கொத்து கொத்தா போயிடுச்சே.. வாயில் நுரை தள்ளிடுச்சே.. அலறிய கோவை சூலூர் சுல்தான்பேட்டை.. என்னாச்சு
கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை பகுதியில், நிறைய மயில்கள் இறந்துள்ளது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றன.
கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களின் எல்லைகளில் நிறைய கிராமங்கள் உள்ளன.. கோவை, திருப்பூர் தொழில் நகரங்கள் என்றாலும், அதை சுற்றியுள்ள கிராமங்களில், விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

விவசாயிகள்: இங்குள்ள விவசாயிகள், சிறுதானியங்களை பயிரிடப்பட்டு, அதன்மூலம் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.. அதேசமயம், கடந்த சில வருடங்களாகவே, இந்த பகுதிகளில் மயில்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.. ஆனால், இந்த மயில்கள், விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை, சேதப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், திடீரென அங்கிருக்கும் மயில்கள் ஒவ்வொன்றாக இறக்க ஆரம்பித்துள்ளன.. மர்மமான முறையில் மயில்கள் இறக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருவது அதிர்ச்சியை தந்துவருகிறது..
பரிதாப மயில்கள்: வதம்பச்சேரி காந்திநகரை சேர்ந்த சண்முகராஜ் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் 17 மயில்களும், ராமசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய இடத்தில் 12 மயில்களும், கோபால்சாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் 2 மயில்களும், கந்தசாமி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் 2 மயில்கள் என மொத்தம் 33 மயில்கள் இறந்து கிடந்தன.
இந்த தகவல் உடனடியாக சுல்தான்பேட்டை போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கொத்து கொத்தாக சுருண்டு விழுந்து கிடந்த மயில்களை பார்வையிட்டனர்..
போஸ்ட் மார்ட்டம்: பிறகு வதம்பச்சேரி விஏஓ சக்திவேல், வாரப்பட்டி வருவாய் ஆய்வாளர் லோகநாதன் முன்னிலையில் 33 மயில்களின் உடல்களையும் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக, மதுக்கரைக்கு கொண்டு சென்றனர். 2 நாட்களுக்கு முன்பு, கோபால்சாமியின் தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டிருப்பதால், இதன் விதைகளின் மாதிரிகளையும் வனத்துறையினர் சேகரித்து ஆய்வுக்காக சென்றனர்.
முதலில், காந்திநகர் பகுதியில் சண்முகராஜ், ராமசாமி மற்றும் கோபால்சாமி ஆகியோருக்கு சொந்தமாக விவசாய நிலத்தில், 22 மயிகள் செத்துகிடந்திருக்கின்றன.. அதேபகுதியை சேர்ந்த ஆடு மேய்க்கும் பெண்மனி, இதை பார்த்து அதிர்ச்சியடைந்து, தோட்டத்து ஓனரிடம் சென்று விஷயத்தை சொல்லி உள்ளார். அதற்கு பிறகு, சம்பந்தப்பட்ட ஓனர்கள் கிராம நிர்வாகத்திற்கும், சுல்தான்பேட்டை போலீசுக்கும் சென்றுள்ளனர்.
வாயில் நுரை: ஒருவேளை, விதைகளில் யாராவது விஷம் வைத்திருக்கலாம் என்றும், அதனை தின்ற மயில்கள் இறந்திருக்கலாம் என்று சந்தேகம் கிளம்பியிருக்கிறது.. காரணம், இறந்துபோன மயில்களின் வாயிலிருந்து நுரை தள்ளியிருக்கிறதாம்..

இதனிடையே மயில்கள் நேற்று மாலையே இறந்து கிடந்ததாகவும் அதனை மறைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டதாகவும் சொல்கிறார்கள்.. நேற்று காலை, அந்தவழியாக சென்ற பள்ளி மாணவர்கள் இதைப்பார்த்து பதறிப்போய், சமூக ஆர்வலர்களிடம் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். அதற்கு பிறகுதான், மயில் இறந்த விவகாரம் சுற்றுவட்டாரங்களில் தெரியவந்துள்ளது.
வனப்பறவையான, மயில்கள் இறந்துவிட்டால், உடனடியாக வனத்துறைக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது அடிப்படை விதி.., அப்படியிருக்கும்போது, இந்த மயில்களின் சடலத்தை மறைக்க முயன்றவர்கள் யார் என்று தெரியவில்லை.
ஒரே மர்மம்: அதேபோல, விஷம் வைத்துதான் மயில்கள் கொல்லப்பட்டனவா? என்பதும் தெரியவில்லை.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான், நிஜமான காரணம் தெரியவரும். இருந்தாலும், கொத்து கொத்தாக மயில்கள் இறந்துகிடந்துள்ளது, கடும் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் தந்துவருகிறது.












Click it and Unblock the Notifications