யோகி ஆதித்யநாத் ஊர்வலத்தில்.. செருப்பு கடையில் கல் வீசியது சிறு சம்பவம்.. வானதி சீனிவாசன் ஷாக் பதில்
கோவை: உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்ற ஊர்வலத்தின் போது செருப்புக் கடையில் கல் வீசியது சிறு சம்பவம் என்று குறிப்பிட்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், அதைச் சிலர் ஊதி பெரிதாக்குவது குற்றஞ்சாட்டினார்.
கோவை காந்திபுரம் பகுதியில் கோவை தெற்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் பெருமைப்படும் வகையில் திரைத்துறையில் நடிகர் ரஜினிகாந்த் பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் விருது வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஆன்மிக அரசியல் என்ற மக்கள் விரும்பும் அரசியலை ரஜினிகாந்த் கைவிட்டது ஏமாற்றம் அளித்ததாகக் குறிப்பிட்ட அவர், பொருத்தமான நபருக்கு விருது வழங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி என்றும் ரஜினிகாந்த்திற்கு பாஜக சார்பில் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

பொறுமையில்லா கமல்
யாகவாராயினும் நா காக்க எனத் திருக்குறளை உதாரணம் காட்டிய கமல்ஹாசனுக்கு, தன்னை மநீம கட்சியினர் துக்காடா அரசியல்வாதி என விமர்சனம் செய்யும் போது ஏன் ஞாபகம் வரவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். மைக் வேலை செய்யாததால் கமல்ஹாசன் டார்ச் லைட்டை வீசியது, அவருக்குப் பொறுமையும் பக்குவமும் இல்லை என்பது காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

டிவிட்டர் அரசியல்வாதி
மக்கள் வெற்றி, தோல்வி எதைத் தந்தாலும், மக்களுக்கு உழைப்பது தான் அரசியலுக்கு அடிப்படை என்றும் 66 வயதான தனக்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கும் கமல்ஹாசன் நீண்ட காலம் அரசியலில் பயிற்சி எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். டிவிட்டர் அரசியல்வாதியான கமல்ஹாசன், நேரடியாக எத்தனை நாள் மக்களோடு இருந்துள்ளார் என்றும் களத்தில் நின்று கமல்ஹாசன் என்ன செய்தார் என்றும் கேள்வி எழுப்பினார்.

திமுக வன்முறை அரசியல்
திமுகவினர் காவல் துறை, பொதுமக்களை மிரட்டுகின்றனர் என்று தெரிவித்த அவர், வன்முறை அரசியலில் திமுகவினர் ஈடுபடுகின்றனர் என்றும் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்த முயல்கின்றனர் என்றும் தெரிவித்தார். பெண்களை இழிவாகப் பேசிய உதயநிதி ஸ்டாலின், திண்டுக்கல் லியோனியை திமுக கண்டிக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

சம்பவம்
கோவையில் பதட்டத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்யவில்லை எனவும், திமுக ஆட்சியில் தான் கோவையில் குண்டு வெடிப்புகள் நடைபெற்றது. அதற்காக திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். உபி முதலமைச்சர் பங்கேற்ற ஊர்வலத்தின் போது செருப்புக் கடையில் கல் வீசியது சிறு சம்பவம் எனவும், அதை ஊதி பெரிதாக்குவது யார் என்றும் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications