கோவையில் விபூதி கலந்த தண்ணீரை தீர்த்தம் போல தெளித்ததும்.. மாயமான தங்கம்.. ட்விஸ்ட் தந்த கும்பல்
கோவை: மயக்க மருந்து கலந்த தண்ணீர் தெளித்து 10 பவுன் தங்க நகையை பறித்து சென்ற கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வடமாநிலத்தில் வசிக்கும் ஈரான் நாட்டை சேர்ந்த கொள்ளையர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. முகத்தில் விபூதி கலந்த தண்ணீரை தீர்த்தம் போல தெளித்து தங்க நகையை கொள்ளையடித்து சிக்கிய கும்பலை எப்படி கோவை போலீசார் கைது செய்தார்கள்.. அவர்களின் பின்னணி பற்றி பார்ப்போம்.
கோவை வெரைட்டிஹால் ரோடு பகுதியில் சஞ்சய் என்பவர் நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரது நகைப்பட்டறையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சுபோமங்ஷி என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த செப்டம்பர் 12-ந் தேதி சுபோமங்ஷி, மற்றொரு கடையில் வேலைக்காக கொடுத்திருந்த 10 பவுன் தங்க நகையை வாங்கி கொண்டு பட்டறைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை 4 பேர் வழிமறித்து, அவரிடம் இந்தியில் நைசாக பேசி உள்ளார்.

4 பேரும் மாயம்
அவரை ஏற்கனவே நோட்டம்விட்ட கும்பல், உங்கள் குடும்பத்தில் சில பிரச்சினைகள் இருப்பதாகவும், அதனை தீர்க்க பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இதை சுபோமங்ஷி கேட்டு கொண்டிருந்த போது, அவரின் முகத்தில் விபூதி கலந்த தண்ணீரை தீர்த்தம் போல தெளித்துள்ளார்கள். பின்னர் அவரிடம் இருந்து நகையை வாங்கிக் கொண்ட 4 பேர், சிறிது தூரம் நடந்து சென்று வாருங்கள் என கூறவே, சுபோமங்ஷி அங்கிருந்து 100 மீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது, 4 பேரும் அங்கு இல்லை.
10 சவரன் தங்கம் பறிப்பு
அப்போது தான் தன்னை ஏமாற்றி 10 பவுன் நகையை பறித்து சென்றதை சுபோமங்ஷி உணர்ந்தார். இதுகுறித்து அவர் உரிமையாளர் சஞ்சய்க்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர், இதுபற்றி வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் கொள்ளையர்கள் 2 ஆட்டோக்கள் மூலம் மாறி சென்று, மகாராஷ்டிரா மாநில பதிவெண் கொண்ட காரில் தப்பி சென்றதும், அவர்கள் நாக்பூரை சேர்ந்தவர்கள் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.
தனிப்படை அமைப்பு
இதையடுத்து கொள்ளை கும்பலை பிடிக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணன் சுந்தர் உத்தரவிட்டார். அதன் பேரில் கோவை மாநகர துணை கமிஷனர் கார்த்திகேயன் கண்காணிப்பில், உக்கடம் சரக உதவி கமிஷனர் முருகேசன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் விக்னேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
நாக்பூர் சென்ற தனிப்படை போலீஸ்
தனிப்படை போலீசார் நாக்பூர் விரைந்து சென்று ஒரு வாரம் தங்கி இருந்து கொள்ளையர்களின் நடவடிக்கையை கண்காணித்தனர். பின்னர் அங்குள்ள வீட்டில் பதுங்கியிருந்த கொள்ளையர்களான நாக்பூர் யார்கடா பகுதியை சேர்ந்த யாஷிம் அலி (வயது 27), குர்பானிக் (27), முகமது பாரித் (25) ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கொள்ளை கும்பலின் தலைவனாக செயல்பட்ட சலீம் அலியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஈரானிய கொள்ளை கும்பல்
கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் கோவை அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை கோவை 5-வது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். கைதானவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. கைதானவர்கள் சாதாரண கொள்ளையர்கள் இல்லை என்பதும், வடமாநிலத்தில் வசிக்கும் ஈரான் நாட்டை சேர்ந்த கொள்ளையர்கள் என்பதும் மிகப்பெரிய அளவில் கொள்ளை அடிக்கும் கும்பல் என்பதும். பல்வேறு மாநிலங்களில் அவர்கள் தேடப்படும் குற்றவாளிகள் என்பதும் தெரியவந்தது.
பல மாநிலங்களில் வழக்கு
தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், டெல்லி, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் கொள்ளையடித்துள்ளனர். கோவைக்கு வந்த அவர்கள், பல நாட்கள் நோட்டமிட்டு வந்துள்ளார்கள். அப்படி நோட்டமிட்டு சுபோமங்ஷியிடம் பரிகாரம் செய்ய வேண்டும் என கூறியும் மயக்க மருந்து கலந்த தண்ணீரை தெளித்து கொள்ளையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications