செந்தில் பாலாஜி கேன்சர் ஏற்படுத்தும் விஷக்கிருமி.. அண்ணாமலை கடும் விமர்சனம்
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி (நாளை மறுநாள்) நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு 2 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சியினர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. கோவை தேர்தல் களத்தை அனைவரும் உற்றுநோக்கி வருகிறார்கள். செந்தில் பாலாஜியை விஷ கிருமி என்றும், கேன்சர் கட்டி என்றும் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக அம்மன் அர்ஜுனன் ஆதரித்து வைசியாள் வீதி பகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், "மே 4 ஆம் தேதி கோவை தெற்கு தொகுதியில் பெரிய அரசியல் சரித்திரத்தை ஏற்படுத்த அம்மன் அர்ஜுனன் தயாராகியுள்ளார். அலிபாபாவும், 40 திருடர்களும் நமக்கு தெரியும்.

அலிபாபாவும் திருடர்களும்
அதேபோல கரூரிலிருந்து பத்து ரூபாய் பாலாஜியும் 18 திருடர்களும் கோவைக்கு வந்துள்ளார்கள். சாராய அமைச்சராக இருந்து கரூரிலிருந்து தோல்வி பயத்தால் கோவைக்கு வந்துள்ளார். ஜனநாயகத்தை பணநாயகத்தால் விலைக்கு வாங்கி விடலாம் என்று நினைக்கிறார். கரூரில் இருந்து அவருடன் 18 சுயேச்சை வேட்பாளர்களும் வந்துள்ளார்கள்.
கடந்த சில நாட்களாக கோவையில் நடக்க கூடாத சம்பவத்தை எல்லாம் பார்த்து வருகிறோம். ராமநாதபுரம் காவல் நிலையத்தை திமுகவின் குண்டர்கள் முற்றுகையிட்டு காவல் நிலையத்திற்கே பூட்டு போட்ட ஒரு நிலையை பார்க்கிறோம். அவர்கள் எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள். எதிர்த்து நிற்பவர் ஒரு எளிய மனிதர், மக்களின் இதயத்தில் இருக்கக்கூடியவர் என்பது தெரியவில்லை.
கேன்சர் கட்டி போல
செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் விஷக்கிருமிகள். அவர்களை உள்ளே விட்டால் கேன்சர் கட்டி போல பரவி விடுவார்கள். கேன்சரை ஏற்படுத்தக்கூடிய அந்த கிருமிகளை இந்த தேர்தலில் நிராகரித்தோம் என்றால் தமிழகத்தில் ஜனநாயகமே புனிதமாகிவிடும். 2011 முதல் 2021 வரை கோவை வேகமான வளர்ச்சியை பார்த்துள்ளது. மத்திய அரசின் நிதி முழுமையாக பயன்படுத்தப்பட்டது.
இது சாதாரண தேர்தல் இல்லை. கொங்கு மண்டலத்தில் 21 தொகுதிகளையும் வென்று காட்ட வேண்டும். மே 4 ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியார் முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும். தமிழகத்தில் தற்போது யாரும் நிம்மதியாக இல்லை. கோவையின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.
விஷக்கிருமிகள்
கரூரில் இருந்து சில விஷ கிருமிகள் ஊடுருவி கோவைக்கு தொடர்ந்து பிரச்சனைகளை கொடுத்து வருகிறார்கள். அந்த விஷத்தை முறியடிக்க கூடிய மருந்து எஸ்பி வேலுமணி. கோவைக்கு செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் ஏராளமானவை உள்ளன. மாலை 5 மணிக்கு பிரச்சாரம் முடிந்தாலும், உங்கள் உறவினர்கள் உடன் படித்தவர்கள் ஊரில் இருப்பவர்களை எல்லாம் தொலைபேசியில் அழைத்து இரட்டை இலைக்கு வாக்களிக்க வைக்க வேண்டும்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்து கொண்டிருக்கிறது அது சாதாரண மாற்றமாக இல்லாமல் பெரும் மாற்றமாக இருக்க வேண்டும் 4 ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சரித்திர ஆட்சி மாற்றத்தை பார்க்க உள்ளோம். தீயசக்திகளை விரட்டி, கோவை எப்போதும் தூய சக்திகளின் பக்கம் என்பதை இந்த தேர்தலில் காட்ட வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications