விஜய்யின் தவெக மாநாட்டிற்கு போன இளைஞர் மாயம்.. சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சொன்ன தகவல்
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்த தவெக மாநாட்டில், பங்கேற்க சென்ற தனது மகனை காணவில்லை என்று அவரது பெற்றோர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு சென்ற இளைஞர் மாயமானது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற்றது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலுக்கு வருவதாக அறிவித்து இருந்தார். கடைசியாக ஹெச் வினோத் இயக்கும் படத்தில் முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும், 2026 சட்டசபை தேர்தல் தான் இலக்கு என்றும் கூறினார்.

தொடர்ந்து கட்சிக்கான கொடி, பாடலை அறிமுகம் செய்த விஜய், கட்சி கொள்கைகளை மாநாட்டின் போது அறிவித்தார். கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி நடந்த மாநாடு மிகப்பிரமாண்டமாக நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். இதில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மேகநாதன் என்பவரும் பங்கேற்று இருந்தாராம். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த புஷ்பநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு சென்ற தனது மகன் மேகநாதன் வீடு திரும்பவில்லை என மனுவில் கூறியுள்ளார்.
காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்து தர காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், விசாரணையின் நிலை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார். தொடர்ந்து வாதிட்ட அவர், மேகநாதனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.
மேலும், தாம்பரம், புதுச்சேரி சென்னை உள்ளிட்ட இடங்களில் மேகநாதனை தேடிய நிலையில் அவர் கிடைக்கவில்லை என தெரிவித்தார். இருப்பினும், அவரை தேடும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக கூறினார். இதனையடுத்து, வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications