கோவையில் ஷாக்! குறிவைக்கப்படும் இளைஞர்கள்.. போதைப் பொருள் கடத்தல் கும்பலை கைது செய்த போலீஸ்
கோவை: கோவையில் போதைப் பொருள்கள் புழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தானில் இருந்து ரயில் மூலம் போதை மாத்திரைகளை கடத்தி விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அந்த கும்பலிடம் இருந்து 1,556 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கு மூளையாக செயல்பட்ட மொத்த வியாபாரியை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கஞ்சா, கஞ்சா ஆயில், கஞ்சா சாக்லேட், போதை ஊசி, போதை மாத்திரைகள் என வகை வகையான போதைப் பொருள்கள் சட்டத்திற்குப் புறம்பாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. புறநகர்ப் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், ஐடி இளைஞர்கள் உள்ளிட்டோரை குறிவைத்து போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதுதொடர்பாக கோவையில் புறநகர்ப் பகுதிகள் மற்றும் வாடகைக்கு தங்கியிருக்கும் மாணவர்கள், இளைஞர்களின் அறைகள், விடுதிகள் போன்றவற்றில் போலீஸார் அடிக்கடி அதிரடி சோதனை மேற்கொள்வது வழக்கம். இதுபோன்ற சமயங்களில் போதைப் பொருள்கள் பறிமுதலும் செய்யப்பட்டு வருகின்றன. கோவை மாநகர போலீஸார் தொடர்ந்து சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் போதை கும்பலின் சமூக விரோத செயல்கள் கோவையில் ஓய்ந்தபாடில்லை.
இந்நிலையில், கோவைக்கு ராஜஸ்தானில் இருந்து ரயில் மூலம் போதை மாத்திரைகளை கடத்தி விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அந்த கும்பலிடம் இருந்து 1,556 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கு மூளையாக செயல்பட்ட மொத்த வியாபாரியை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகரப் பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது, அந்த வழியாக 4 பேர் நடந்து வந்தனர். அவர்களின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, உடனடியாக போலீசார் அந்த 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த கிஷோர் (வயது 27), தினேஷ் (25), அஜய் பெலிக்ஸ் (25), ரத்தினபுரி சூர்யா (19) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்த 4 பேரும் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வரும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களை சோதனை செய்தபோது விற்பனைக்காக ஏராளமான போதை மாத்திரைகள் வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, போலீசார் அந்த 4 பேரையும் உடனடியாக கைது செய்து, அவர்களிடம் இருந்து 1,556 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ. 4 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. போதை மாத்திரைகள் கடத்தல் சம்பவத்தில் யார் யாருக்கு தொடர்புள்ளது என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி அவற்றை ரயில் மூலமாக கடத்தி வந்துள்ளனர். முக்கிய நபரான மொத்த வியாபாரி ராஜஸ்தானில் உள்ளார். அந்த நபரை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications