இனமானம், தன்மானம் பற்றி கவலைப்படாதவர்கள்.. எதிர்கட்சிகள் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்!
கோவை: இனமானம், தன்மானம் பற்றி கவலைப்படாதவர்கள் தான் திமுக அரசை விமர்சிக்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சிகள், திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு கோவை வந்தார். இன்று முதல் 3 நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
அதில் முதல் நாளான இன்று, கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஈச்சனாரியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஒரு லட்சத்து 7 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, கோவையில் ரூ.663 கோடி மதிப்பிலான 768 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

முதல்வர் ஸ்டாலின் பேச்சு
இதனைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இந்த விழாவை அரசு விழா என்பதைவிட கோவை மாநாடு என்பதுபோல் நடந்துகொண்டிருக்கிறது. எதிர்கால தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை மக்களின் முகம் மூலம் அறிந்துகொள்கிறேன். கோவை மாவட்டத்திற்கு அடிக்கடி வருவதற்கு மக்கள் மீதான அன்பே காரணம். தென்னிந்தியாவின் மிகமுக்கிய தொழில் நகரம் கோவை தான். நூற்பாலை, விசைத்தறி, கிரைண்டர் உற்பத்தி என பல்வேறு தயாரிப்புகள் கோவையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

கோவை திட்டம்
கோவை பன்னாட்டு விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கான ரூ. 1,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் உள்ள சாலைகளை செப்பனிட ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி, முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாடு வேகமாக முன்னேறி வருகிறது.

அதிமுக மீது விமர்சனம்
மாணவர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் என அத்தனை தரப்பு மக்களும் தமிழக அரசை பாராட்டி வருகிறார்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாமல், புரிந்துகொள்ள முடியாமல் சிலர் அளிக்கும் பேட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எதிர்ப்பு, அடக்குமுறைகளை மீறி விமர்சனத்தில் வளர்ந்தவன் நான். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்க நினைத்தால் அனுமதிக்க மாட்டேன். சொந்தக் கட்சியில் உள்ள குளறுபடிகளை மறைக்க திமுக ஆட்சி மீது விமர்சனம் செய்கின்றனர். ஓராண்டு காலத்தில் ஓராயிரம் திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். திமுக ஆட்சி என்பது ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஒளி தரும் ஆட்சி.

மக்கள் பாராட்டு போதும்
இனமானம், தன்மானம் பற்றி கவலைப்படாதவர்கள் தான் திராவிட மாடல் ஆட்சியை விமர்சிக்கிறார்கள். காழ்ப்புணர்ச்சியோடு தூற்றுவோரின் பாராட்டு எனக்கு தேவையில்லை. மக்களின் பாராட்டு எனக்கு போதும். என்ன செய்தோம் என கேட்பவர்களுக்கு இங்கு நான் கம்பீரமாக கூறிக் கொள்கிறேன். ஏதோ சிலருக்கு உதவிகளை செய்து கணக்கு காட்டுபவர்கள் அல்ல நாங்கள். மக்களுக்கு கணக்கில்லாத உதவிகளை திமுக அரசு செய்து வருகிறது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications