இத்தனை ஆண்டுகள் பாஜகவில் இருந்தும்.. மாநில தலைவர் சான்ஸ் ‘மிஸ்’? உடைத்துப் பேசிய வானதி சீனிவாசன்!
கோவை: பாஜக மாநில தலைவர் பதவிக்கான ரேஸில் வானதி சீனிவாசனும் இருப்பதாகச் சொல்லப்பட்டது. இந்நிலையில், பாஜகவின் புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில தலைவர் பதவி தவறி விட்டதா? என்ற கேள்விக்கு வானதி சீனிவாசன் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வானதி சீனிவாசன், "நயினார் நாகேந்திரன் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக பதவியேற்று 24 மணி நேரம்தான் ஆகிறது. மாநிலத் தலைவராக அண்ணாமலை சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். தேர்தல் அரசியல், கட்சி பணி என அனைத்திலும் தனக்கென ஒரு முத்திரை பதித்து செயல்பட்டு இருக்கிறார்.

பாஜக மாநிலத் தலைவர்
மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நயினார் நாகேந்திரன், அதிமுக ஆட்சியில் அமைச்சராகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும் சிறப்பான பங்களிப்பை கொடுத்தவர். பாஜக விரிவுபடுத்தப்படும்போது, கட்சியில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் இணைவதும், அவர்களுக்கு முக்கியமான பொறுப்பு வழங்கி அவர்களது செயல்பாட்டை பார்ப்பதும் தமிழகத்தில் மட்டுமல்ல பல்வேறு மாநிலங்களிலும் நடைபெறுகிறது.
நயினார் நகேந்திரன் தலைமை புதிய நபர்களை கட்சிக்குள் கொண்டு வரும். அவரது செயல்பாட்டின் மூலம் புதிய விஷயங்கள் கட்சிக்கு கிடைக்கும். கட்சியின் வளர்ச்சிக்காக மாநில தலைவராக அவர் பொறுப்பேற்று இருப்பது நல்ல விஷயமாக பார்க்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
மிஸ் ஆன சான்ஸ்?
அதைத் தொடர்ந்து, நீங்கள் மாணவப் பருவத்தில் இருந்து கட்சியில் இருக்கிறீர்கள், ஆனால் நயினார் நாகேந்திரன் கட்சிக்கு வந்து 8 ஆண்டுகளிலும், அண்ணாமலை கட்சிக்கு வந்து 2 ஆண்டுகளிலும் மாநில தலைவராக ஆக்கப்பட்டுவிட்டார்களே? பாஜக மாநில தலைவர் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்காமல் தவறி விட்டதா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், "இந்தி தெரியாத ஒரு பெண்மணியான என்னை தேசிய மகளிர் அணி தலைவராக்கி இருக்கின்றனர். மத்திய தேர்தல் குழுவிலும் எனக்கு இடம் கொடுத்து இருக்கின்றனர். அது பெரிய பொறுப்பு இல்லையா?
இதுவரை இந்த கட்சியில் எந்த பொறுப்பு வேண்டும் என்று நான் கேட்டதே இல்லை. கட்சி பணி செய்வோம், எந்த நேரத்தில் எந்த பொறுப்பு கொடுத்தால் சரியாக இருக்கும் என்று கட்சி நினைக்கிறதோ, அந்த பொறுப்பை கொடுக்கும். பல்வேறு விஷயங்களை மனதில் வைத்து கட்சி பொறுப்புகள் கொடுக்கப்படும். அதனால் வாய்ப்புகளை தவற விட்டு விட்டோம் என்றில்லை. இதை விட வேறு வாய்ப்புகளை கட்சி கொடுத்து இருக்கிறது. எனக்கு எந்த ஏமாற்றமும் கிடையாது. என்னை எம்.எல்.ஏவாகவும் ஆக்கி இருக்கிறது. எங்களை பொறுத்தவரையில் தமிழகத்தில் பா.ஜ.க வளர வேண்டும் என்பதுதான்" எனத் தெரிவித்தார்.
நேரலையில் என் பேச்சு கட்
மேலும், கூட்டணி ஆட்சி அமைப்போம் என அமித்ஷா சொல்கிறார், ஆனால் எடப்பாடி பழனிசாமி இதுவரை அதுபற்றி எதுவும் சொல்லவில்லையே என்ற கேள்விக்கு, "தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கி இருக்கிறது. முதலில் இந்த கூட்டணியின் வேலை 2026 தேர்தலில் ஜெயித்து ஆட்சி அமைப்பதுதான். கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து எங்கள் தலைவர்கள் முடிவு செய்வார்கள்" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய வானதி சீனிவாசன், "தமிழக சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தை நேரலை ஒளிபரப்பு என்கின்றனர். நான் பேசும் போது மட்டும் செய்வதில்லை. நான் பேசிய காட்சிகளை கேட்டால் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். அந்த விஷுவல் எடிட்டருக்கு ஆஸ்கர் கொடுக்க வேண்டும். இன்னும் ஆறு மாதத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் எத்தனை கட்சிகள் சேரப் போகிறது என்பதை பொறுத்து இருந்து பாருங்கள்" எனத் தெரிவித்தார்.
பாஜக மாநில தலைவராக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வந்த அண்ணாமலை மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மாநில தலைவர் பதவிக்கான ரேஸில் இருப்பதாக சொல்லப்பட்ட வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications