கோவை அருகே வீட்டுமனை அங்கீகாரம் பெறுவது இவ்வளவு கஷ்டமா.. கையும் களவுமாக சிக்கிய அரசு அதிகாரிகள்
கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே குப்பனூர் ஊராட்சி மூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ பிரபாகரன் தனக்கு சொந்தமாக இருந்த 15 சென்ட் நிலத்தை தலா 5 சென்ட் வீதம் வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்ய விரும்பி உள்ளார். இதற்காக கோவை அன்னூர் குப்பனூர் ஊராட்சியைச் சேர்ந்த ஊராட்சி செயலாளர் ரங்கசாமியை அணுகியுள்ளார். ஆனால் வீட்டுமனை அங்கீகாரம் வழங்க லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஊராட்சி செயலாளர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
வீட்டு மனைகளாகப் பிரித்து விற்பனை செய்வதற்கான அங்கீகாரம் (லேஅவுட் அப்ரூவல்) பெறுவதில் லஞ்சம் கேட்கப்படுவது என்பது அடிக்கடி நடக்கும் பெரிய பிரச்சனையாக உள்ளது. பெரிய நிறுவனங்கள் கவனிக்க வேண்டியவர்களை கவனித்துவிடும் வாய்ப்பு உள்ளதால், அவர்களுக்கு சிக்கல் வருவது இல்லை.. மாறாக சிறிய அளவில் நிலத்தை பிரித்து வீட்டு மனையாக விற்பது என்பது அதிகாரிகள் மனம் வைத்தால் மட்டுமே நடக்கும் என்கிறார்கள் ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள்.

பொதுவாக லேஅவுட் அமைக்கும் போது, மனைப் பிரிப்புக்கான விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் தேவையான ஆவணங்கள் மிகவும் சிக்கலாகவும், புரிந்து கொள்ள கடினமாகவும் இருக்கும். இதில் ஏதேனும் சிறிய குறைபாடுகள் இருந்தாலும், அதைச் சுட்டிக்காட்டி லஞ்சம் கேட்க ஒரு வாய்ப்பை அதிகாரிகள் பயன்படுத்துவதாக புகார்கள் உள்ளது. அதேபால் சட்டப்பூர்வமாக அங்கீகாரம் பெற மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகிறது. எனவே இந்த தாமதத்தைத் தவிர்க்கவும், விரைவாக வேலையை முடிக்கவும், லஞ்சம் கொடுப்பது நடப்பதாகவும் புகார்கள் உள்ளது.
அதேபோல் வீட்டு மனைகளுக்கான தேவை அதிகமாக இருக்கும் நகரங்கள் மற்றும் நகரின் புறநகர்ப் பகுதிகளில் நிலத்தின் மதிப்பு மிக அதிகமாகவே இருக்கும். இதில் உள்ள லாபத்தைக் கருத்தில் கொண்டு, விரைவாக அங்கீகாரம் பெற நில உரிமையாளர்கள்/ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் லஞ்சம் கொடுக்கும் சம்பவங்களும் நடப்பதாக கூறப்படுகிறது.
ஆன்லைன் அங்கீகார விண்ணப்ப அமைப்பு இருந்தாலும், இறுதி ஒப்புதலுக்கு ஆவணங்களைச் சரிபார்க்கும் செயல்முறையில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருக்கிறது. இதனால், விண்ணப்பத்தின் நிலை என்ன, ஏன் தாமதமாகிறது என்பது விண்ணப்பதாரருக்குத் தெரிவதில்லை இதுவும் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளதாக புகார்கள் உள்ளது. இந்நிலையில் கோவையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே குப்பனூர் ஊராட்சி மூக்கனூர் பகுதியில் 45 வயதாகும் ராஜ பிரபாகரன் வசித்து வருகிறார். இவருக்கு கோவை மாவட்டம் அன்னூர் அருகே மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில் மிருதுலா கார்டன் என்ற பகுதியில் 15 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தை தலா 3 சென்ட் வீதம் 5 வீட்டுமனைகளாக பிரித்து, அதற்கு அங்கீகாரம் பெற ஊராட்சி செயலாளரான ரங்கசாமி என்பவரை அணுகியிருக்கிறார்.ஆனால் ஊராட்சி செயலாளர் ரங்கசாமி வீட்டுமனை அங்கீகாரம் வழங்க ராஜ பிரபாகரனிடம் முதற்கட்டமாக ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. எனினும் மீண்டும் நேற்று மதியம் ரூ.19 ஆயிரத்து 340 லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த ராஜ பிரபாகரன், கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். டிஎஸ்பி தலைமையிலான ராஜேஷ் தலைமையிலான போலீசார் அறிவுரையின்பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளாக ரூ.19 ஆயிரத்து 340-ஐ ஊராட்சி செயலாளர் ரங்கசாமியிடம், ராஜ பிரபாகரன் வழங்க சென்றார். அவர் ஊராட்சி அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராக பணியாற்றும் பூபதி மூலம் பணத்தை வாங்கினார்கள். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பூபதி, ரங்கசாமியை பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் கோவை அன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications