கோவையில் நகைக்கடையில் நகைகள், ஆவணங்கள் மாயம்.. ட்விஸ்ட் தந்த தங்கை கணவர்.. பாய்ந்த வழக்கு
கோவை: கோவையில் உள்ள நகைக்கடையில் நகைகள் மற்றும் ஆவணங்கள் மாயமான நிலையில், அதை உறவினர் தான் திருடினார் என்று தெரிய வரவே, கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை டாடாபாத் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் ( 51). இவர் கோவை கிராஸ்கட் ரோடு பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவரது தந்தை ராமதாஸ் கொரோனாவால் இறந்தார். அப்போது அவர் கடையை திறக்கவில்லை.

இந்த நிலையில் கடையின் வாடிக்கையாளர் தாலி செயின் அவசரமாக தேவைப்பட்டதால் பாலமுருகனை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அப்போது பாலமுருகன் தனது தங்கையின் கணவர் சிவக்குமாரை அழைத்து வாடிக்கையாளருக்கு அவசரமாக தாலிக் கொடி தேவைப்படுவதால் கடையின் சாவியை கொடுத்து தாலிக் கொடியை மட்டும் எடுத்துக் கொடுக்குமாறு கூறினாராம்.
இதையடுத்து பாலமுருகனின் தங்கை கணவர் சிவக்குமார் கடையை திறந்து தாலிக் கொடியை கொடுத்தாரம். பின்னர் கடையில் இருந்த ஏராளமான நகைகள், பாலமுருகன் தந்தையின் பெயரில் உள்ள முதலீட்டு பத்திரங்கள், முக்கிய ஆவணங்களை எடுத்துக் கொண்டாராம்.
அப்போது கடை ஊழியர் சதீஷ், பாலமுருகனின் உறவினர் ஜெய்சங்கர் ஆகிய இருவரும் சிவக்குமாரிடம் பொருட்களை எல்லாம் ஏன் எடுக்கிறீர்கள் என்று கேட்டாராம். அதற்கு சிவக்குமார் நான் தர்மபுரியில் வசிக்கிறேன் என்னிடம் பல ரவுடிகள் இருக்கிறார்கள் என்று மிரட்டினாராம். இதனால் பயந்துபோன சதீஷ் மற்றும் உறவினர் ஜெய்சங்கர் பாலமுருகனிடம் இதனை தெரிவிக்கவில்லையாம்.
இந்நிலையில் அண்மையில் நகை கடை ஊழியரும், ஜெய்சங்கரும் ஏற்கனவே கடையில் நடந்த அனைத்து சம்பவத்தையும் நகை கடை உரிமையாளரான பாலமுருகனிடம் போட்டுடைத்துள்ளார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த பாலமுருகன் தனது தங்கை கணவர் சிவக்குமார் மீது கோவை காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் பாலமுருகனின் தங்கை கணவர் சிவகுமார் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். நகைக்கடையில் உரிமையாளரின் தங்கை கணவரே நகைகளை எடுத்ததாக வந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications