கோவையில் ஸ்டாலின் அறிவித்த முத்தான 5 திட்டங்கள்.. செழிக்கப்போகுது நம்ம ஊரு.. இனி செம்ம வளர்ச்சி
கோவை: கோவையில் 300 கோடி மதிப்பில் அமையவுள்ள நூலகம் மற்றும் அறிவியல் மையம் பெரியார் பெயரில் இருக்கும் எனவும், இதன் திறப்பு விழா ஜனவரி 2026 ஆம் ஆண்டு நடைபெறும் என்றும் நூலக அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதேபோல, கோவைக்கு முத்தான 5 திட்டங்களையும் முதல்வர் அறிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், அனுப்பர்பாளையத்தில் பள்ளி கல்வித் துறை சார்பில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில், 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 8 தளங்களுடன் கட்டப்படவுள்ள நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நூலகத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமை செயலாளர் முருகானந்தம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணபதி ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நூலகம் அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது: மாணவர்களைச் சந்திக்கின்ற பொழுது புது எனர்ஜி ஏற்படுகிறது. கோவையில் தான் தமிழ் புதல்வன் திட்டம் துவங்கப்பட்டது. இன்று இந்த நிகழ்வில் கலந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
ஆட்சி பொறுப்பேற்றப் பின்னர் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நேரடியாகச் சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறேன். கோவைக்கு இதுவரை 3 முறை வந்து, பல்வேறு அரசு நிகழ்வுகளில் கலந்துகொண்டு திட்டங்களை துவக்கி வைத்துள்ளேன். கடந்த 3 ஆண்டுகளில் அறிவித்த அறிவிப்புகளின் நிலை குறித்து அமைச்சர்களை ஆய்விற்கு செல்ல அறிவுறுத்தி, முதலீடுகள் ஈர்ப்புக்காக அமெரிக்கா சென்றேன்.
அங்கிருந்து வந்த பின்பு அமைச்சர்களிடம் அவற்றின் நிலை குறித்து கேட்டதோடு, ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு செய்யும் பணிகளை துவங்கியுள்ளேன். இந்த கள ஆய்வில் முதல் மாவட்டமாக கோவையில் ஆய்வுப் பணிகளை துவங்கி இருக்கிறேன்.
நேற்று முதல் கோவை மாவட்ட மக்களின் கோரிக்கைகளை நேரில் சென்று கேட்டு வருகிறேன். கோவை மாவட்டத்தில் அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த கம் பேக் கொடுத்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அவருக்கு சில தடையெல்லாம் ஏற்படுத்தினார்கள். அவற்றை எல்லாம் தகர்த்து விட்டு வந்துள்ளார் செந்தில் பாலாஜி.
கோவையில் நூலகத்தொடு சேர்ந்து அறிவியல் மையம் அமைய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. சென்னையில் அண்ணா நூலகம், மதுரை கலைஞர் நூலகம் உள்ளது போல கோவையில் பெரியார் பெயரில் இந்த நூலகம் உருவாகவுள்ளது. இதன் திறப்பு விழா ஜனவரி, 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.
நேற்று எல்காட் நிறுவனத்தின் புதிய தகவல் தொழில்நுட்ப கட்டடம் திறக்கப்பட்டுள்ளது. செம்மொழி பூங்கா பணிகளை ஆய்வு செய்தேன். அதுவும் விரைந்து முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திறக்கப்படும். சென்னையின் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனை, மதுரை கலைஞர் நூலகம், ஜல்லிக்கட்டு அரங்கம், கீழடி அருங்காட்சியகம் ஆகியவை குறித்த காலத்தில் இந்த ஆட்சியில் முடிக்கப்பட்டுள்ளன.
கோவையில் 35 ஆண்டுகால பிரச்சனையாக இருந்த நில விடுவிப்பு கோரிக்கைக்கு நேற்று ஆணைகள் வழங்கப்பட்டு, 10,000 குடும்பங்கள் பயனடைந்துள்ளன.
தங்க நகை தொழிலாளர்கள் குறைகளை கேட்டறிந்து நேரடியாக அவர்களின் இடத்திற்கு சென்றேன். அவர்களின் கோரிக்கையினை ஏற்று உரிய அறிவிப்பை வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.
கோவைக்கு அறிவிக்கப்பட்டுள்ள 5 திட்டங்கள்:
1. உலக அளவில் முக்கிய தங்க நகை மையமாக விளங்கும் கோவையில் தொழில் வளாகம் அமைக்கப்படும். அதில் ஆய்வகமும் அமையவுள்ளது. 124 கோடி மதிப்பீட்டில் அமையவிருக்கும் இந்த தொழில் வளாகத்தில் 2,000 பேர் நேரடியாகவும், 1,100 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
2. இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப மையமாக கோவை உள்ளது. கோவை எல்காட் வளாகத்தில் 17.17 ஏக்கர் பரப்பளவில் மேலும் ஒரு ஐடி புதிய பூங்கா அமைக்கப்படும். இதனால் 36 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். சென்னை நாங்குநேரி தொழில்நுட்ப பூங்காவை போல இது இருக்கும். மூன்று மில்லியன் சதுர அடி பரப்பில் இந்த பூங்கா அமைக்கப்படும்.
3. தொண்டாமுத்தூரில் யானை புகாத வகையில் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு நவீன பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படும்.
4. கோட்டூர், வேட்டைக்காரன்புதூர், உடையகுளம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் 38 கிராமங்களுக்கு பயணிக்கக் கூடிய 26 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
5. 295 பொள்ளாச்சி கிராமங்களுக்காக கூட்டுக் குடிநீர் திட்டம் 51 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
அதேபோல, விமான நிலைய விரிவாக்கம், சூலூரில் தொழில் மையம் மற்றும் கோவையின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக மேற்கு புறவழிச்சாலை, குடிநீர் திட்டங்கள், பாதாள சாக்கடை திட்டங்கள் ஆகியவை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நாடாளமன்ற தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளில் முக்கியமான கிரிக்கெட் ஸ்டேடியம் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவங்கவுள்ளது.
நேற்று அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனையில் கோவையில் நடைபெற்று வரும் திட்டங்களை விரைவில் நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் முதல்வர் தெரிவித்தார். அவினாசி சாலையில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலம், சின்னியம்பாளையம் முதல் நீலாம்பர் வரை மேலும் 5 கி.மீ தூரத்திற்கு உயர்மட்ட மேம்பால சாலை விரிவாக்கப்பட்டு நீட்டிக்கப்படும்.
கோவை மாநகரில் புனரமைக்கப்படாத சாலைகள், பாதாள சாக்கடையால் பாதிப்படைந்த சாலைகள், மண் சாலைகள் ஆகியவற்றை மேம்படுத்த 200 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். மக்களுக்கான பணிகள் தொடர்ந்து செய்யப்பட்டு, தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து, சிறந்த மாநிலமாக உள்ளது.
50 ஆண்டுக்கு முன்பு வட மாநிலத்தையும், தமிழகத்தையும் ஒப்பிட்டு பாருங்கள். இப்போதும் ஒப்பிட்டு பாருங்கள். தமிழகம் அனைத்து துறையிலும் முன்னணி மாநிலமாக இருக்கின்றது. வடக்கு வாழ்கின்றது. தெற்கு தேய்கின்றது என்றார் அண்ணா, ஆனால் இப்போது தெற்கை நாங்கள் வளர்த்து இருக்கின்றோம், தெற்கு வடக்கிற்கு இப்போது வாரி வழங்குகின்றது என்றார்.












Click it and Unblock the Notifications