மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவியிடம் ஆட்டோ ஓட்டுநர் செய்த அசிங்கம்.. போக்சோவில் கைது செய்த போலீஸ்
கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவியிடம் ஆட்டோ ஓட்டுநர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுநரை, காவல் துறையினர் போக்சோவில் கைது செய்ததோடு, இரு ஆட்டோக்களையும் பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாட்டில் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் பிரச்சனைகள், பாலியல் சீண்டல்கள், பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வீடு, கல்லூரி, பள்ளி, பொது இடங்கள் என அனைத்து இடங்களுமே பாதுகாப்பற்ற பகுதிகளாக மாறிவிட்டன. பெண் குழந்தைகளை வெளியில் அனுப்புவதற்கே பெற்றோர் பயப்படும் சூழல் நிலவி வருகிறது. சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது காவல் துறையினர் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வந்தாலும் இப்பிரச்சனைகள் ஓய்ந்தபாடில்லை.

இந்நிலையில், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவியிடம் ஆட்டோ ஓட்டுநர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுநரை காவல் துறையினர் போக்சோவில் கைது செய்ததோடு, இரு ஆட்டோக்களையும் பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் தெளபீக் உமர் (23). இவர், பள்ளி மாணவிகளை வீட்டில் இருந்து அழைத்துச் சென்று பள்ளியில் சென்று விட்டு, மீண்டும் அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளார். இவரது ஆட்டோவில் நிறைய மாணவ, மாணவிகள் வருவது வழக்கமாம். இந்நிலையில், அவரது ஆட்டோவில் வரும் 14 வயது பள்ளி மாணவியுடன் தெளபீக் உமருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தெளபீக் உமர் தொடர்ந்து மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த அந்த மாணவி இதுகுறித்து தனது தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அவரது பெற்றோர் அசிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர், இதுகுறித்து பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியும், அவரது தாயாரும் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் ஆட்டோ ஓட்டுநர் தெளபீக் உமரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இச்சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த பெண் ஒருவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, தெளபீக் உமரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆட்டோ டிரைவரிடமிருந்து இரு ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பள்ளி செல்லும் மாணவியிடம் ஆட்டோ ஓட்டுநரே பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் மேட்டுப்பாளையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications