தமிழகத்தில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்பெஷல் வீடுகள்.. கோவையில் நவீன குடியிருப்பு! ஹேப்பி
கோவை: கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன குடியிருப்பு கட்டப்பட்டு வரும்நிலையில், தற்போது அங்கு இறுதிக்கட்டப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்த குட்நியூஸ் ஒன்று தற்போது வெளியாகி, பலருக்கும் மகிழ்ச்சியை தந்து வருகிறது.
உடல் உறுப்புகளும் மனவளர்ச்சியும் குன்றிய நிலையில் வாழ்ந்தவர்களுக்குப் புத்துணர்வும் புது வாழ்வும் அளிப்பதற்காக, ஊனமுற்றவர் என்ற சொல்லை நீக்கி "மாற்றுத் திறனாளிகள்" என அவர்களுக்குப் பெயர் தந்தவர் மறைந்த முதல்வர் கருணாநிதி ஆவார்.

மாற்றுத் திறனாளிகள்: மேலும், அவர்களின் நலன்களை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசின்கீழ் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை என 27.3.2010 அன்று தனியே ஒரு துறையை புதிதாக ஏற்படுத்தி அதன்மூலம் பல்வேறு சிறப்புத் திட்டங்களை உருவாக்கி எண்ணற்ற சலுகைகளை வழங்கி அவர்கள் வாழ்விலும் வளம் சேர்த்தவர். இதையடுத்து, கருணாநிதி காட்டிய வழியில், தமிழக முதல்வர் ஸ்டாலினும், மாற்றுத் திறனாளிகளுக்கு எண்ணற்ற வசதிகளையும், நலன்களையும் செய்து வருகிறார்.
குறிப்பாக, அரசு பஸ்களில் கட்டணமில்லாப் பயணச் சலுகை, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை ரூ.1,000 என்பதை ரூ.1.500ஆகவும் உயர்த்தி வழங்கினார். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையையும் உயர்த்தி அவர்கள் ஊக்கமுடன் கல்வி கற்க உதவி செய்துள்ளார்.
நவீன குடியிருப்பு: இந்நிலையில், கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான திறப்பு விழா நடைபெற உள்ளது... சொந்த வீடின்றி அவதிப்பட்டு வந்த சுமார் 115க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு கோவையை அடுத்த செட்டிபாளையம் பேரூராட்சி ஓராட்டுகுப்பை பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
இங்கு வீடுகட்ட பணமின்றி அவதிப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் நிலை குறித்து மாவட்ட கலெக்டர் கிராந்திக்குமார் பாடி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து அவர்கள் அனைவருக்கும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம், தனியார் நிறுவன பங்களிப்புடன் குடியிருப்புகள் கட்டித்தர தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
வசதிகள்: இதைத்தொடர்ந்து, கோவை தனியார் நிறுவனத்தின் நிதி உதவியுடன் சுமார் தலா ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் ஓராட்டுகுப்பை பகுதியில் குடியிருப்புகள் கட்டும் பணியும் ஆரம்பமானது. மாற்றுத்திறனாளிகளிடம், வீட்டில் என்னென்ன வசதிகள் வேண்டும்? என்பது குறித்தும் கேட்டறிந்து, அதன்படியே இந்த வீடுகள் கட்டப்பட்டன.. தற்போது, அப்பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டதாம்.
இந்த வீட்டிற்குள் செல்லும் வகையில் சாய்வு தரைதளம், வீட்டிற்குள்ளேயே பாத்ரூம், கழிப்பறை தண்ணீர் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.. மின்இணைப்பு, குடிநீர் இணைப்பு கொடுக்கும் பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன.. இந்த பணிகளும் முடிவடைந்துவிட்டால், விரைவில் இக்குடியிருப்பு திறப்பு விழா நடைபெற உள்ளதாகவும், அதன் பிறகு இவ்வீடுகள் மாற்றுத்திறனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாராட்டு: தமிழகத்தில் முதன் முதலாக, மாற்றுத்திறனாளிகளுக்காகவே குடியிருப்புகள் கோவையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது, பலரது கவனத்தையும், பாராட்டையும் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications