நன்றி மறந்த ஓபிஎஸ், எடப்பாடி இரண்டு பேரும் அதிமுகவை விட்டு விலகுங்க! ஆறுகுட்டி எம்எல்ஏ அதிரடி!
ஓ.பன்னீர் செல்வமும்,எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுகவை விட்டு விலக வேண்டும் என்று ஆறுகுட்டி எம்எல்ஏ கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவை: அதிமுகவின் தலைமைக்காக சண்டைபோடு ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் கட்சியை விட்டு ஒதுங்க வேண்டும் என்று ஆறுகுட்டி எம்எல்ஏ தெரிவித்துள்ளார். தொண்டர்களை கேட்டுக்கொண்டா அவர்கள் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை ஏற்படுத்தினார்கள் என்றும் அவர் கேட்டுள்ளார்.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 23ம் தேதி சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானம் குறித்து நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்துக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த கூட்டத்தில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில், அதிமுகவை வழிநடத்தி செல்ல இரட்டை தலைமைக்கு பதில் ஒற்றை தலைமையே சிறந்தது. அதனால் வருகிற 23ம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை பதவி முறையை மீண்டும் தீர்மானமாக கொண்டு வர வேண்டும். எடப்பாடி தலைமையில் ஒற்றைத் தலைமை உருவாக வேண்டும் என்ற கருத்தையே எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பலரும் வலியுறுத்தி பேசியதாக தெரிகிறது.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக நேற்று தமிழகத்தில் சென்னை, ராமநாபுரம், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிமுக நிர்வாகிகள் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். அதில், அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தான் வேண்டும். ஜெயலலிதாவால் கைகாட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம்தான் அதிமுகவை வழிநடத்தி செல்ல வேண்டும், நிரந்தர பொதுச்செயலாளரே தலைமை ஏற்க வரவேண்டும் என்று கூறியுள்ளனர்.

இபிஎஸ் ஆதரவாளர்கள்
கடந்த இரண்டு நாட்களாக ஓபிஎஸ், இபிஎஸ் வீடுகளில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்திய நிலையில் இன்றைய தினம் சேலம் சென்றுள்ளார் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி. இன்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்கும் விதமாக சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ஓபிஎஸ் ஆலோசனை
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து தனது ஆதரவாளர்களுடன் நான்காவது நாளாக ஓ. பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னையில் ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தம்பிதுரை, மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், மைத்ரேயன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தம்பிதுரையும் இப்போது இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

ஆறுகுட்டி எம்எல்ஏ
இந்த நிலையில் அதிமுகவின் தலைமைக்காக சண்டைபோடு ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் கட்சியை விட்டு ஒதுங்க வேண்டும் என்று ஆறுகுட்டி எம்எல்ஏ தெரிவித்துள்ளார். அதிமுக எம்எல்ஏ ஆறுகுட்டி கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. இதற்கு காரணம் அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது தான். ஆனால் ஆட்சிக்கு வந்த திமுக சில நாட்களிலே தேர்தலை நடத்தி அதிகம் வெற்றி பெற்றுவிட்டனர்.

பதவி சண்டை
ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இரண்டு பேருமே ஒரு விபத்தின் காரணமாக பதவிக்கு வந்துவிட்டார்கள்..
எதோ விபத்தில் ஓ.பன்னீசெல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் பொறுப்புக்கு வந்துவிட்டனர். அந்த விபத்தில் வந்தவர்கள் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் நாங்கள் எல்லாரும் ஒதுங்கி இருக்கிறோம். இப்போது இரண்டு பேரும் சண்டை போட்டு கொள்கின்றனர். இப்படி சண்டைபோட்டு தான், ஒபிஎஸ் - ஈபிஎஸ் மற்றும் வேலுமணி இருக்கும் வார்டுகளிலேயே திமுக கைப்பற்றியது.

ஜாதிகட்சியாக மாறிய அதிமுக
அதிமுக இப்பொழுது ஜாதி கட்சிக்காக மாறி வருகிறது. இவர்கள் நன்றி மறந்தவர்கள் என்று குற்றம்சாட்டினார்.
ஜெயலலிதா இருந்தால் இப்படி ஆயிருக்குமா என்று கேள்வி எழுப்பிய அவர், கட்சியை விட்டு ஒபிஎஸ் - ஈபிஎஸ் இருவருமே ஒதுங்கி கொள்ள வேண்டும் என்று கூறினார். இவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள சச்சரவினால் தொண்டர்கள் நொந்து நூலாகியுள்ளனர்.

அதிமுகவை அழிக்க பார்ப்பதா?
மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். நீதான் முதல்வர் என்று கைகாட்டி பதவி கொடுத்தவர் சசிகலா. அவரைக் கேவலமாக பேசலாமா. அதிமுக அலுவலகம் முன்பு கோஷ்டியாக உட்கார்ந்து கொண்டு கோஷம் போட்டு வருகிறன்றனர். இப்படி சண்டை போட்டுகொண்டு கட்சியைக் அழிக்க பார்க்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

ஒதுங்கி வழிவிடுங்கள்
தற்போது கட்சி பின்னடைவு அடைந்துள்ள நிலையில், தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் சண்டையிடுவது சரியல்ல, கோஷ்டி பூசல் சரியல்ல. அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒதுங்கி வழிவிட வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை தொண்டர்களை கேட்டா ஏற்படுத்தினார்கள்? எனவே, ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் விலகிக்கொள்ள வேண்டும்.

ஒற்றைத்தலைமை வரட்டும்
அதிமுகவில் நிறைய பேர் இருக்கிறார்கள், அவர்கள் பொதுச்செயலாளராக வரட்டும் அல்லது ஒற்றை தலைமை ஏற்று வரட்டும். ஓபிஎஸ், இபிஎஸ்க்கு பதிலாக வேறு யாராவது அதிமுக பொதுச்செயலாளர்கள் வந்தால் பரவாயில்லை. கட்சியில் 50 பேர் சேர்ந்து, இவர்களே பதவியை ஏற்படுத்தினர் என குற்றசாட்டினார். அதிமுக இயக்கம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதிமுக தொண்டர்கள் தங்களுக்கு தேவையான தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள். கோஷ்டி பூசலால் அதிமுகவை அழிக்க இருவரும் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.












Click it and Unblock the Notifications