கோவையில் பரபரப்பு! திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு.. பிரதமர் வந்த நேரம் பார்த்து நடந்த சம்பவம்
கோவை: பிரதமர் மோடி கோவையில் ரோட் ஷோவில் கலந்து கொண்ட நிலையில், அப்போது அங்கே பாஜகவினர் சிலர் திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு அணிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில், பாஜக தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. அதன்படி பாஜக சார்பில் ரோட் ஷோ நடைபெற்றது.

கர்நாடக மாநிலத்தில் இருந்து கோவை வந்த பிரதமர் மோடி, இந்த ரோட் ஷோவ மூலம் வாக்கு கேட்டார். அங்கே பொதுமக்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
காரில் சென்றபடியே பிரதமர் மோடி வாக்கு கேட்ட நிலையில், அப்போது காரில் அவருடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மேலும், 1998ஆம் ஆண்டில் நடந்த கோவைக் குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் படத்திற்குப் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
பிரதமர் மோடி கோவை வந்த போது திடீரென அங்கே பாஜகவினர் சிலர் திருவள்ளுவர் சிலைக்குக் காவி துண்டு அணிவித்து செல்பிக்களை எடுத்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
பிரதமர் வருகையை முன்னிட்டு கோவை புரூக்பாண்ட் சாலை செல்லும் பகுதியில் சிந்தாமணி அருகே திருவள்ளுவர் சிலை ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. இந்த சிலை அருகே குவிந்த பாஜகவினர், திருவள்ளுவர் சிலைக்குக் காவி துண்டை அணிவித்தனர். மேலும், திருவள்ளுவர் சிலையுடன் அவர்கள் செல்ஃபிக்களையும் எடுத்துக் கொண்டனர்.
இதை அங்கிருந்த பாஜகவினர் சிலரே கவனித்துள்ளனர். பின்னர் அவர்கள் அங்கே வந்து காவி துண்டை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக வெள்ளை நிற துண்டை அணிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications