சென்னையில் கொலை.. கோவையில் உடல்.. 50 நாட்களுக்கு பிறகு சிக்கிய ட்விஸ்ட்
கோவை: சென்னையில் இளைஞர் ஒருவர் தன் நண்பரை கொலை செய்துள்ளார். காவல்துறையிடம் சிக்காமல் இருப்பதற்காக தன் சிறை நண்பர் உதவியுடன் கோவையில் ஆள் நடமாட்டம் இல்லாத கிணற்றில் வீசியுள்ளனர். இந்த சம்பவம் நடைபெற்று சுமார் 50 நாட்களுக்கு மேலாகியுள்ளது. கொலை செய்தவர்கள் காவல்துறையில் சரணடைந்துள்ள நிலையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிமுக, பாஜக, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்கள். சிவகங்கை அஜித்குமார் காவல்துறை கஸ்டடியில் கொலை செய்யப்பட்ட சம்பவம், கவின் ஆணவக் கொலை என்று கடந்த சில மாதங்களாக பல அதிர்ச்சி சம்பவங்கள் நடைபெற்றன.

கொலை வழக்கில் சரண்
மறுபக்கம் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலு கடந்த சில நாட்களுக்கு முன்பு புகாரை விசாரிக்க சென்ற இடத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத மோசமான சூழல் நிலவுவதாக புகார் எழுந்து வருகிறது. இதனைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் நேற்று மாலை இரண்டு நபர்கள் ஒரு கொலை வழக்கில் சரணடைவதாக கூறியுள்ளனர். காவல்துறையினர் அவர்களிடம் அதிர்ச்சியுடன் விசாரணை நடத்தினார்கள். அதில் ஒருவர் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 45) என்றும், மற்றொருவர் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த முருகப்பெருமாள் (வயது 26) என்றும் தெரிய வந்தது.
சிறையில் நட்பு
முருகப்பெருமாள், பாலமுருகன் இரண்டு பேர் மீதும் அடிதடி, கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருக்கின்றன. இதற்காக கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்தபோது அவர்களுக்குள் பழக்கம் ஆகியுள்ளது. சிறைக்குள் இருந்த நட்பு, சிறையில் இருந்து வெளிவந்த பிறகும் தொடர்ந்துள்ளது. அது நாளடைவில் கொலை வழக்கில் அவர்களை மீண்டும் சிறைக்கு தள்ளியுள்ளது.
இதுகுறித்து செட்டிப்பாளையம் காவல்துறையினர் கூறுகையில், முருகப்பெருமாள் சென்னையில் வசித்து வருகிறார். அங்கு அவருக்கு ஜெயராமன் (வயது 24) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு முருகப்பெருமாள், ஜெயராமன் இருவருக்கும் சென்னையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் முருகப்பெருமாள் தன் நண்பர்களுடன் இணைந்து ஜெயராமனை கொலை செய்துள்ளார்.
சென்னையில் கொலை.. கோவையில் உடல்
ஜெயராமனின் உடலை சென்னையில் தகனம் செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் அங்கு எந்த இடத்திற்கு கொண்டு செல்வது என்று தெரியாமல் குழம்பியுள்ளனர். இதையடுத்து காவல்துறையில் சிக்காமல் இருப்பதற்காக முருகப்பெருமாள், பாலமுருகனிடம் உதவி கேட்டுள்ளார். பாலமுருகன் தற்போது கோவை மலுமிச்சம்பட்டி அருகே வசித்து வருகிறார். அவரின் அறிவுறுத்தல்படி ஜெயராமனின் உடல் கார் மூலம் சென்னையில் இருந்து கோவை கொண்டு வரப்பட்டது.
ஒரு நள்ளிரவு நேரத்தில் அந்த உடலை மலுமிச்சம்பட்டி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத கிணற்றில் வீசியுள்ளனர். மறுபக்கம் ஜெயராமனை காணவில்லை என்று அவரின் உறவினர்கள் அளித்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனால் முருகப்பெருமாள் மற்றும் பாலமுருகன் காவல்துறையில் சரணடைந்துள்ளனர்.
விசாரணை
தீயணைப்புத்துறையினர் உதவியுடன் ஜெயராமனின் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சரணடைந்த இரண்டு பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் சம்பந்தப்பட்டுள்ள முருகப்பெருமானின் நண்பர்களையும் காவல்துறையினர் தேடி வருகிறார்கள். அதன் பிறகு தான் கொலைக்கான காரணம் முழுமையாக தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
