தவறாகப் பேசிய பால்காரர்.. மாமன் மகனுடன் சேர்ந்து கீர்த்தனா செய்த காரியம்.. கோவையை பதறவைத்த கொலை
கோவை: கோவை மாவட்டம், காரமடையில் தன்னைப் பற்றி ஊர் முழுவதும் தவறாகப் பேசிய பால்காரரை, தனது மாமன் மகனுடன் சேர்ந்து இரவோடு இரவாக பெண் ஆசிரியர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பான ஆசிரியர், அவரது மாமன் மகன், கூலி தொழிலாளி என 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம், காரமடை பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய். 23 வயதான சஞ்சய் அப்பகுதியில் பால் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு பெற்றோர் மற்றும் ஒரு சகோதரி உள்ளனர். தனது வீடு சிறியதாக இருப்பதால் சஞ்சய் அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். தினசரி பால் விற்கும் வேலையை முடித்துவிட்டு அந்த வாடகை வீட்டிற்குச் சென்று தூங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வழக்கம்போல சஞ்சய் வாடகை வீட்டிற்கு தூங்குவதற்காகச் சென்றுள்ளார். ஆனால், அவர் காலையில் நீண்ட நேரமாகியும் எழுந்திருக்காமல் இருந்துள்ளார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, சஞ்சய் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் சஞ்சயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசராணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காரமடை பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் கீர்த்தனா என்பவருக்கும், சஞ்சய்க்கும் நீண்ட நாட்களாக பகை இருந்துள்ளது. இதன் காரணமாக கீர்த்தனா குறித்து சஞ்சய் ஊர் முழுவதும் தவறான தகவல்களைப் பரப்பி வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கீர்த்தனா இதுகுறித்து தன் உறவினர் கமலக்கண்ணன் (வயது 20) என்பவரிடம் கூறியுள்ளார்.
ஆட்டோ டிரைவரான கமலக்கண்ணன், தனது நண்பரும் கூலித் தொழிலாளியுமான நாகராஜ் (வயது 19) என்பவரை அழைத்துக் கொண்டு சஞ்சயை சந்திக்க சென்றுள்ளார். அப்போது இருவரும் சஞ்சயை சரமாரியாக வெட்டியுள்ளனர். இந்த சம்பவத்தின்போது ஆட்கள் யாராவது வருகின்றனரா என்பதை கீர்த்தனா கண்காணித்துள்ளார்.
சஞ்சய்க்கு உடலில் 12 இடங்களில் பலத்த வெட்டுப்பட்டுள்ள நிலையில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் கமலக்கண்ணன், நாகராஜ், கீர்த்தனா ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications