முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு..சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு! பெலிக்ஸ் மீது புகார்..!
கோவை: முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறாக பேசி இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், ரெட் பிக்ஸ் யூட்யூப் சேனலின் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்ட் மீது கோவை பந்தய சாலை காவல் நிலைய போலீசார் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழக காவல்துறை ஏடிஜிபி குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தரக்குறைவாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கோவை சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா புகார் அளித்தார்.

இதன் பேரில் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் தேனியில் இருந்த போது சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். அவர் மீது கஞ்சா வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவதூறு பேச்சு: இந்நிலையில் சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து புகார்கள் வரும் நிலையில் காவல்துறையினர் வழக்குகளையும் பதிவு செய்து வருகின்றனர். சைபர் கிரைம் வழக்கு, கஞ்சா வழக்கு இருக்கும் நிலையில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் புகார் அளித்தார். பெண் பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது புதியதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோலமாவு சந்தியா' என்ற பெயரில் இழிவாக கட்டுரை எழுதியதாக அவர் கூறியிருந்தார்.
சவுக்கு சங்கர்: அந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். கஞ்சா வழக்குடன் கோவை சைபர் க்ரைம் எஸ்ஐ சுகன்யா, தமிழர் முன்னேற்ற படை நிறுவன தலைவர் வீரலட்சுமி, திருச்சி மாநகர பெண் காவலர், சேலம் சப்-இன்ஸ்பெக்டர் கீதா உள்ளிட்ட பலர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது தற்போது வரை ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் சவுக்கு சங்கர் மீது தொடர்ந்து புகார்கள் வந்ததை எடுத்து அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதாக சென்னை மாநகர காவல் துறையின் அறிவித்தது.
மீடியா முன் முழக்கம்: இந்த நிலையில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சவுக்கு சங்கரை மருத்துவ பரிசோதனைக்காக கோவை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வலது கையில் மீண்டும் கட்டு போடப்பட்டது. அப்போது சிறையில் தான் கொல்லப்படுவேன் என சவுக்கு சங்கர் பேசியது வைரலானது. மேலும் அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இதற்கிடையே திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கிற்காக கோவை சிறையில் இருந்து திருச்சிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் அழைத்துச் செல்லப்பட்டார்.
மேலும் ஒரு வழக்கு: இச்சூழலில் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவையில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெலிக்ஸ் ஜெரால்டின் ரெட் பிக்ஸ் யூட்யூப் சேனலில் முத்துராமலிங்க தேவர் பற்றி சவுக்கு சங்கர் அவதூறு கருத்து தெரிவித்ததாக வழக்கறிஞர் முத்து என்பவர் கோவை மாநகர பந்தய சாலை காவல் நிலையத்தில், சவுக்கு சங்கர், பெலிக்ஸ் மீது புகார் அளித்தார். இதன் பேரில் இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எட்டு வழக்குகள்: சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெண் காவலர்கள் அளித்த புகாரின் பேரில் ஏற்கனவே பல்வேறு காவல் நிலையத்தில் 7 வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், தற்போது எட்டாவதாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பு செய்ததாக ரெட் பிக்ஸ் யூட்யூப் சேனலின் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு மீது இரண்டாவது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications