சென்னை கோட்டூர்புரத்தில் இளம் பெண் தூங்கும் போது சொமேட்டோ ஊழியர் பார்த்த வேலை.. தர்ம அடி
சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் நள்ளிரவில் தனியாக வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணையும், அவரது 3 வயது குழந்தையும் செல்போனில் படம் பிடித்த சொமேட்டோ நிறுவன உணவு டெலிவரி வாலிபர் கையும் களவுமாக பொதுமக்களிடம் சிக்கினார். அவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கோட்டூர்புரத்தில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 3 வயதில் குழந்தை இருக்கிறது. நேற்றிரவு இந்த தம்பதி வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். கணவர் ஒரு அறையிலும், மனைவியும், குழந்தையும் மற்றொரு அறையிலும் தூங்கியதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் வெயில் காலம் என்பதால், இந்த தம்பதி வீட்டின் கதவை பூட்டவில்லை என்று கூறப்படுகிறது. தாழ்பாளை போட மறந்து தம்பதி உறங்கியுள்ளனர். அதிகாலை 2.30 மணியளவில் ஏதே சத்தம் கேட்பதாக பெண் பதறி எழுந்துள்ளார். சொமேட்டோ உடையுடன் இருந்த நபர், தன்னையும், குழந்தையையும் படம்பிடிப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் கத்தி கூச்சலிட்டுள்ளார.
அந்த பெண்ணின் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து சென்று என்ன ஏது என்று கேட்டு பார்த்துள்ளனர். அப்போது, அந்த வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அடையாளம் தெரியாத நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்தார்கள்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் அந்த நபரை மத்திய கைலாஷ் காந்தி மண்டபம் சாலை வழியாக துரத்திச் சென்றனர். ஆனால் அந்த சொமேட்டோ நிறுவன உணவு டெலிவரி ஊழியர், திடீரென ராஜீவ்காந்தி சாலையில் தரமணி நோக்கி சென்றார். அவரை அந்த பகுதி மக்கள் தரமணியில் மடக்கினார்கள். பின்னர் அந்நபரை கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.
இதையடுத்து துரத்திச் சென்று பிடித்த இளைஞர்கள், அந்த சொமேட்டோ நிறுவன உணவு டெலிவரி ஊழியருக்கு தர்ம அடி கொடுத்தனர். அவரை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின், இந்த சம்பவம் குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்டவர் தரமணி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பது தெரியவந்தது.
மேலும், கிருஷ்ணமூர்த்தி சொமேட்டோவில் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்ததாகவும், நள்ளிரவு நேரத்தில் உணவுப் பொருட்கள் கொடுக்கச் செல்லும்போது வீட்டில் தனியாக இருக்கும் பெண்ணை பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளது.
ஏற்கனவே, சென்னை சின்ன மலையில் நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து, அப்பகுதி மக்களிடம் தர்ம அடி வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் அவர் இன்று அதிகாலை அந்த பெண்ணின் வீட்டிற்கு வரக் காரணம் என்ன என்று விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications