7 ஆம்புலன்ஸ்.. தனித்தனி ரூட்! சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும் குவைத்தில் பலியான தமிழர்களின் உடல்!
கொச்சி: குவைத்தில் தீ விபத்தில் பலியான 7 தமிழர்களின் உடல்கள் உட்பட 31 உடல்கள் கொச்சி வந்தடைந்த நிலையில், அவர்களது உடல்கள் தனித்தனியாக ஆம்புலன்ஸ்கள் மூலம் அவரவர் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
குவைத் நாட்டின் மன்காப் பகுதியில் 6 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 6 மாடி கட்டிடம் கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த விபத்து நடந்த போது மொத்தம் 150-க்கும் அதிகமானோர் அக்கட்டிடத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர். இதில் மொத்தம் 45 இந்தியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 50-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களில் 23 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள், 7 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். எஞ்சிய 15 பேரும் கர்நாடகா, ஆந்திரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தரை தளத்தில் தங்கியிருந்த எகிப்து நாட்டை சேர்ந்த ஒருவரின் கேஸ் சிலிண்டரில் இருந்து, வாயு கசிவு ஏற்பட்டதால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வர சிறப்பு விமானம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. குவைத்துக்கு மத்திய இணை அமைச்சர் கேவி சிங் சென்று இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் 7 தமிழர்கள் உட்பட 45 இந்தியர்களின் உடல்களுடன் குவைத்தில் இருந்து இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டது. குவைத்தில் இருந்து விமானம் இன்று காலை 10.30 மணிக்கு கொச்சி வந்தடைந்தது.
கொச்சி விமான நிலையத்தில் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மாநிலத்தவரின் உடல்கள் அந்தந்த மாநில அரசுகள் சார்பில் பிரதிநிதிகள் காத்திருந்தனர். உடல்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் மஸ்தான் அஞ்சலி செலுத்தினார். பின்னர் மாநில பிரதிநிதிகளின் பொறுப்பில் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.
கொச்சியில் இருந்து தமிழ்நாடு, ஆந்திரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அந்தந்த மாநில அரசு அதிகாரிகளின் ஒருங்கிணைப்பில் உயிரிழந்தோர் உடல்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
7 தமிழர்களின் உடல்களை தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெற்றுக் கொண்டார். இதற்காக செஞ்சி மஸ்தான் கொச்சி விமான நிலையத்தில் முன்கூட்டியே சென்று காத்திருந்தார். உடல்கள் அடையாளம் காணப்பட்டு, ஆம்புலன்ஸ்களில் ஏற்றப்பட்டு, அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 8 ஆம்புலன்ஸ்கள் கொச்சியில் ரெடியாக இருந்தன. அதில் 7 ஆம்புலன்ஸ்களில் தனித்தனியாக 7 பேரின் உடல்கள் ஏற்றப்பட்டு, அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. ஒவ்வொரு ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும், அவர்கள் செல்ல வேண்டிய வழித்தடம் - ரூட் மேப் விளக்கப்பட்டு உள்ளது. உறுதுணையாக காவல்துறையினரும் செல்கின்றனர்.
இதுதொடர்பாக அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், "குவைத் தீ விபத்தில் பலியான 7 தமிழர்களின் உடல்கள், ஆவணங்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு, அவர்களின் உறவினர்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. இங்கிருந்து அவரவர் சொந்த ஊருக்கு அவர்கள் இல்லம் வரை சென்று சேர்ப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் குடும்பத்தினருக்கு அயலகத் தமிழர் நல வாரியம் மூலம் கடன் உதவி, பிள்ளைகளுக்கு கல்வி உதவிகள் என பல்வேறு உதவிகள் வழங்கப்படும்." எனத் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த 7 தமிழர்களின் விவரங்கள்:
1. கே.ராமு. 65 வயது. 2 வருடங்களாக குவைத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். ஜூன் 21ஆம் தேதி இந்தியா திரும்புவதற்காக டிக்கெட் எடுத்திருக்கிறார். தனது சொந்த ஊரான ராமநாதபுரத்திற்கு திரும்ப இருந்த இவர், தீ விபத்தில் உயிரிழந்திருக்கிறார்.
2. வீராச்சாமி மாரியப்பன். இவர், தூத்துக்குடியை சேர்ந்தவர். தூத்துக்குடி மாவட்டம், வானமுருட்டியைச் சேர்ந்தவர். இவர் குவைத்தில் 20 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி இருக்கிறார்.
3. கே.சின்னதுரை, இவர் கடலூரை சேர்ந்தவர். 42 வயதாகும் இவர் 4 வருடங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கே சென்று அங்கேயே தங்கி விடலாம் என முடிவு செய்திருக்கிறார். ஆனால், இவர் குழந்தை இறந்த பிறகு வாழ்விலேயே பிடிமானம் இல்லாமல் போனதாக கூறப்படுகிறது. அதனால், 5 மாதங்களுக்கு முன்னர் மீண்டும் குவைத்திற்கு திரும்பி உள்ளார். அங்கு தற்போது தீ விபத்தில் பலியாகியுள்ளார்.
4. கோவிந்தன் சிவசங்கர். இவர் சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர். கடந்த ஆண்டு 2 வருட ஒப்பந்தத்தின் பேரில் இவர் குவைத்திற்கு சென்றிருக்கிறார்.
5. புனாஃப் ரிச்சர்ட் ராய், இவர் தஞ்சாவூரை சேர்ந்தவர். 28 வயதாகும் இவர், என்பிடிசி நிறுவனத்தில் 2019ஆம் ஆண்டு முதல் தர ஆய்வாளராக இருந்துள்ளார்.
6. மொஹமத் ஷரீஃப், விழுப்புரத்தில் இருக்கும் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் இவர். கடந்த 12 வருடங்களாக குவைத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்திருக்கிறார்.
7. எபமேசன் ராஜு. இவர் திருச்சியை சேர்ந்தவர். 53 வயதாகும் இவர், துபாயின் என்பிடிசி நிறுவனத்தில் கனரக வாகன ஓட்டுநராக இருந்துள்ளார். இவரது உடல் தாமதமாகத்தான் கண்டறிப்பட்டது.
இவர்களின் 7 பேரின் உடல்களும் ஆம்புலன்ஸ் மூலமாக கொச்சியில் இருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications