கோவைக்குன்னே வருவீங்களாயா!.. இந்தா வந்துருச்சுல புதுவித மோசடி.. சிங்கப்பூரில் வேலை என்று கூறி கல்தா
கோவை: கோவை மாவட்டம், சின்னியம்பாளையம் பகுதியில் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் தலா ஒரு லட்சம் ரூபாய் பெற்று தனியார் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈமு கோழி மோசடி, இருடியம் மோசடி, மண்ணுளிப் பாம்பு மோசடி, விளம்பரம் பார்த்தால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம், முதலீடு மோசடி, இரட்டிப்பு லாபம் மோசடி, வி3 மோசடி, டிஜிட்டல் அரெஸ்ட், விஜிலென்ஸ் ஆபிஸர், டெல்லி கிரைம் பிரேஞ்ச் ஆபிஸர் மோசடி, டிஜிட்டல் அரெஸ் என கோவையில் சமீபகாலமாக மோசடி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கூட கோவையில் உள்ள தொழிலதிபர் உதவிகேட்பது போல, பிரபரல ஆர்ஜேவான மிர்ச்சி செந்திலிடம் 15 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது புதுவித மோசடியாக கோவை மாவட்டம், சின்னியம்பாளையம் பகுதியில் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் தலா ஒரு லட்சம் ரூபாய் பெற்று தனியார் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்தவர் பாரதிராஜா. இவர் கோவை, சின்னியம்பாளையம் பகுதியில் இன்பினிட்டி டிராவல்ஸ் அண்ட் அசோசியேட்ஸ் என்ற பெயரில் அலுவலகம் அமைத்து சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ஒரு சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தி உள்ளார். வெளிநாட்டு வேலைக்குச் செல்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த இளைஞர்களும் அந்த அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.
இதற்கிடையே பாரதிராஜா அந்த அலுவலகத்தில் ஒரு இளம் பெண்ணை 15 ரூபாய் சம்பளத்திற்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பணியமர்த்தியுள்ளார். தொடர்பு கொண்ட நபர்களுக்கு நேர்காணலில் பங்கேற்குமாறு குறிப்பிட்ட தேதியை கொடுத்துள்ளார். அந்த தேதியில் நேர்காணலுக்கு வந்தவர்களை வாட்சப் மூலம் சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தின் முதன்மை அதிகாரி ஒருவர் நேர்காணல் செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ஏப்ரல் 10 ஆம் தேதி காலை 6 மணி முதல் 7 மணி வரை, 7 மணி முதல் 8 மணி வரை என இரண்டு பிரிவாக பணி ஆணை வழங்கப்படும் என்றும், அன்றைய தினம் ஒரு லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். சிங்கப்பூர் நிறுவனத்தில் பணிக்கு சேர்வதற்காக விமான பயண கட்டணம் மற்றும் சேவை கட்டணம் உட்பட 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றும் அதில் ஒரு லட்சம் ரூபாயை மட்டும் இன்றைய தினம் உடனடியாக செலுத்தி பாஸ்போர்ட்டை வழங்குமாறு பாரதிராஜா கூறியுள்ளார்.
இதனை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று காலை அந்த அலுவலகத்திற்கு வந்து தலா ஒரு லட்சம் ரூபாயை வழங்கி உள்ளனர். அவசர அவசரமாக அந்த பணத்தை வாங்கி வைத்துக் கொண்ட பாரதிராஜா, அதில் பாதி பணத்தை தனது நண்பர் ஒருவரிடம் வழங்கி அங்கிருந்து கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, பணி ஆணை பெற வந்தவர்கள் அனைவருக்கும் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் உணவு ஏற்பாடு செய்து அவர்களை அங்கு அனுப்பியுள்ளனர். பணம் கொடுத்து பணி ஆணை பெற்ற இளைஞர்கள் தங்களது நிறுவனம் சிங்கப்பூரில் எங்கு அமைந்துள்ளது என கூகுளில் தேடியுள்ளனர். அப்போது அங்கு குறிப்பிட்ட பெயரில் எந்த ஒரு நிறுவனமும் இல்லாததும், அவர்கள் வழங்கிய பணி ஆணையில் பல்வேறு தவறுகள் இருந்ததும் தெரியவந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த சிலர் மீண்டும் அலுவலகத்திற்கு வந்து விசாரணையை துவங்கவே துரிதகதியில் ஒவ்வொருவரிடமும் பணத்தை வசூல் செய்த பாரதிராஜா அங்கிருந்து வெளியேற முற்பட்டுள்ளார். அப்போது, சிலர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் கந்தசாமி தலைமையிலான போலீசார் அங்கு நடத்திய விசாரணையில் பாரதிராஜா இளைஞர்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
மேலும், தற்போது வரை சுமார் 68 பேரிடம் தலா ஒரு லட்சம் ரூபாய் பெற்று இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அலுவலகத்தில் இருந்த பாரதிராஜா மற்றும் ஒரு பெண் ஊழியர் ஆகியோரை காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றதுடன் அங்கிருந்த ஆவணங்கள் மற்றும் கணினி உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்து சென்றனர்.
பாரதிராஜாவிடம் இருந்த ஆறு லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை கைப்பற்றிய போலீசார் மீதமுள்ள பணம் யாரிடம் கொடுக்கப்பட்டது அவர் எங்கு சென்றார் என்பது தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தங்கள் பெற்றோருடன் அந்த அலுவலகம் முன்பாக நீண்ட நேரமாக காத்திருந்ததையடுத்து காவல் துறையினர் கைது செய்யப்பட்ட பாரதிராஜாவிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து தருவதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications