கோவை அவிநாசி சாலையை கதிகலங்க வைத்த போதை இளைஞர்.. மக்கள் செய்த தரமான சம்பவம்
கோவை: கோவை என்றாலே அவ்வப்போது டிஸைன் டிஸைனான பிரச்சனைகள் வருவது வழக்கம். போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பதால், தினசரி ஏதாவது பஞ்சாயத்து நடப்பது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் கோவை பீளமேடு பகுதியில் நேற்று இரவு ஒரு கார் அதிவேகமாக சென்று, பொதுமக்கள் மீது மோதி அச்சுறுத்தியது. கோபமான மக்கள் காரை அடித்து உடைத்து, அதை இயக்கிய இளைஞருக்கு தர்ம அடி கொடுத்தனர். போதையில் இருந்த அந்த நபர் அப்போதும் அடங்காமல், கார் மீது ஏறி நின்று ரகளை செய்திருக்கிறார்.
கோவை மாவட்டத்தின் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. மக்கள் தொகை எண்ணிக்கையை விட வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அனைத்து பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. கல்வி, தொழில், மருத்துவம் உள்ளிட்டவற்றுக்கு கோவை முக்கியத்துவமான பகுதியாகும்.

அவிநாசி சாலையில் தாறுமாறாக ஓடிய கார்
தினசரி பல ஆயிரக்கணக்கான மக்கள் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து கோவை வருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை கூட இடைவிடாமல் போக்குவரத்து பிரச்சனை பெரியளவுக்கு வெடித்து கொண்டிருக்கிறது. இதை சரி செய்வதற்காக கோவை நகரின் பல பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. ஆனாலும் குறையவில்லை. அதிவேகம், மதுபோதையில் வண்டி ஓட்டுவது போன்ற போக்குவரத்து விதிமீறல்கள் அதிகமுள்ளன.

இந்நிலையில், கோவை பீளமேடு பகுதியில் நேற்று இரவு நேரவு ஒரு கார் அதிவேகமாக கட்டுப்பாடு இன்றி தாறுமாறாக ஓடியது. அந்த கார் அடுத்தடுத்து பைக் மற்றும் கார் உள்ளிட்டவை மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஆபத்தை விளைவிக்கும் வகையில் கார் சென்றால், அவிநாசி சாலையில் சென்ற ஓட்டிகள் கோபமடைந்து அந்த காரை நிறுத்த முயன்றனர்.

வேஷ்டி பனியனுடன் ரகளை
ஆனால் கார் நிறுத்தாமல் வேகமாக சென்றது. ஒருகட்டத்தில் பொதுமக்கள் ஆக்ரோஷமாகி காரின் கண்ணாடிகளை உடைத்து நிறுத்தி, காரை சூழ்ந்தனர். பிறகு காரை வேகமாக இயக்கி மக்களை அச்சுறுத்திய அந்த இளைஞரையும் தாக்கினர். காரில் இருந்த இளைஞரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கினார்கள். அவர் வேஷ்டி மற்றும் பனியன் அணிந்திருந்தார்.

மதுபோதையில் இருந்த இளைஞர் கீழே இறங்காமல், காரின் மீது ஏறி நின்றார். தொடர்ந்து வாயில் சிகரெட் வைத்துக்கொண்டு மக்களிடம் ரகளை செய்தார். அந்த இளைஞர் மக்களிடம், நான் ஆர்எஸ்எஸ்.. பாஜகவில் உள்ளேன் என்று சொல்லியுள்ளார். எந்த ஊர் என்று கேட்டதற்கும் சரியாக சொல்லாமல் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.

காவல்துறை விசாரணை
இதுதொடர்பாக மக்கள் பீளமேடு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், இளைஞரை பிடித்து கோவை அரசு மருத்துவமனை அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அவரின் காரையும் பறிமுதல் செய்துள்ளனர். அந்த நபர் யார், எதற்காக கோவை வந்தார், அவரின் பின்னணி என்ன என்பது குறித்து கோவை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.













Click it and Unblock the Notifications