பகலில் பிச்சைக்காரன்.. இரவில் திக் திக் திருடன்.. கோவையை அதிரவைத்த சம்பவம்
கோவை: கோவை அருகே பகல் நேரங்களில் சாலைகளில் பிச்சை எடுத்துக் கொண்டு நோட்டமிட்டு விட்டு இரவில் ஹெல்மெட் அணிந்து கொண்டு கடைகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபரை போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் கோவை மக்களிடையே இச்சம்பவம் பதை பதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
நம்முடைய சமூகத்தில் டிஸைன், டிஸைனாக ஏராளமான திருட்டுச் சம்பவங்கள் தினம்தோறும் அரங்கேறி வருகின்றன. ஆன்லைன், ஆஃப்லைன் என்று பல ரூட்டுகளைப் போட்டு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கோழி திருட்டு, சைக்கிள் திருட்டு, ஆடு திருட்டு என்று பல நூதன திருட்டுச் சம்பவங்கள் குறித்து பார்த்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால், கோவை மாவட்டத்தில் நடந்துள்ள யாரும் எதிர்பாராத ஒரு திருட்டுச் சம்பவம் ஒட்டுமொத்த கோவையையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. கோவை அருகே உள்ள சூலூரில் பகல் நேரங்களில் பிச்சைக்காரன் போல வேஷம் போட்டு, சுற்றித் திரிந்து கொண்டும், இரவில் ஹெல்மெட் அணிந்து கடைகளில் திருட்டுச் சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்த நபரை போலீஸார் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம், சூலூரில் இருந்து கலங்கல் செல்லும் சாலையில் பிரபல பழமுதிர் நிலையம் ஒன்று உள்ளது. இந்த பழமுதிர் நிலையத்தை அப்பாஸ் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில், சம்பவம் நடந்த தினத்தன்றும் இரவு வழக்கம்போல கடையை மூடிவிட்டு அப்பாஸ் வீட்டிற்குச் சென்றுள்ளார். மறுநாள் காலையில் கடையைத் திறந்து பார்த்தபோது, கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பாஸ் இச்சம்பவம் குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் பழமுதிர் சோலையின் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்துள்ளனர். அதில், மர்ம நபர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து கொண்டு வந்து கடையை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் இத்திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமசாமி என்பது தெரியவந்துள்ளது. மேலும், ராமசாமி பகல் நேரங்களில் பிச்சைக்காரன் போல வேஷம் போட்டுக் கொண்டு கடைகளை நோட்டமிட்டு விட்டு, அந்தக் கடைகளில் இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
இதேபோல பிச்சைக்காரன் வேஷம் போட்டு ராமசாமி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தங்கி திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, பச்சாபாளையம் பகுதியில் பதுங்கியிருந்த ராமசாமியை போலீஸார் கைது செய்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, ராமசாமி ஹெல்மெட் அணிந்து கொண்டு பழமுதிர் நிலையத்தில் புகுந்து கல்லாப் பெட்டியில் இருந்து பணத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இச்சம்பவம் கோவை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications