முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கோவையில் சீட் பெற வானதி, அண்ணாமலை இடையே பனிப்போர் நிலவியது. கோவை வடக்கு தொகுதி வேட்பாளராக வானதி சீனிவாசன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை கலந்துகொள்வார் என்று வானதி அறிவித்திருந்தார். ஆனால் கோவையில் இருந்தும் அண்ணாமலை அந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளார்.
அதிமுக பாஜக கூட்டணியில் கோவை மாவட்டத்தில் பாஜகவுக்கு கோவை வடக்கு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு வானதி சீனிவாசன் மற்றும் அண்ணாமலை இடையே சீட்டை கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் வானதி சீனிவாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுவிட்டார். அண்ணாமலை கோவையில் போட்டியிட விரும்பிய நிலையில் அது நிறைவேறவில்லை.

அண்ணாமலை வானதி சீனிவாசன் பஞ்சாயத்து
இதனால் அண்ணாமலை ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்தனர். சமூகவலைதளங்களில் அண்ணாமலை ஆதரவாளர்கள் வானதி சீனிவாசனை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். கோவை வடக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு கோவை விமான நிலையம் வந்த வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொள்வார் என்று கூறியிருந்தார்.
கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம், கணபதி அருகே உள்ள திருமண மண்டபத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சியினரும் பங்கேற்றிருந்தனர். ஆனால் இந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை. அண்ணாமலை கலந்து கொண்டால் முதல் நாளிலேயே எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வந்திருக்கும்.
மீண்டும் மீண்டுமா
ஆனால் அண்ணாமலை வராதது பிரச்சனையை அதிகரித்துள்ளது. இத்தனைக்கும் அண்ணாமலை நேற்று கோவையில் தான் இருந்தார். அண்ணாமலை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தம் அவர்களின் தந்தை பழனிச்சாமி கவுண்டர் காலமானது அறிந்து வருத்தம் அடைந்தேன். இன்று மாலை அவரது இல்லத்திற்குச் சென்று ஏ பி முருகானந்தம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தேன் என்று கூறியிருந்தார்.
வானதி தரப்பு அதிர்ச்சி
கோவையில் இருந்தே அண்ணாமலை வேட்பாளர் கூட்டத்திற்கு வராதது வானதி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை வருகையை ஆவலுடன் எதிர்பார்த்த அவரின் ஆதரவாளர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் வானதி சீனிவாசன் இன்று காலை வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளார். இந்த நிகழ்வில் அண்ணாமலையும் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications