ரொம்ப சிரமம்.. ஊராட்சி தலைவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.10000 மதிப்பூதியம் வழங்குங்க: வானதி சீனிவாசன்
கோவை: கிராம ஊராட்சித் தலைவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த மதிப்பூதியம், முழு நேர மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் வழங்கப்படும். ஜூலை மாதம் முதல் மதிப்பூதியம் வழங்கப்படும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், கிராம ஊராட்சி தலைவர்களுக்கும் ரூ.10 ஆயிரம் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பாஜக மகளிரணி தேசிய தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "மாநகராட்சி மேயர்களுக்கு மாதந்தோறும் ரூ. 30 ஆயிரம், துணை மேயர்களுக்கு ரூ. 15 ஆயிரம், மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு ரூ. 10 ஆயிரம், நகராட்சி தலைவர்களுக்கு ரூ. 15 ஆயிரம், நகராட்சி துணைத் தலைவர்களுக்கு ரூ. 10 ஆயிரம், நகராட்சி உறுப்பினர்களுக்கு ரூ. 5 ஆயிரம், பேரூராட்சி தலைவர்களுக்கு ரூ. 10 ஆயிரம், பேரூராட்சி துணைத் தலைவர்களுக்கு ரூ. 5 ஆயிரம், பேரூராட்சி உறுப்பினர்களுக்கு ரூ. 2,500 மதிப்பூதியம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைப் போல, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிகளுக்கும் மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கப்படுவது அவசியமானது. இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சித் தலைவர்களில் சரிபாதி பெண்கள் உள்ளனர். அதுபோல பட்டியலின, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களும் அதிக அளவில் கிராம ஊராட்சித் தலைவர்களாக உள்ளனர்.
சமூக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட அவர்களில் பலர், தங்கள் குடும்பத் தேவைகளுக்காகவே சிரமப்பட கூடியவர்கள். தற்போது அவர்களுக்கு மதிப்பூதியம் மிகமிக குறைவாக உள்ளது. எனவே, கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு மதிப்பூதியமாக மாதந்தோறும் ரூ. 10 ஆயிரம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications