இவர் தான் கொள்ளையன்! கோவை நகைக்கடையில் 200 சவரன் கொள்ளையடித்த நபரின் போட்டோ வெளியீடு! பின்னணி
கோவை: கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நுழைந்து 200 சவரன் நகை கொள்ளையடித்த நபரை நேற்று போலீசார் அடையாளம் கண்டனர். இந்நிலையில் தான் அவரது வீட்டில் இருந்து சில நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ள நிலையில் கொள்ளையடித்த நபரின் போட்டோவை போலீசார் இன்று வெளியிட்டுள்ளனர்.
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் காந்திபுரத்தில் இந்த நகைக்கடை அமைந்துள்ளது. இந்நிலையில் தான் நேற்று முன்தினம் காலையில் நகைக்கடை ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்தனர்.

நகைக்கடையை திறந்து உள்ளே சென்றபோது அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் காத்திருந்தது. அதாவது நகைக்கடையில் இருந்த தங்க, வைர, பிளாட்டின நகைகள் மாயமாகி இருந்தன. யாரோ இரவில் நகைக்கடைக்குள் நுழைந்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது நகைக்கடையில் வெண்டிலேட்டர் துளையின் வழியே உள்ளே நுழைந்த மர்ம நபர் 200 சவரன் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் அவர் கண்காணிப்பு கேமராவில் தனது முகம் பதிவாகாமல் இருக்க சட்டையை வைத்து முகத்தை மறைத்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளையனை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அந்த நபர் முதலில் ஆட்டோவில் ஏறி உக்கடம் சென்று அங்கிருந்து பஸ்சில் பொள்ளாச்சி சென்றது தெரியவந்தது. இதையடுத்து பொள்ளாச்சியில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையின்போது கொள்ளையன் தர்மபுரி மாவட்டம் ஆணைமலையை சேர்ந்த விஜயக்குமார் என்பதும், அவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும் விஜயக்குமாருக்கு வெறும் 25 வயது தான் நிரம்பி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஆணைமலைக்கு சென்ற போலீசார் அங்கிருந்த அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அங்கிருந்து 2 கிலோ 700 கிராம் நகைகளை போலீசார் மீட்டுள்ளனர்.இருப்பினும் விஜயக்குமார் அங்கு இல்லை. அவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் தான் விஜயக்குமாரின போட்டோவை போலீசார் வெளியிட்டுள்ளனர். பைக் ஒன்றின் அருகே ஆரஞ்ச் நிற டீசர்ட் அணிந்து விஜயக்குமார் நிற்கும் போட்டோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த போட்டோவில் பார்க்க அவர் ஒல்லியாக காணப்படுகிறார். இவரை பார்க்கும் நபர்கள் போலீசாருக்கு தகவல் அளிக்கலாம். இதற்கிடையே தான் விஜயக்குமாரை நெருங்கியுள்ளதாகவும், விரைவில் அவர் கைது செய்யப்படுவார் எனவும் போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications