மின்வெட்டு என்று சொல்லாதீர்கள்.. பராமரிப்பு பணி என்பதுதான் சரி.. செந்தில் பாலாஜி விளக்கம்
கோவை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படுமா என்ற கேள்விக்கு, ‛‛சுயவிளம்பரத்திற்காக பேசுபவர்களுக்காக நேரத்தை வீணடிக்க வேண்டாம்'' என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
Recommended Video
கோவை மாநகராட்சி பகுதியில் சுகாதார மையங்கள், புதிய சாலைகள் அமைத்தல் உட்பட ரூ.9.12 கோடி மதிப்பீட்டில் 14 திட்டங்களுக்கான பணிகளை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று துவக்கி வைத்தார்.
முத்தண்ணன் குளகரையில் புதிய சாலைகள் அமைக்கும் பணியை துவக்கி வைத்த பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ரூ.15.75 கோடி
கோவை மாநகராட்சி வளர்ச்சி பணிகள், அடிப்படை வசதிகளுக்கு தமிழக முதல்வர் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. சாலை பணிகள், 63 சுகாதார கட்டிடங்களுக்காக ரூ.15.75 கோடி மதிப்பீட்டில் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.8.18 கோடிக்கு ஏற்கனவே பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இன்று ரூ.7.14 கோடி ரூபாய்க்கு பணிகள் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. குப்பை எடுக்க கூடுதல் வாகனங்கள் வாங்கப்பட உள்ளது. புதிதாக 105 வாகனங்கள் வாங்க ரூ.7.50 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

பொதுவான மின்வெட்டு இல்லை
கோவை நகரில் பொதுவான மின்வெட்டு என சொல்லக்கூடாது. ஒரு சில இடங்களில் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்பட்டு இருக்கும். மின்சார வாரியத்தை பொறுத்த வரை கடந்த காலங்களை போல் இல்லாமல் சீரான மின்சாரம் கிடைக்க ரூ.625 கோடி மதிப்பில் 8905 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு மின் இணைப்பு
ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்க திட்டமிடப்பட்டது. இதில் 96 ஆயிரம் பேருக்கு மின்இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இன்னும் 4 ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டும் இணைப்பு வழங்கப்பட வேண்டியுள்ளது. இதுவும் முறைப்படி விரைவில் வழங்கப்படும்'' என்றார்.

அண்ணாமலை மீது வழக்கா
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படுமா என்ற கேள்விக்கு, ‛‛சுயவிளம்பரத்திற்காக பேசுபவர்களுக்காக நேரத்தை வீணடிக்க வேண்டாம்'' என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். மின்வாரியத்தில் முறைகேடு நடப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மறுத்து வரும் நிலையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வரும் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என கெடு விதித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications