அரசு மானியம் கொடுக்க லஞ்சம்.. கூட்டுறவுச் சங்க மேலாளர் மீது புகார் - ரூ.15.89 லட்சம் பறிமுதல்
கோவை: கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள வதம்பச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்க மேலலாளர், நெசவாளர்களுக்கு அரசு மானியமாக வழங்கப்படும் ரிபேட் தொகையை விநியோகிக்க லஞ்சம் வசூலித்துள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் லஞ்சப் பணம் ரூ.15.89 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மேலாளரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், சூலூர் வட்டத்துக்கு உட்பட்ட வதம்பச்சேரி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தின் மேலாளராகப் பணியாற்றி வருபவர் சவுண்டப்பன். இவர் அப்பகுதியைச் சேர்ந்த நெசவாளர்களுக்கு, அரசு மானியமாக கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்ட ரிபேட் (Rebate) தொகையை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார்.

இந்நிலையில், ரிபேட் தொகையை விடுவிப்பதற்கு சவுண்டப்பன் நெசவாளர்களிடம் லஞ்சம் வசூலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், லஞ்சம் வசூலிப்பதாகவும், அந்தப் பணத்தை தனிப்பட்ட முறையில் சேகரித்து வைத்திருப்பதாகவும் மாவட்ட கூட்டுறவு துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாவட்ட கூட்டுறவுத் துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று கூட்டு சோதனையில் ஈடுபட்டனர். வதம்பச்சேரியில் உள்ள கூட்டுறவு சங்க அலுவலகத்தில் நடத்தப்பட்ட இந்த திடீர் சோதனையில், மேலாளர் சவுண்டப்பன் பல்வேறு கைத்தறி நெசவு சங்கங்களைச் சேர்ந்த நெசவாளர்களிடம் இருந்து லஞ்சமாக பணத்தை வசூலித்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, நெசவாளர்களிடம் இருந்து வசூலித்த ரூ.15,89,950 ரொக்கம் கைப்பற்றப்பட்டது. மேலும், லஞ்சப் பணம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
கைத்தறி நெசவாளர்களின் நலனுக்காக வழங்கப்படும் அரசு மானியத்தை விடுவிப்பதற்கு லஞ்சம் வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது நெசவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மேலாளர் சவுண்டப்பனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த முறைகேட்டில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications