செல்போனுக்காக இளைஞர் கழுத்து நெரித்து கொலை! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
சென்னை: சென்னையில் குடிபோதையில் செல்போனுக்காக இளைஞர் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் ரயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புளியந்தோப்பு, வஉசி நகர் 5ஆவது தெருவைச் சேர்ந்தவர் அஸ்மத் பாட்ஷா (38). இவர் கடந்த 1 ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயிலில் மதுபோதையில் பயணித்ததாக சொல்லப்படுகிறது.

இந்த ரயிலில் மெரினா கடற்கரையில் குதிரை சவாரி ஓட்டும் சுரேஷ் (38), சீனிவாசன் (52) ஆகிய இருவரும் பயணம் செய்தனர். அப்போது அஸ்மத் பாட்ஷா மதுபாட்டில்களை வைத்திருப்பதை பார்த்ததும் சுரேஷ், சீனிவாசன் ஆகியோர் அவருடன் நன்றாக பேசியுள்ளனர்.
இதையடுத்து 3 பேரும் சென்னை கடற்கரை- பூங்கா ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டது.
இதில் சுரேஷும் சீனிவாசனும் சேர்ந்து அஸ்மத் பாட்ஷாவை சரமாரியாக தாக்கி டவலால் அவருடைய கழுத்தை நெரித்து கொலை செய்தனர். இதையடுத்து அவரது செல்போனை திருடிக் கொண்டு அதை ரயில் நிலையத்திலேயே விற்றுவிட்டு அவர்கள் இருவரும் தப்பிவிட்டனர்.
தகவலறிந்து எழும்பூர் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அவர்கள் இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். சீனிவாசனை போலீஸார் தேடி வருகிறார்கள். செல்போனுக்காக இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications