அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர்
கோயம்புத்தூர்: கொங்கு மண்டலத்தில், அவிநாசி தொகுதி மீது பாஜகவுக்கு நீண்ட காலமாக ஒரு கண் இருந்தது. இந்நிலையில், இந்த முறை அதிமுக இந்த தொகுதியை பாஜகவுக்கு விட்டுக்கொடுத்திருக்கிறது. இதன் காரணமாக, அதிமுகவின் சீனியர் தனபால் ரொம்ப அப்செட்டில் இருக்கிறாராம்.
அவிநாசி என்பது அதிமுகவின் கோட்டை 1980ம் ஆண்டு தொடங்கி, 2021 வரை, இடையில் ஒரு தேர்தலை தவிர்த்து, மற்ற அனைத்து தேர்தல்களிலும் அதிமுக இந்த தொகுதியில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது. இப்படி இருக்கையில் இந்த தொகுதியை பாஜகவுக்கு விட்டுக்கொடுத்திருப்பது, தனபால் இடையே மட்டுமல்லாது மொத்த அதிமுகவினரிடையேயும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அவிநாசி தொகுதி
அவிநாசி தனி தொகுதி ஆகும். இங்கு கடந்த 2 தேர்தல்களிலும், முன்னாள் சபாநாயகர் தனபால் வெற்றி பெற்றிருக்கிறார். குறிப்பாக கடந்த தேர்தலில் சுமார் 50,000 வாக்குகளுக்கும் மேல் பெற்று வெற்றி பெற்றார். இப்படியான லட்டு தொகுதிதான் தற்போது பாஜகவுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டிருக்கிறது. இது வெறும் தனபாலின வெற்றி மட்டுமல்ல, கொங்கு மண்டலத்தில் அதிமுக இன்னும் வெறித்தனமாக செல்வாக்குடன் இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரம்.
ஏன் பாஜகவுக்கு கை மாறியது?
அவிநாசி (தனி) தொகுதி, நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. எல். முருகன் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரியில் போட்டியிட்டார். அங்கு அவர் வெற்றி பெறாவிட்டாலும், அவிநாசி சட்டமன்றப் பகுதியில் பாஜகவிற்கு நல்ல வாக்குகள் கிடைத்தன. தேர்தல் ஆணையத்தின் 2024 புள்ளிவிவரப்படி, நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில், அவிநாசி பகுதியில் பாஜக கூட்டணி வலுவான வாக்குகளைப் பெற்றது.
எல். முருகனுக்காக
எனவே, எல். முருகன் சட்டமன்றத்திற்குச் செல்ல இது ஒரு ஈஸியான வழி என்று பாஜக மேலிடம் கருதியது. எனவே பாஜக தலைமை, இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கியது. இந்த பின்னணியில்தான் அவிநாசி தொகுதி கைமாறியிருக்கிறது.
தனபாலுக்கு வாய்ப்பு மறுப்பு
தனபால் என்னதான் கடந்த 2 தேர்தலில் வெற்றிப்பெற்றிருந்தாலும், அவருக்கு தற்போது 74 வயது ஆவதால், இளைஞர்களுக்கு வாய்ப்ப அளிக்கப்பட வேண்டும் என்ற காரணத்தைக் காட்டி, அந்தத் தொகுதியை கூட்டணிக் கட்சியான பாஜகவிற்கு விட்டுக்கொடுக்கப்பட்டிக்கிறது. இது ஒருபுறம் தியாகம் என்று சொல்லப்பட்டாலும், மறுபுறம் பாஜகவின் தேசியத் தலைமையுடன் இணக்கமான உறவைப் பேணவே எடப்பாடியார் இந்த ரிஸ்க் எடுத்ததாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மறுபுறம் எடப்பாடியின் இந்த முடிவால், அதிமுக மேற்கு மண்டலத்தில் கடும் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. என்னதான் கூட்டணி தர்மமாக இருந்தாலும் இப்படியெல்லாமா செய்வது? என்று தொண்டர்கள் புலம்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications