கோவை மதுக்கரை அருகே திகில் சம்பவம்.. பைக்கில் சென்றவர் மீது மோதிய பெரிய உருவம்
கோவை: கோவை மாவட்டம் ஜில்லென்ற கிளைமேட்டுக்கு மட்டும் பிரபலமல்ல. திகிலூட்டும் வன விலங்குகளும் அங்கு ஏராளமாக சுற்றும். காட்டுக்குள் இருந்து ஊருக்குள் விலங்குகள் வருவது சர்வ சாதாரணம். அப்படி மதுக்கரை அருகே நேற்று இரவு பெரிய உருவம் கொண்ட மர்ம விலங்கு ஒன்று வந்துள்ளது. அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் அந்த விலங்கு மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்த அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. அங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டு மாடு, கருஞ்சிறுத்தை, காட்டு பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவு உள்ளன. இந்த வன விலங்குகள் காட்டை ஒட்டியுள்ள கிராமங்களில் நடமாடுவது வழக்கம். இதன் காரணமாக மனித விலங்கு மோதல் சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றன.

வன விலங்குகள் நடமாட்டம்
யானை, சிறுத்தை, காட்டு மாடு, கரடி ஆகிய விலங்குகளால் மனிதர்கள், கால்நடைகள், விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக புகார் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட காட்டு மாடு தாக்கி மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். மேலும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊர்களுக்குள் வருவதால் வன விலங்குகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
மருதமலை, கணுவாய், மதுக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மருதமலை அருகே கடந்த வாரம் தாயை பிரிந்த குட்டி கருஞ்சிறுத்தை குடியிருப்புப் பகுதியில் மீட்கப்பட்டது. பிறகு அந்த கருஞ்சிறுத்தை உடல்நலக் குறைவால் உயிரிழந்தது. மருதமலையை போல, மதுக்கரை பகுதியிலும் கருஞ்சிறுத்தை குடியிருப்பு பகுதி மற்றும் சாலையில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் உள்ளது.
மதுக்கரையில் அதிர்ச்சி
இந்நிலையில் நேற்று இரவு மதுக்கரை மைல்கல் பகுதி அருகே சென்ற முதியவரை கருஞ்சிறுத்தை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2.1.2026 ஆம் தேதி மதுக்கரை வனச்சரகம், நவக்கரை பிரிவு எட்டிமடை சுற்றுக்குட்பட்ட பாலக்காடு - கோயம்புத்தூர் சாலையில் இரவு 8.30 மணிக்கு வனத்துறைக்க ஒரு தகவல் கிடைத்தது.
அதன்படி வனப்பணியாளர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தணிக்கை செய்தோம். அதில் சிவசாமி என்பவர் குவாரி அலுவலகத்தில் இருந்து பாலக்காடு - கோயம்புத்தூர் சாலை வழியாக கோவைப்புதூர் செல்லும் பொழுது அருகில் இருசக்கர வாகனத்தில் ஏதோ விலங்கு மோதி பின்பு சிவசாமி என்பவர் மதுக்கரை மார்க்கெட் தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளதாக தகவல் கிடைத்தது.
பெரிய உருவம் - வாகனம் மோதல்
மருத்துவமனை சென்று சிவசாமியிடம் விசாரித்தபோது அவர், நான் கோவைபுதூர், குளத்துப்பாளையம் அருகில் உள்ள அம்மாசை கவுண்டர் வீதியில் வசித்து வருகிறேன். இரவு குவாரி அலுவலகத்தில் இருந்து இடது பக்கமாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென எனது இரு சக்கர வாகனத்தில் பெரிய உருவம் கொண்ட விலங்கு மோதியது. அதில் நான் தடுமாறி கீழே அந்த விலங்கு மீது விழுந்தேன்.
விலங்கு பெரிய உருவமாக இருந்தது என்றார். மருத்துவரிடம் கேட்டபோது அவருக்கு கீறல்களோ, காயமோ ஏதுமில்லை. நெஞ்சுப் பகுதியில் வலி இருப்பதாக தெரிவித்தார். அதனால் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர சிகிச்சை பிரிவில் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்று மருத்துவர் கூறினார். சம்பவ இடத்தை சுற்றி வனப்பணியாளர்கள் தணிக்கை செய்ததில் கால் தடயங்கள் எதுவும் இல்லை.
சுற்றுவட்டார பகுதிகளில் தானியங்கி புகைப்படக் கருவி பெருத்தப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியை சுற்றி தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறோம்." என்று கூறியுள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
