கோவை கார் வெடிப்பு சம்பவம்.. அண்ணாமலையின் அழுத்தத்தால் என்ஐஏ விசாரணை.. சொல்கிறார் எச்.ராஜா!
புதுக்கோட்டை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அழுத்தம் காரணமாக கோவை கார் வெடிப்பு வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தாய்மொழி தமிழுக்கு முடிவுரை எழுத நினைக்கும் திமுக அரசு என்ற கோஷத்துடன் பாஜக சார்பாக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டையில் பாஜக சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டார்.
இதன்பின்னர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக் குழு கூட்டத்தில் எடுத்த முடிவு அ பிரிவில் உள்ள மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். தமிழகம் சி பிரிவில் உள்ளது. அதனால் மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையிலான குழு எடுத்த முடிவு தமிழகத்திற்கு பொருந்தாது.

எச்.ராஜா பேட்டி
இதனை சாக்காக வைத்துக் கொண்டு தமிழ் மொழியை அழிக்கும் திமுக, சட்டமன்றத்தில் பொய் பேசுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பொய் பேச்சு திமுக அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு உகந்தது. 1967ம் ஆண்டை மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சியை திமுக எடுத்து வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இனி முடியாது. தற்போது மக்கள் விழித்துக் கொண்டு திமுகவின் திட்டங்களை தெரிந்து கொண்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.

முதல்வர் அமைதி காத்தது ஏன்?
தொடர்ந்து, கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் பற்றி கடந்த நான்கு நாட்களாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சம்பவம் மவுனம் காத்து வந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதேபோல், திமுக தனது வாக்கு வங்கியை தக்க வைப்பதற்காகவே என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை கார் வெடிப்பு சம்பவத்தை என்ஐஏ விசாரணைக்கு மாற்றியது வரவேற்கத்தக்கது.

அண்ணாமலையின் அழுத்தம்
பாஜக தலைவர் அண்ணாமலை கொடுத்த அழுத்தம் காரணமாக தான் தமிழக அரசு வேறு வழியின்றி என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்தை நாங்கள் கண்டிக்கிறோம் இனி இந்த இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் இதுவரை கூறவில்லை என்று விமர்சித்தார்.

ஜமாத் கூட்டமைப்பு முடிவு
தொடர்ந்து, கோவையில் ஜமாத் கூட்டமைப்பினர் எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜமாத் கூட்டமைப்பு அழைத்து பேசியிருப்பது வரவேற்கத்தக்கது, இருப்பினும், ஏன் இந்து அமைப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காது என்று ஏன் கூறவில்லை. இதன் மூலம் பாரபட்சமான நடவடிக்கை தொடர்கிறது என்பதை தெளிவாக காட்டுகிறது என்று தெரிவித்தார்.

நம்பிக்கையில்லா தீர்மானம்
தொடர்ந்து, பாஜக சார்பில் சட்டமன்றத்தில் 24 உறுப்பினர்கள் இருந்திருந்தால் மு.க.ஸ்டாலின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்திருப்போம். ஏனென்றால் சட்டமன்றத்தில் இந்தி திணிப்பு தொடர்பாக பொய்யான கருத்துக்களை கூறி தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். அதிமுக உடன் மட்டுமே பாஜக கூட்டணியில் உள்ளது. கருத்தியல் ரீதியாக திமுகவை எதிர்த்து பாஜக களத்தில் இருக்கிறது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications