லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட்
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாநகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் லட்சுமி மில் பகுதியில் உள்ள லுலு மாலில், கெட்டுப்போன சிக்கன் உணவைச் சாப்பிட்ட இரண்டு குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. மிகப்பெரிய நிறுவனமான லுலு மாலில் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது கோவை மக்களை அதிர வைத்து வருகிறது.
கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவர், நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில் தனது இரண்டு குழந்தைகளுடன் புளியகுளம் சாலையில் அமைந்துள்ள இந்த வணிக வளாகத்திற்குச் சென்றுள்ளார்..

கோவை லுலு மால்
அங்குள்ள ஒரு பிரபல உணவகத்தில் தனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சிக்கன் லாலிபாப், ரோஸ்டட் சிக்கன் மற்றும் சிக்கன் சாண்ட்விச் போன்றவற்றை வாங்கி தந்திருக்கிறார். அந்த சிக்கன் சாப்பிட்ட கொஞ்ச நேரத்திலேயே, சசிகுமாரின் 2 குழந்தைகளுக்கும் கடுமையான வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது..
குழந்தைகளின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததைக் கண்டு பதற்றமடைந்த சசிகுமார், அவர்கள் சாப்பிட்ட மீதமிருந்த சிக்கன் துண்டுகளை எடுத்து பரிசோதித்து பார்த்துள்ளார்.. அப்போது அந்த சிக்கனில் இருந்து சகிக்க முடியாத அளவிற்கு கடுமையான துர்நாற்றம் வீசியதை கண்டு அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார்.. தரம் குறைந்த மற்றும் கெட்டுப்போன சிக்கனை பயன்படுத்தி அந்த உணவுகள் தயாரித்து வழங்கப்பட்டதே குழந்தைகளின் இந்த நிலைக்குக் காரணம் என்பது சசிகுமாருக்கு தெரியவந்துள்ளது.
புகாரை காது கொடுத்து கேட்கல
உடனடியாக இது குறித்து அந்த உணவகத்தின் மேலாளர் மற்றும் பணியாளர்களிடம் சசிகுமார் புகார் அளித்துள்ளார்.. ஆனால், அங்குள்ள ஊழியர்கள் அவரது புகாரை முறையாக காது கொடுத்துக் கேட்காமல், மிகவும் அலட்சியமாகப் பதிலளித்ததாக கூறப்படுகிறது..
உரிய விளக்கம் அளிக்காமல் தவிர்த்த உணவக நிர்வாகத்தின் போக்கு, பாதிக்கப்பட்ட தந்தைக்கு மேலும் அதிருப்தியையும் கோபத்தையும் உண்டாக்கியது.. இதையடுத்து, இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்ள முடிவு செய்த அவர், தனது குடும்பத்துடன் நேராக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலகத்திற்கு விரைந்தார்.
தரமற்ற சிக்கன்
கெட்டுப்போனதாக சொல்லப்படும் அந்த சிக்கன் உணவுப் பார்சலை ஆதாரமாக அதிகாரிகளிடம் ஒப்படைத்த சசிகுமார், இது தொடர்பாக தனது புகார் மனுவை நேரடியாக அளித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சசிகுமார், "இந்த தரமற்ற சிக்கனைச் சாப்பிட்டதால் எனது இரண்டு குழந்தைகளும், நானும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோம்.. என்னை போல மற்ற பொதுமக்களுக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கும் இதுபோன்ற ஆபத்தான சூழல் ஏற்படக்கூடாது..
லுலு மால் மீது புகார்
எனவே, பொதுமக்களின் உயிருடன் விளையாடும் சம்பந்தப்பட்ட லுலு மால் மற்றும் அந்த உணவகத்தின் மீது உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்..
இந்த புகாரைத் தொடர்ந்து, கோவை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தில் அதிரடி ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.. அங்குள்ள உணவுகளின் தரம், இறைச்சி சேமிக்கப்படும் முறைகள் மற்றும் சுகாதாரம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.. நகரின் மிகப்பெரிய வணிக வளாகங்களில் கூட உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ள இந்தச் சம்பவம், கோயம்புத்தூர் மக்களிடையே பெரும் விவாதத்தையும் அச்சத்தையும் கிளப்பியுள்ளது..












Click it and Unblock the Notifications