சொத்தை என் பேர்ல எழுதிவைக்க மாட்டியா.. அப்போ நீ இருக்கவே வேண்டாம்.. அப்பாவை தீர்த்துக் கட்டிய மகன்
கோவை: சொத்துக்காக ஆசைப்பட்டு தன்னைப் பெற்ற தந்தையையே துணியால் கழுத்தை இறுக்கிக் கொன்றுவிட்டு நாடகமாடிய மகனை கோவை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், அனந்தபுரம் செம்மாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (52). இவரது தந்தை சென்னிமலை கவுண்டர் (96). சென்னிமலை கவுண்டருக்கு வேலுச்சாமி, நடராஜன், ஆறுச்சாமி என்கிற மூன்று மகன்கள் உள்ளனர். சென்னிமலை கவுண்டருக்கு அனந்தபுரத்தில் சொந்தமாக விவசாய பூமிகளும், கட்டடங்களும் என 3.5 ஏக்கர் இருந்துள்ளன.

இந்நிலையில், இந்த சொத்துகள் தொடர்பாக நடராஜன் மற்றும் ஆறுச்சாமி ஆகியோருக்கு சொத்துப் பிரச்சனை இருந்துள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னிமலை கவுண்டர் சொத்துக்களை அண்ணன் வேலுச்சாமிக்கும், தம்பி நடராஜனுக்கும் எழுதிக் கொடுத்து விடுவார் என்ற காரணத்தினால் ஆறுச்சாமி என்பவர் தனது தந்தையாரை கடந்த இரண்டு வருடங்களாக அவரது பராமரிப்பில் வைத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே செப்டம்பர் 25 ஆம் தேதி சென்னிமலை கவுண்டர் உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து, தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறி வேலுச்சாமி கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில், கருமத்தம்பட்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூர் இஎஸ்ஐ அரசு மருத்துவக் கல்லூரி அனுப்பி வைத்துள்ளனர்.
பிரேதப் பரிசோதனை செய்ததில், இறந்துபோன சென்னிமலை கவுண்டரின் கழுத்தில் துணியால் இருக்கிய காயம் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சென்னிமலைக் கவுண்டரின் சடலம் மகன் வேலுச்சாமியிடம் போலீஸாரால் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அவரது குல வழக்கப்படி அடக்கம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, செம்மாண்டம் பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகில் வைத்து ஆறுச்சாமியை கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் தனது குழுவினருடன் பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில், தனது குடும்ப சொத்துக்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்குகளில் தனது அண்ணன்களான வேலுச்சாமி, நடராஜன் ஆகியோருக்கு சாதகமாக நீதிமன்றத்தில் எனது தந்தை சாட்சி அளித்து விடுவார் என்ற காரணத்தினால் செப்டம்பர் 25 ஆம் தேதி வேஷ்டியால் கழுத்தில் இறுக்கி கொலை செய்து விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து, ஆறுச்சாமியை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அக்டோபர் 10 ஆம் தேதி வரை ஆறுச்சாமியை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கோவை மத்திய சிறையில் ஆறுச்சாமியை அடைத்தனர். இதுதொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். சொத்துக்காக தந்தையையே மகன் துணியால் கழுத்தை நெரித்துள்ள சம்பவம் கோவை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications