கோவையில் பாஜக "மாபெரும் போராட்டம்.." அண்ணாமலை தலைமையில்.! அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு
கோவை: அன்னூரில் தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ள நிலையில், இதற்கு எதிராக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடத்த உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் மேட்டுப்பாளையம் அன்னூரில் டிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. மேட்டுப்பாளையத்தில் 3,731 ஏக்கர் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி இந்த தொழிற்பேட்டை அமைய உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் அன்னூரில் விவசாயிகள் தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தி இருந்தனர்.
அண்ணாமலை எதுவும் தெரியாமல் பேசுகிறார்..தேயிலை பற்றி என்ன தெரியும்.. வனத்துறை அமைச்சர் 'நறுக்’கேள்வி

தொழிற்பேட்டை
இதற்கிடையே தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை அன்னூரில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் மாநில விவசாய அணித் தலைவர் ஜிகே நாகராஜ் கூறியுள்ளார். விவசாயிகளின் கோரிக்கைக்குச் செவி சாய்க்க மறுக்கும் தமிழக அரசைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அண்ணாமலை தலைமையில்
இது தொடர்பாகக் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அன்னூரில் 3731.57 ஏக்கர் விவசாய நிலத்தைக் கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பை மீறி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக விவசாயிகள் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதம் எனப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அன்னூர் விவசாயிகளின் போராட்டத்தைத் தமிழக அரசு செவி சாய்க்க மறுத்ததால் பாஜக போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

வஞ்சிக்கும் செயல்
அன்னூர் விவசாய நிலத்தை அரசு கையகப்படுத்த அரசு ஆணை பிறப்பித்ததை ரத்து செய்யக்கோரி நாளை டிசம்பர் 7ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அன்னூர் சந்திப்பில் மதியம் 2 மணிக்குக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். நீண்ட ஆண்டு காத்திருப்பிற்கு பின்னர், இப்போது தான் அவினாசி அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 115 குளங்கள் நிரப்பப்பட்டு விவசாயத்திற்கு அன்னூர் தயாராகும் வேளையில் தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்த அரசாணை பிறப்பித்தது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.

காட்டுப்பன்றி பிரச்சினை
அதேபோல வனத்தை விட்டு விவசாய நிலத்திற்குள் வரும் காட்டுப் பன்றியைச் சுடலாம் என்று மத்திய அரசின் வழிகாட்டுதலே உள்ளது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் துப்பாக்கி உரிமம் பெற்ற நபர்கள் கொண்டு காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இருப்பினும், தமிழக அரசு இதுவரை காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்தவோ, சுட்டுக்கொல்லவோ எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனைக் கண்டித்து வரும் டிசம்பர் 14 ம் தேதி கோவையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும். எங்களின் இந்த போராட்டங்களுக்குத் தமிழக அரசு செவி சாய்க்க வேண்டும் , இல்லையென்றால் கோட்டையை நோக்கி விவசாயிகள் செல்வோம்.

மத்திய அரசுக்குத் தொடர்பு இல்லை
துடியலூர் அருகே உள்ள டியூகாஸ் நிறுவனத்தில் 14 லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டதற்கும் மத்திய அரசுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இது தமிழக அரசின் நடவடிக்கை தான். ஆனால் சமயத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் டியூகாஸ் விவகாரத்திற்கு மத்திய அரசு தான் காரணம் எனச் சொல்லிப் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசைக் கண்டித்து கோவையில் போராட்டம் நடத்த உள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.