வலையில் வந்த 50000 மீன்கள்! குலுங்கிய கொங்கு! டாப் கட்சிகளுக்கு ஸ்டாலின் செக்! வாரி சுருட்டிய திமுக
கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் இன்று திமுகவில் மாற்று கட்சியினர் பலர் இணைய உள்ளனர். இந்த நிகழ்வு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வயிற்றில் புளியை கரைத்து உள்ளது. ஒரே நாளில் பல முக்கிய நிர்வாகிகள் திமுக பக்கம் செல்ல உள்ளனர்.
கொங்கு மண்டலம் கடந்த சட்டசபை தேர்தலின் போது கூட அதிமுகவின் கோட்டையாகவே இருந்தது. ஆனால் அதன்பின் திமுக ஆட்சிக்கு வந்ததும் கொங்கு மண்டலம் மீது தீவிரமாக கவனம் செலுத்த தொடங்கியது.
முக்கியமாக அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமித்து கட்சியை வளர்க்க முடிவு செய்தது. ஏற்கனவே சேலத்தை - கே. என் நேரு திருச்சியோடு சேர்த்து கவனித்து வந்ததால் சேலத்திலும் திமுக வசம் செல்ல தொடங்கியது.
கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்த மாற்றங்கள் வெளிப்படையாக தெரிந்தன. கோவை, சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை மொத்தமாக திமுகதான் வாரி சுருட்டியது.

என்ன நடந்தது?
கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாகவே ஏகப்பட்ட நிர்வாகிகள் வரிசையாக திமுக பக்கம் வந்தனர். கோவையில் பல்வேறு நிர்வாகிகள் வார்டு வாரியாக செந்தில் பாலாஜி மூலம் திமுகவிற்கு இழுக்கப்பட்டனர். இது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக பலர் இப்படி திமுக பக்கம் தாவியதாக அதிமுக அதன் கோட்டையிலேயே வலிமை இழந்தது. கீழ் மட்ட பணிகளை பார்க்க ஆள் இல்லாமல் போனது.

செந்தில் பாலாஜி
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் வெற்றிபெறுவதற்காக தீவிரமான பணிகளை திமுக செய்து வருகிறது. 2024ல் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் 2 வருடத்திற்கும் குறைவாகவே உள்ளது. இதற்கான தீவிரமாக பணிகளை செய்து வரும் திமுகவில் இன்று 50 ஆயிரம் பேர் இணைய உள்ளனர். மாலை 5 மணிக்கு பொள்ளாச்சியில் ஆச்சிபட்டி திடலில் இதற்கான விழா நடக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்று கட்சியினர் இந்த விழாவில் இணைய உள்ளனர்.

மாற்று கட்சியினர் யார்
இதில் முக்கியமான நபராக பார்க்கப்படுபவர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி. கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் எம்எல்ஏவாக இவர் இருந்தார். 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் வென்று இவர் எம்எல்ஏ ஆனார். இரண்டு முறையும் ஜெயலலிதா மூலம் நேரடியாக இவர் தேர்வு செய்யப்பட்டவர். அதன்பின் அதிமுக உடைந்த போது ஓபிஎஸ் ஆதரவாளர் ஆனார். பின்னர் ஓபிஎஸ் மீதும் இவர் அதிருப்தி அடைய.. இபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

விமர்சனம்
சமீபத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் மீது விமர்சனம் வைத்த ஆறுக்குட்டி, அதிமுக இப்பொழுது ஜாதி கட்சிக்காக மாறி வருகிறது. ஜெயலலிதா இருந்தால் இப்படி ஆயிருக்குமா. ஒபிஎஸ் - ஈபிஎஸ் இருவருமே ஒதுங்கி கொள்ள வேண்டும்.. மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். நீதான் முதல்வர் என்று கைகாட்டி பதவி கொடுத்தவர் சசிகலா. அவரைக் கேவலமாக பேசலாமா.இவர்கள் நன்றி மறந்தவர்கள். இவர்கள் இருவரும் கட்சியில் இருக்க கூடாது. எதோ..ஒபிஎஸ் - ஈபிஎஸ் இரண்டு பேருமே ஒரு விபத்தின் காரணமாக பதவிக்கு வந்துவிட்டார்கள். இப்போது இரண்டு பேரும் சண்டை போட்டு கொள்கின்றனர். இப்படி சண்டைபோட்டு தான், ஒபிஎஸ் - ஈபிஎஸ் மற்றும் வேலுமணி இருக்கும் வார்டுகளிலே , திமுக கைப்பற்றியது. இவர்கள் சண்டை போடுகிறார்கள். இதன் மூலம் கட்சியை அழிக்க பார்க்கிறார்கள், என்று கூறினார்.

வேறு யார்
இது போக தேமுதிக முன்னாள் எம்எல்ஏ தினகரன் திமுகவில் இன்று இணைய உள்ளார். இது போக அதிமுக நகரமன்ற வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி கவுன்சிலர்கள், நகர் செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் என்று அதிமுகவை சேர்ந்த பெரும்பாலான நபர்கள் திமுகவில் இணைய உள்ளனர். தேமுதிக, பாமக, பாஜக உள்ளிட்ட சில கட்சிகளை சேர்ந்தவர்களும் இணைய உள்ளனர். கவுண்டர்கள், நாயுடுகள், வன்னியர்கள், தலித் பிரிவினர்கள் அதிகமாக திமுகவில் இன்று இணைவார்கள் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
