கோவை பாரதியார் பல்கலை. யிலேயே பா.ஜ.க.வில் இணைந்த ஓய்வு பெற்ற பதிவாளர் முருகன்- வெடித்தது சர்ச்சை
கோவை: கோவை பாரதியார் பல்கலைகழக பதிவாளர் முருகன், பணி ஓய்வு பெற்றவுடன் பல்கலை கழகத்தில் துணைவேந்தர் அறையிலேயே பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும், விலங்கியல் துறை தலைவராகவும் இருந்தவர் முருகன். இவர் கடந்த 30ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

பல்கலை.யிலேயே பாஜகவில் ஐக்கியம்
பணி ஓய்வு பெற்றதற்கு மறுநாள் பல்கலைகழகத்திற்கு தனது பொருட்களை எடுக்க வந்த அவர், பாரதிய ஜனதா கட்சியில் மிஸ்டு கால் மூலம் உறுப்பினராக இணைந்தார். துணைவேந்தர் அறையின் அருகில் விருந்தினர்கள் காத்திருக்கும் அறையில் வைத்து அன்றைய தினமே, பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் டாக்டர் ப்ரீத்தி லட்சுமி மற்றும் மாநில ஊடகப் பிரிவு செயலாளர் சபரி கிரீஸ் ஆகியோர் பாரதிய ஜனதாவில் முருகன் இணைந்தற்கான அடையாள அட்டையையும் வழங்கினர்.

ஃபேஸ்புக்கில் படம் வெளியீடு
ஓய்வு பெற்ற பதிவாளர் முருகன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததை தனது முகநூல் பக்கத்தில் அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் பிரீத்தி லட்சுமி வெளியிட்டு இருந்தார். பல்கலைகழக வளாகத்தில் உள்ள அறையில் ஓய்வு பெற்ற பதிவாளர் முருகன் பாரதிய ஜனதா கட்சியில் இணைக்கப்பட்ட விவகாரம் சர்ச்சை கிளப்பியுள்ளது.

பல்கலை வளாகத்தில் பாஜகவில் ஆட்சேர்ப்பு
இதுகுறித்து பா.ஜ.க மாநில இளைஞரணி செயலாளர் டாக்டர் ப்ரீத்தி லட்சுமியிடம் கேட்ட போது, பல்கலை கழகத்தில் வேறு ஒருவரை பார்ப்பதற்காக சென்ற போது, பதிவாளர் முருகனை பார்த்தாகவும், அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார் என்பதால் அவருக்கு கட்சியின் அடையாள அட்டையை கொடுத்ததாகவும் விளக்கம் அளித்தார்.

3 நாட்களிலேயே பாஜகவில் இருந்து விலகல்
இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த ஓய்வு பெற்ற பதிவாளர் முருகன், தான் கட்சி உறுப்பினர் அடையாள அட்டையை்த் திரும்ப கொடுத்துவிட்டதாவும் கட்சியில் இருந்தும் விலகிவிட்டதாகவும் தெரிவித்த அவர், அவற்கான மெயிலும் அனுப்பி விட்டதாக கூறினார். இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை எனவும் எதேர்ச்சையாக பேசிக் கொண்டிருக்கும்போது நொடி பொழுதில் இது நடந்துவிட்டது எனவும் அவர் தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த பாரதியார் பல்கலைகழக ஓய்வு பெற்ற பதிவாளர் முருகன், கட்சியில் சேர்ந்து 3 நாட்களிலேயே வெளியேறியிருப்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications