ஒன்றரை மணி நேரத்துக்கு ஒரு மாத்திரை.. சென்னை GH-ல் சிகிச்சை இல்லை.. துடித்துக்கொண்டிருக்கும் உயிர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அந்த இளம்பெண், ஒன்றரை மணிநேரத்திற்குள் மாத்திரையை சாப்பிட்டு விடவேண்டும். இல்லையெனில் கை- கால் அப்படியே இழுத்துக்கொண்டு செயலிழந்துவிடும். வழக்கமான பொசிஷனுக்கு கைக்கால்களை கொண்டுவருவதற்குள் உயிர் போய் உயிர் வந்துவிடும். தினம் தினம் மரண வேதனையை அனுபவித்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் ஏழ்மையான குடும்பத்து இளம்பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை இல்லை. தனியார் மருத்துவமனையிலோ 25 லட்ச ரூபாய் செலவாகும் என்பதால், பணமில்லாமல் தவியாய் தவித்துக்கொண்டிருக்கிறது அந்த ஏழை குடும்பம்.

இளம்பெண்ணை மட்டுமல்ல அவர்களது குடும்பத்தையே செயலிழக்க வைத்த அந்த அரிதான நோய் என்ன? ஏழை, எளிய மக்கள் நம்பிக்கொண்டிருக்கும் அரசு மருத்துவமனை அவரை கைவிட்டதன் பின்னணி என்ன? விரிவாக பார்க்கலாம்...

health chennai government hospital

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், ஸ்ரீ மூலக்கரை அமானிய்யா நகர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர், 38 வயது ரமிஷ் ஃபாத்திமா. கணவர் பெயர் அனஸ் அஹமது, இரண்டு குழந்தைகள் பள்ளியில் படித்துவருகின்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், ரமிஷ் ஃபாத்திமாவுக்கு திடீரென வலது கை செயலிழந்து போனது. இடது கையால் டீ போட்டு கொண்டு வந்த ஃபாத்திமாவிடம் என்னாச்சு?” என கணவர் அசன் அஹமது கேட்டபோதுதான், அவர் சொன்ன காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

health government hospital

நியூராலஜி டாக்டரிடம் போகலாம் என்று முடிவெடுத்து மறுநாள் கிளம்புவதற்குள்ளே அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்... வலது பக்க காலும் செயலிழக்க ஆரம்பித்தது. பதறியடித்துக்கொண்டு, தூத்துக்குடியிலுள்ள தனியார் டாக்டரை அணுகியபோது ஸ்கேன் எடுத்து பரிசோதித்து பார்த்தவர், “மூளைக்கும் நரம்புக்கும் இடையேயுள்ள ரசாயண சத்து குறைபாடு ஏற்பட்டிருக்கு என்று கூறுகிறார். அதாவது, மைய நரம்பு மண்டலத்தைச் சிதைக்கின்ற நடுக்குவாதம் (Parkinson's disease) நோய் வந்திருப்பதை அறிகிறார்கள். டாக்டர் எழுதிக்கொடுத்த அந்த மாத்திரையை சாப்பிட்ட ஃபாத்திமாவுக்கு 8 மணிநேரம் உடல் செயல்பாடுகள் சரியாக இயங்குகின்றன. ஆனால், மீதமுள்ள நேரங்களில் கை கால் மீண்டும் இழுத்துக்கொள்ள ஆரம்பித்துவிடுகிறது.

ஒருகட்டத்தில், 8 மணிநேரம் என்பது 6 மணிநேரமாக குறைந்து, பிறகு 4 மணிநேரமாக குறைந்து, 3 மணிநேரம் மட்டுமே அந்த மாத்திரை வேலை செய்யும் என்கிற சூழலுக்கு தள்ளப்படுகிறார் ஃபாத்திமா. அதற்குப்பிறகு, திருச்செந்தூரிலுள்ள மற்றொரு நியூராலஜி டாக்டரை அணுகுகிறார்கள். அவரது மகன் சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் நியூராலஜி துறை உதவி பேராசியராக இருப்பதால், அவரது ஆலோசனை உதவியால் 2022 காலக்கட்டத்தில் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள். அப்போதுதான் பரிசோதித்த அரசு டாக்டர்கள், “இவருக்கு ஏற்பட்டுள்ள நரம்பு மண்டல பிரச்சனைக்கு மாத்திரை, மருந்து கொடுப்பது தீர்வு அல்ல. டி.பி.எஸ் (Deep Brain Stimulation)எனப்படும் அறுவை சிகிச்சை செய்யவேண்டும். ஆனால், அந்த அறுவை சிகிச்சைக்கான கட்டமைப்பு வசதிகள் இங்கு இல்லை என்கிறார்கள்.

தமிழ்நாட்டின் தலைநகரத்திலுள்ள ராஜிவ்காந்தி மருத்துவமனையிலேயே இதற்கான அறுவை சிகிச்சை இல்லை என்றால், வேறு எந்த அரசு மருத்துவமனைக்கு செல்வது? என்கிற கேள்விக்குறியோடு வீட்டிற்கு அழைத்து வரப்படுகிறார் ஃபாத்திமா. ஆனால், நோயின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வலியும் வேதனையும் கூடிக்கொண்டே போகிறது.

இதனால், கேரளா திருவனந்தபுரத்திலுள்ள ஸ்ரீ சித்ர திருநாள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் (Sree Chitra Tirunal Institute for Medical Sciences and Technology) டி.பி.எஸ் அறுவை சிகிச்சை செய்யப்படுவதை அறிந்து அங்கே செல்கிறார்கள். “அரசு காப்பீடு அட்டையின் மூலம் குறைந்த செலவுல அறுவை சிகிச்சை செய்யமுடியும் என்று அரசு டாக்டர்கள் சொல்ல, பெருமூச்சு விட்டது ஃபாத்திமாவின் குடும்பம். ஆனால், தமிழ்நாட்டிலுள்ள காப்பீடு அட்டை குளறுபடியால் அங்கும் அந்த அறுவை சிகிச்சையை செய்யமுடியாமல் தவித்துப்போனது ஃபாத்திமாவின் குடும்பம்.

அந்த குளறுபடியைக்கூட சரி செய்யாமல் கைவிரித்துவிட்டார்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசு காப்பீடு அலுவலர்கள் என குற்றம் சாட்டுகிறது ஃபாத்திமாவின் குடும்பம். என்னக் காரணம்? ரமிஷ் ஃபாத்திமாவின் கணவர் அனஸ் அஹமது, "ஒன்இன்டியாவிடம்" தெரிவித்ததாவது, “ கேரளாவுல இருக்கிற அரசு மருத்துவமனைக்கு போனா இலவசமா ஆபரேஷன் பண்ணிக்கலாம்னுதான் அங்க போனோம். கேரளாவுல முதல்வர் காப்பீடு, பிரதமர் காப்பீடு தனித் தனியா இருக்கு. அதனால, இரண்டு காப்பீடு அட்டைகளையும் வைத்து சிகிச்சை எடுத்துக்கிறாங்க. ஆனா, தமிழ்நாட்டுல முதல்வர் காப்பீடு, பிரதமர் காப்பீடு இரண்டையும் மெர்ஜ் பண்ணினதால தமிழ்நாட்டிலுள்ள காப்பீடு அட்டையை வைத்து க்ளைம் பண்ணமுடியாது, அதாவது சிகிச்சை அளிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. 17 1/2 லட்ச ரூபாய் கட்டணம் செலுத்தினாதான் அறுவை சிகிச்சை பண்ணமுடியும்னுட்டாங்க.

நான், சின்ன சின்ன எலக்ட்ரிஷியன் ஒர்க்தான் பண்ணிக்கிட்டிருந்தேன். என் மனைவிக்கு ஏற்பட்ட இந்த பிரச்சனையால நான் வேலைக்குக்கூட போக முடியல. இரண்டு குழந்தைங்களை வெச்சுக்கிட்டு ரொம்பவே கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கோம். அவ்ளோ பணத்துக்கு நான் எங்கே போவோம். அரசு மருத்துவமனையில பிரதமர் காப்பீடு அட்டை க்ளைம் பன்ற மாதிரி உதவி செய்யுங்கன்னு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள முதல்வர் காப்பீடு அலுவலர்களை சந்திச்சு மனு கொடுத்து கதறினேன்.

'மாநில அரசின் காப்பீடு வேணும்னா ஆக்டிவேட் பண்ணி தர்றோம். பிரதமர் காப்பீடு அலுவலகம் எங்க இருக்குன்னுகூட எங்களுக்கு தெரியாது. எங்களால எதுவும் பண்ணமுடியாதுன்னு சொல்லி கைவிரிச்சுட்டாங்க. தனியார் மருத்துவமனையில பணம் கட்டி என் மனைவிக்கு ஆபரேஷன் பண்ண முடியாததாலதான் அரசு மருத்துவமனைகளை நோக்கி எங்களை மாதிரி ஏழைகள் வர்றோம். நீங்களும் எதை எதையோ காரணம் காட்டி அனுப்பினா நாங்க எங்கதான் போறது?ன்னு புலம்பிட்டு திரும்பி வந்துட்டோம் என்று கண்கலங்குகிறார்.

அதற்குப்பிறகு, அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்திலுள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கும் 2024 அக்டோபர் 22 ஆம் தேதி நியூராலஜி டாக்டர்களை சந்தித்து பேசியிருக்கிறது ஃபாத்திமாவின் குடும்பம். அங்கும் கைவிடப்பட்ட நிலைதான். என்ன நடந்தது? ரமிஷ் ஃபாத்திமாவின் உயிரைக் காப்பாற்ற போராடும் மருத்துவ சமூக செயற்பாட்டாளர் குழு ஒருங்கிணைப்பாளர் முஹம்மது யூனுஸ் நம்மிடம், “இதுவரைக்கும் நீங்க சொல்ற டி.பி.எஸ் ஆபரேஷன் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டலில் பண்ணினதில்ல. அதற்கான, கட்டமைப்பு வசதிகளும் இல்ல. அறுவை சிகிச்சைக்கான எக்யூப்மெண்ட்டுகள் 13 1/2 லட்ச ரூபாய்க்கு மேல செலவாகும். நீங்க வாங்கிக் கொடுத்தா முயற்சி பண்ணி பார்க்கிறோம்னு சொல்லிட்டாங்க. இது ரொம்ப ரிஸ்க்கான ஆபரேஷன்னு டாக்டர்கள் சொல்றாங்க. அப்படிப்பட்ட, ஆபரேஷனை செய்ய, எக்ஸ்பீரியன்ஸே இல்லாத அரசு டாக்டர்கள் எப்படி செய்வாங்க? அதுவும், 13 1/2 லட்ச ரூபாய்க்கு ஃபாத்திமாவின் குடும்பம் எங்கே போகும்? அரசு ஏதாவது உதவி பண்ணினாத்தான் உயிரைக் காப்பாற்ற முடியும்னு துணை முதல்வர் உதயநிதி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரை சந்தித்து மனு கொடுக்கலாம்னு பார்த்தா யாரையுமே சந்திக்க முடியல.

வேற வழியே இல்லாம சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு போனோம். 20 லட்ச ரூபாயிலிருந்து 25 லட்ச ரூபாய்வரை செலவாகும்னு சொல்லியிருக்காங்க. அதனால் நான், சுஹைப் மீரான், முஹம்மது அப்பாஸ், ஜவ்பர் தாஹின், பைசல் ரஹ்மான், முஹம்மது பாருக் ஆகியோரைக்கொண்ட சமூக செயற்பாட்டாளர்கள் குழு அமைத்துள்ளோம். அதற்கான, நிதியுதவியை திரட்டி கடந்த 4 மாதங்களா அந்த பெண்ணோட உயிரை காப்பாற்ற போராடிக்கிட்டிருக்கோம். ஆட்சியாளரை சந்தித்து முறையிடவும் முயற்சித்து வருகிறோம். தமிழ்நாடு அரசு இதை கவனத்தில் கொண்டு ஏதாவது நிதியுதவி அளிச்சா பேருதவியா இருக்கும்?” என்று வேண்டுகோள் வைக்கிறார்.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குனர் மணியை, தொடர்புகொண்டு, நடுக்குவாதம் எனப்படும் நரம்பு மண்டல அறுவை சிகிச்சையை நமது அரசு மருத்துவமனையில் ஏழை எளிய மக்கள் இலவசமாக செய்துகொள்ளமுடியாதா? என கேட்டபோது, “நியூராலஜி டாக்டர்களிடம் ஆலோசித்துவிட்டு கூறுகிறேன் என்றவர், பலமுறை தொடர்புகொண்டபோதும் அதற்கான விளக்கத்தை அளிக்க மறுத்துவிட்டார்.

health chennai government hospital

தன்னார்வலர்கள் தங்களால் முடிந்த நிதியுதவியை செய்துகொண்டிருக்கிறார்கள். ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். ஆனால், அந்த அரசு மருத்துவமனையிலேயே ஏழைகளுக்கு சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் தனியாரை நோக்கித்தான் செல்லவேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆறு வருடங்களாக இந்த நோயால் பாதிக்கப்பட்டு போராடிவரும் தூத்துக்குடியைச் சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ரமிஷ் ஃபாத்திமாவின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு உள்ளது.

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசு மருத்துவமனைகளில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால், மருத்துவ சேவையில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக செயல்படுவதாக பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் தமிழ்நாடு முதல்வர், துணை முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலர் சுப்ரியா சாகு ஆகியோரின் கருணை கண் கொண்டு பார்ப்பார்களா?

-மனோசெளந்தர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+