பவன் கல்யாணுக்கு என்ன ஆச்சு? மும்பையில் மூன்றரை மணி நேரம் நடந்த ஆபரேஷன்!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு வலது தோள் பட்டையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் அவரை முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து நலம் விசாரித்தார்.
ஆந்திரா துணை முதல்வராக இருப்பவர் நடிகர் பவன் கல்யாண். இவருக்கு வலது தோள்பட்டையில் உள்ள தசை பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தோள் பட்டையில் அதிக வலியுடன் இருந்தார்.

அதற்கு சிகிச்சை எடுக்க செல்லாமல் மக்கள் பணிக்காக அந்த சிகிச்சையை அவர் தாமதப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பவன் கல்யாண் மும்பையில் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு வலது தோள்பட்டையில் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. இதுகுறித்து சந்திரபாபு நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "துணை முதல்வர் பவன் கல்யாண் முழுமையாகவும் விரைவாகவும் குணமடைய வாழ்த்துகிறேன்.
அவரது நல்வாழ்வுக்காக நான் பிரார்த்திக்கிறேன். இந்த காலத்தில் அவருக்கு மனவலிமை கிடைக்க வேண்டுகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.
பவன் கல்யாணை நேரில் சென்று சந்திரபாபு நாயுடு பார்வையிட்டார். அவரது மனைவியிடமும் நலம் விசாரித்தார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பவன் கல்யாண் எப்போதும் மக்களுடன் இருப்பவர், மக்களை ஈர்க்கும் பெரும் ஆற்றல் கொண்டவர்.
மக்களிடையே இருக்கும் போது அவர் பெரும்பாலும் தன்னையே மறந்துவிடுவார். அதனால்தான் அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இந்த வலியால் அவர் பலநாட்களாக அவதிப்பட்டு வருகிறார். தற்போது அறுவை சிகிச்சைக்கு பிறகு பவன் கல்யாண் நன்றாக இருக்கிறார்.
அவர் 3 வாரங்கள் ஓய்வு எடுத்ததும் பிசியோதெரபி சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். அதன் பிறகு மருத்துவர்களின் ஆலோசனையின்படி அவர் தனது மக்கள் பணியை தொடருவார் என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
மேலும் பவன் கல்யாணுக்கு அளித்த சிகிச்சை குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கல்யாணின் வலது தோள்பட்டையில் காயம் இருப்பது கண்டறியப்பட்டது.

supraspinatus மற்றும் infraspinatus ஆகிய இரு தசைநார்கள் கிழிந்துள்ளன. அத்துடன் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. இதற்காக கடந்த 11 ஆம் தேதி பவனுக்கு ஆர்த்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அவரது உடல்நலம் நன்றாக இருக்கிறது. அவருக்கு ஓய்வு தேவை. காயங்கள் ஆறியதும் தோள்பட்டைக்கு சில பயிற்சிகளை செய்ய வேண்டும். அடுத்த 4 வாரங்களில் அவரது தோள்பட்டை முழுமையாக சீரடையும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பவன் கல்யாணுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அவருக்கு வலி ஏற்பட்டு வந்தது. தற்போது ஒரு தோள்பட்டையில் மட்டுமே அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இன்னொரு தோள்பட்டை 2 மாதங்கள் கழித்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
வலது தோள்பட்டையில் பவனுக்கு மூன்றரை மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மயக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவர் மீண்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications