சாக்லேட் பாக்கெட்டில் கஞ்சா.. பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் போலீசிடம் தொக்காக மாட்டிய இளைஞர்!
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் சாக்லேட் பாக்கெட்டுகளை வைத்திருந்த இளைஞரை சோதனை செய்ததில் 6 கிலோ கஞ்சா சிக்கியுள்ளது.
பொள்ளாச்சி ரயில் நிலையத்திற்கு சிலர் கஞ்சா கடத்தி வருவதாக பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் ரயில் நிலையத்தை ஆய்வு செய்தனர்.

அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றிக் கொண்டிருந்த நபர் ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் தேனி மாவட்டம் போடியை சேர்ந்த திவாகர் என்பது தெரியவந்தது.
மேலும், அவர் கையில் வைத்திருந்த பை குறித்து போலீசார் கேட்ட போது, அதில் சாக்லேட் வைத்திருப்பதாக திவாகர் கூறியுள்ளார். அதனை காட்டுமாறு கூறியுள்ளனர். அதில் KitKit என்ற பெயரிலான சாக்லேட் பாக்கெட்டுகள் இருந்துள்ளன. ஆனால், பையில் சந்தேகத்திற்கிடமான வகையில் டேப் ஒட்டப்பட்டிருந்ததால் போலீசார் சோதனை செய்தனர். அப்போது சாக்லேட்டை பைக்குள் கஞ்சா நிரம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து போலீசார் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் தேனியில் இருந்து கஞ்சாவை வாங்கி கொண்டு, மதுரைக்கு வந்து, அங்கிருந்து பொள்ளாச்சிக்கு ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரிடம் இருந்த ஆறு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனாகுமாரி கூறுகையில், "பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம் பகுதிகளில் போலீசார் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி ரயில் நிலையப் பகுதியில் சுற்றித்திரிந்த நபரிடம் சோதனை மேற்கொண்டதில் சாக்லேட் கவருக்குள் நூதன முறையில் கஞ்சா கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்தார்.
தடை செய்யப்பட்ட லாட்டரி, கஞ்சா, குட்கா, போதை வஸ்துகளை தடுக்கும் விதமாக பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய பகுதிக்குட்பட்ட சோதனைச் சாவடிகளில் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி ஏ.எஸ்.பி சிருஷ்டி சிங் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்" என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications