கோவையில் திகில் வீடு.. பல வருடங்களாக அகற்றப்படாத குப்பை.. வெளியவே வராத தாய், மகள்
கோவை: கோவையில் ஒரு வீடு பல வருடங்களாக குப்பை அகற்றப்படாமல், பார்க்க திகில் கிளப்பும் நிலையில் இருந்துள்ளது. குப்பை அகற்றப்படாத அந்த வீட்டிற்குள் தாயும் மகளும் வசித்துவருகிறாரகள். உணவினை ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிட்டு வாழ்ந்து வரும் இப்பெண்களின் செயலை கண்டுபிடித்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.
கோவை மாநகரில் அதுல்யா என்ற ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. இங்கு மகளுடன் ஒரு பெண் வசித்து வருகிறார். அந்த வயதான பெண்ணின் கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அதன் பின்னர் அந்த பெண்ணுக்கும், அவரது மகளுக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை.. குப்பைகளை கணவர் தான் வெளியில் போய் கொட்டி வந்துள்ளார். மகளையும் மனைவியையும் எதற்கும் வீட்டை விட்டே வெளியில் செல்லாமல் வைத்திருந்ததாக தெரிகிறது.

இதனால் கணவர் இறந்த அதிர்ச்சியில் அந்த பெண் வீட்டை விட்டே வெளியில் செல்லாமல் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. தாயும் மகளும் குப்பைகள் எதையும் வெளியில் கொட்டாமல் சேர்த்து வைத்துக் கொண்டே வந்துள்ளார்கள். இப்படி பல வருடங்களாக குப்பைகளை வீட்டில் சேகரித்துள்ளார்கள். வீடு முழுக்க குப்பையாக மாறி இருக்கிறது. சாப்பிட ஆன்லைனில் ஆர்டர் செய்து உணவை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார்கள். பால் முதல் சாப்பாடு வரை அத்தனையையும் ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து சாப்பிட்டு வந்துள்ளார்கள்.
அப்படி சாப்பிட்ட உணவு குப்பைகள் உள்பட பல்வேறு குப்பைகள் என மொத்தம் 4 டன் குப்பைக்கு மேல் வீட்டில் குப்பைகள் சேர்ந்துள்ளது. இதனால் ஒரு கட்டத்தில் கடும் துர்நாற்றம் அந்த பகுதி முழுவதுமே வீசி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், என்னடா இந்த வீட்டில் இப்படி நாறுதே என்று சென்று பார்த்தால், அங்கு குப்பைகளுக்குள் தாயும் மகளும் வசிப்பதை பார்த்துள்ளனர்.
இதையடுத்து கோவை மாநகராட்சிக்கு தகவல் கொடுத்த அவர்கள், குப்பைகள் அனைத்தையும் அகற்ற ஏற்பாடு செய்தனர். இதுபற்றி ஊடகங்களுக்கு தகவல் தெரிய வந்ததையடுத்து அவர்களும் போய் அங்கு செய்தி சேகரிக்க சென்றுள்ளனர். அப்போது தான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தள்ளது.
இதுபற்றி பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் ஒருவர் கூறுகையில், "எங்கள் பக்கத்து வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக சொன்னார்கள். நேரில் போய் பார்த்த போது, நினைத்ததைவிடவும் மோசமான நிலைமையில் இருந்தது. அங்கு தாயும் மகளும் வசித்து வந்தார்கள். அங்கு 4 டன்னுக்கு மேல் குப்பை இருந்தது. குப்பையில்தான் தாயும் மகளும் படுத்திருக்கிறார்கள்.
பைப்பில் வழிந்த தண்ணீரும் சேர்ந்து குப்பையுடன் காணப்பட்டது.அந்த குடும்பத்தினர் ஏதாவது ஒரு மன அழுத்தத்தில் இப்படி செய்திருக்கிறார்கள்.. மாநகராட்சி நிர்வாகமும் , மற்றவர்களும் சேர்ந்து அவங்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.. இந்த வீட்டை சுத்தமாக பெயிண்டிங் செய்து சுத்தம் செய்து தந்தால் நன்றாக இருக்கும்" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications