் திட்ட எதிர்ப்பு, "கூட்டாட்சி ஒத்துழைப்பின் உணர்வுக்கு எதிரானது" என நீதிமன்றம் கடுமையாகக் குறிப்பிட்டது. ஜவஹர் நவோதயா வித்யாலயா (JNV) பள்ளிகளை தமிழ்நாட்டில் அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு எதிரான மேல்முறையீடு வழக்கு ஆகும் இது.

நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வின் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் எதிர்ப்புக்கு 'இந்தித் திணிப்பு' ஒரு காரணம் என மாநில அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அப்போது, இதை அரசியல் அல்லது மொழிப் பிரச்சினையாக மாற்றாமல், மாணவர்களின் நலன், கல்வி வாய்ப்புகளில் கவனம் செலுத்தும்படி அமர்வு வலியுறுத்தியது.
மொழி பிரச்சனை இல்லை
"நாம் கூட்டாட்சிச் சமூகம். இதை மொழிப் பிரச்சினையாக மாற்றாதீர்கள். கிராமப்புற மாணவர்களுக்கான வாய்ப்புகளைத் தடுக்காதீர்கள்," என நீதிமன்றம் எச்சரித்தது. மத்தியத் திட்டங்கள் "திணிக்கப்படுவதாக" மாநில அரசின் வழக்கறிஞர் புகாரளித்தபோது, நீங்கள் எங்கள் குடியரசின் ஒரு பகுதியல்லவா? நீங்களும் இந்தியா தானே? என்று கேள்வி எழுப்பியது.
முன்பு சென்னை உயர் நீதிமன்றம், ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா வித்யாலயாக்களை அமைக்க உத்தரவிட்டிருந்தது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரித்துக்கொண்டிருந்தது. தமிழ்நாட்டிற்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், இத்திட்டத்திற்கு மாநில அரசுக்குக் கடுமையான ஆட்சேபனைகள் இருப்பதாக வாதிட்டார்.
நவோதயா மாதிரிப் பள்ளிகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் 30 ஏக்கர் நிலத்தையும், மூன்று ஆண்டுகளுக்குப் பள்ளிகளைப் பராமரிக்கவும் மாநில அரசு வழங்க வேண்டும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். கல்வி பொதுப் பட்டியலிலும், மத்திய அரசின் திட்டம் கல்வி வாய்ப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்ற நீதிபதிகளின் அமர்வு, மாநில அரசின் எதிர்ப்பைச் சந்தேகிப்பதாகத் தெரிவித்தது.
கல்வி ஒரு முதலீடு
"மத்திய அரசு கல்விக்காக முதலீடு செய்வதில் தவறில்லை. தரமான மாணவர்களுக்கு மட்டுமே இங்கு வாய்ப்பு. பள்ளிகளை ஏன் எதிர்க்கிறீர்கள்? கல்வி பொதுப் பட்டியலில் உள்ளது. இது தரத்தை மேம்படுத்துகிறது," என நீத்தோபதி நாகரத்னா கூறினார். அரசு தரப்பில் ஆஜாரான மூத்த வழக்கறிஞர் வில்சன், தமிழ்நாட்டிற்கு வலுவான பொதுக் கல்வி உள்கட்டமைப்பு இருப்பதாகவும், மாநில சட்டத்தின் கீழ் இருமொழிக் கொள்கை இருப்பதாகவும் வாதிட்டார்.
நவோதயா திட்டம் முன்மொழியும் மும்மொழிக் கொள்கை, தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம், 2006 உடன் முரண்படுகிறது என்றார். இப் பிரச்சினையை அரசியல்மயமாக்க வேண்டாம் என நீதிமன்றம் எச்சரித்தது. "இதில் அரசியலைக் கொண்டுவர வேண்டாம். திறமையான மாணவர்களுக்குக் கல்வி வழங்குவதைத் தடுக்கிறீர்கள். மேலும் பள்ளிகளைத் தொடங்குவதில் என்ன தவறு?" என நீதியரசர் நாகரத்னா வினவினார்.
இத்திட்டத்தில் பங்கேற்பது அல்லது நிராகரிப்பது மாநிலங்களுக்கு விருப்பத் தெரிவு என்றும், தமிழ்நாட்டின் தற்போதைய கல்வித் தரங்கள் நவோதயா வித்யாலயாக்களை விட உயர்ந்தவை என்றும் வில்சன் பதிலளித்தார். இருப்பினும், நீதிமன்றம் இதை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. தமிழ்நாட்டின் மறுப்பு மொழிக் கொள்கை சார்ந்ததென வில்சன் வலியுறுத்தியபோது, இம்முடிவை மொழி அரசியலாகச் சுருக்க முடியாது என நீதியரசர் நாகரத்னா கூறினார்.
"இந்த தடை ஏன்? பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால், அதை ஏன் தடுக்கிறீர்கள்?" என்று அவர் கேட்டார். தனது கொள்கைகளுக்கு முரண்படும் மத்தியத் திட்டத்திற்கு நிலமோ, நிதி ஆதரவோ வழங்கும்படி மாநிலத்தை கட்டாயப்படுத்த முடியாது என வில்சன் வலியுறுத்தினார். "அவர்கள் எங்கள் மீது இந்தியைத் திணிக்க விரும்புகிறார்கள்," என்றும் குறிப்பிட்டார்.
மாநிலத்தின் மொழிக் கொள்கை மதிக்கப்படும், ஆனால் குழந்தைகளின் கல்வி வாய்ப்புகளை மறுக்க அதைப் பயன்படுத்தக் கூடாது என நீதியரசர் நாகரத்னா பதிலளித்தார். "உங்களுக்கு மொழிக் கொள்கை இருந்தால், தெரிவியுங்கள், திட்டத்தை அதற்கேற்ப மாற்றுவோம். ஆனால் கிராமப்புற மாணவர்களின் வாய்ப்புகளைத் தடுக்காதீர்கள்," என்று அவர் கூறினார்.
நாடு முழுவதும் 650 நவோதயா பள்ளிகளுக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளதாகவும், தமிழ்நாடு மட்டுமே ஒத்துழைக்காத ஒரே மாநிலம் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா வித்யாலயாக்களை நிறுவத் தேவையான நிலத்தை ஆறு வாரங்களுக்குள் அடையாளம் காணுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications