சீமானை சல்லி சல்லியா நொறுக்கிய கோவை நிர்வாகிகள்.. சொந்தக்காரங்க கூட வர மாட்டேங்கிறாங்க
கோவை: கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியில் இருந்து பொறுப்பாளர்கள் அனைவரும் வெளியேறுவதாக கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார். பல்வேறு இடங்களில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி வரும் நிலையில், கோவையில் ஒட்டுமொத்தமாக பொறுப்பாளர்கள் விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 20க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். அருந்ததியினர் குறித்த சீமானின் பேச்சால் கடும் அதிருப்தி காரணமாக கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகுவதாக தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் அபிராமி, வணிகர் பாசறை மாவட்ட செயலாளர் செந்தில்குமார், தொழிற்சங்க செயலாளர் ஏழுமலை பாபு ஆகியோர் செய்தியாளர்களை இன்று சந்தித்தனர்.
அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாம் தமிழர் கட்சியின் செயல்பாடு மீது நீண்டகாலமாகவே கடும் அதிருப்தி இருந்தது. அதனால், ஒட்டுமொத்தமாக கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் வெளியேற முடிவெடுத்துள்ளோம். எந்தக் கட்சியில் சேரப் போகிறோம் என்பது குறித்து விரைவில் தெரிவிப்போம்.
பொறுப்பாளர்கள் 20 பேர் மற்றும் நாதக உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கானோர் உள்ளோம். ஒட்டுமொத்த கட்சியில் இருந்து வெளியேற முடிவு செய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் அண்ணன் சீமான் மீது மதிப்பு வைத்திருக்கிறோம். ஆனால், தொடர்ச்சியாக முன்னுக்குப் பின் முரணாக அவர் பேசி வருவதால் கொங்கு மண்டலத்தில் அரசியல் செய்ய முடிவதில்லை.
கடந்த பத்து ஆண்டுகளாக களத்தில் நிற்கிறோம். ஆனால், மக்களை எங்களை அந்நியமாகவே பார்க்கின்றனர். உள்ளூர் மக்கள் கட்சியில் சேர வருவதில்லை. இதே பகுதியைச் சேர்ந்தவர்கள், உறவினர்களே கட்சியில் சேர விரும்புவதில்லை. எங்களது குடும்பத்தினர் பலரும் திமுக, அதிமுகவில் தான் உள்ளனர். நாதக ஒரு மாற்றுக் கட்சியாக இருக்கும். மாற்றத்துக்கான கட்சி என்று நினைத்துதான் களத்துக்கு வந்தோம்.
அதுபோன்ற எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதால் தற்போது வெளியேறுகிறோம். எந்தக் கட்சியில் சேரப் போகிறோம் என்பது குறித்து முடிவு செய்யவில்லை. சிறப்பான, வலுமையான கட்சிக்குத்தான் செல்ல முடியும். அருந்ததியர் குறித்து சீமான் பேசியது கொங்கு பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அருந்ததியர் சமூகத்தினரின் பங்களிப்பானது சமூகத்தில் பெரும் பங்களிப்பாகும். அவர்களை வந்தேறி என்று கூறுவது களத்தில் நிற்கும் எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சீமான் வெற்றி பெறுவார், முதல்வராவார் என்று நினைத்துதான் வந்தோம். ஆனால், அதை நோக்கிய எந்தவொரு பயணமும் இல்லை. அதனால்தான் வெளியேறுகிறோம். அனைத்து கருத்துகளும் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. கொள்கைக்கும், நடைமுறைக்கும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுகளாக இந்தப் பிரச்னை போய்க் கொண்டிருக்கிறது.
ஒரு பிரச்னையை சொன்னால் முதலில் எல்லாம் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது, நாதகவில் அடுத்தகட்ட தலைமை பொறுப்பில் யாருமே இல்லை. எல்லோரும் பொறுப்பில் இருந்து விலகிவிட்டனர். வேலைக்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை. பொறுமையாக இருங்க, கடந்து போங்க என்பதுதான் பதிலாக உள்ளது.
எனக்கோ, என்னை சார்ந்தவர்களுக்கோ எதாவது பிரச்னை என்றால் கூட சீமானைத் தவிர யாராலும் தொடர்பு கொள்ள முடியாது. பெண்களுக்கு சம உரிமை கொடுத்தாலும் பெண் நிர்வாகிகளின் கருத்துகளை கேட்பதில்லை. எங்களைப் போலவே தமிழ்நாடு முழுவதும் கட்சியின் நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர் என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications