கோவை சிவானந்தா காலனியில் பஸ் சிக்கியது நியாபகம் இருக்கா?.. புதுசா வரப்போகுது சூப்பர் திட்டம்
கோவை: கோவை முழுவதும் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சிவானந்தா காலனி ரயில்வே மேம்பாலத்துக்கு கீழ் இரண்டு பேருந்துகள் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, அவிநாசி மற்றும் சிவானந்தா காலனி ரயில்வே சுரங்கப்பாதைகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் மழை வெளுத்துக் கட்டியது. இதனால், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் மழை நீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்துக் கட்டியது. கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை கோவை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. வீடுகளிலும் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
பல்வேறு பிரதான சாலைகளில் மழை நீர் ஆறு போல ஓடியது. அவிநாசி மேம்பாலத்தின் கீழ் உள்ள சுரங்கப் பாதை, சாய்பாபாகாலனி - சிவானந்தா காலனி வழித்தடத்தில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் இந்த முறை எதிர்பார்க்காத அளவுக்கு மழைநீர் தேங்கியதால் பொதுமக்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியது. எப்போது மழை பெய்தாலும் அங்கு அதிகளவு தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு சிக்கலை ஏற்படுத்தும்.
இந்த முறை சிவானந்தா காலனி பகுதியில் மழை வெள்ளத்தில் பாதியளவுக்கு பேருந்து ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை மூழ்கிய சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியது. தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று பயணிகளையும், பேருந்தையும் பத்திரமாக மீட்டனர். அதற்கு அடுத்த நாளான திங்கள் கிழமை, அதே பகுதியில் ஒரு அரசுப் பேருந்து சிக்கிவிட்டது. அதையும் தீயணைப்புத் துறையினர் மிகவும் சிரமப்பட்டு மீட்டனர். மழை பெய்தாலே அந்த வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் வாகன ஓட்டிகள் மழை வரும் போது சிவானந்தாகாலனி ரயில்வே மேம்பாலத்துக்கு கீழ் தண்ணீரின் அளவை அறிந்து கொள்ளும் வகையில் பச்சை மஞ்சள் சிவப்பு வண்ணத்தில் இரண்டு புறமும் கம்பம் நட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, அவிநாசி மேம்பாலத்தின் கீழ் மழை நீர் தேங்குவதைத் தடுக்கும் வகையில் அவிநாசி சாலை மேம்பாலம் அருகில் சுமார் 30 மீட்டர் நீளத்துக்கு வடிகாலுடன் கூடிய ரெடிமேடு பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தப் பாலம் அமைப்பதன் மூலம் நிமிடத்திற்கு 5 லட்சம் லிட்டர் மழைநீரை கையாளக் கூடிய வகையிலான கட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளது. அதேபோல, சிவானந்தா காலநி ரயில்வே மேம்பாலத்திலும் சுமார் 18 மீட்டர் நீளத்துடன் கூடிய ரெடிமேடு பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நீண்டகாலப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications