கேரள லாட்டரிகள் கொண்டு வரப்படுகிறதா? பார்டரில் கோவை போலீசார் தீவிர கண்காணிப்பு.. சிக்கிடாதீங்க
கோவை: தமிழகத்தில் கள்ளச்சந்தையில் கேரள லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில், கேரள - தமிழ்நாடு எல்லையில் கோவை போலீசார் தற்போது தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கேரள லாட்டரிகளை விற்பனை செய்வது சட்டவிரோத செயல் ஆகும்.
கேரளாவில் தினமும் லாட்டரி விற்பனை செய்யப்படும் நிலையில் சிலர் அந்த டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி தமிழகத்திற்கு கொண்டு வந்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் சம்பவம் அதிகரித்துள்ள நிலையில் இதனை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் லாட்டரி விற்பனை
தமிழ்நாட்டில் லாட்டரிகளுக்கு தடை உள்ளது. லாட்டரிகளால் ஏழை எளிய மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனால், கடந்த 2003 ஆம் ஆண்டு லாட்டரிக்கு தமிழக அரசு முழுமையாக தடை விதித்தது. இதன்படி தமிழகத்தில் லாட்டரிகள் விற்பதும் வாங்குவதும் குற்றமாகும்.
அதே வேளையில், தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரிகளுக்கு அனுமதி உள்ளது. அங்கு மாநில அரசே லாட்டரியை விற்பனை செய்கிறது. தினம் தோறும் லாட்டரி விற்பனை நடைபெறுகிறது.தினமும் ரூ.50 விலை கொண்ட லாட்டரி விற்கப்படுகிறது. இதற்கு முதல் பரிசாக ரூ. 1 கோடி அளிக்கப்படுகிறது.
அதுபோக வருடத்திற்கு ஆறு பம்பர் லாட்டரிகளும் விற்பனை செய்யப்படுகிறது. சீசனுக்கு ஏற்றபடி லாட்டரிகள் விற்கப்படுகிறது. அதாவது ஓணம் பம்பர், கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர், விஷு பம்பர், சம்மர் பம்பர், மான்சூன் என பம்பர் என வருடத்திற்கு ஆறு பம்பர் லாட்டரிகள் விற்கப்படுகின்றன. இந்த டிக்கெட்டுகளுக்கு பல கோடி ரூபாய் முதல் பரிசாக அளிக்கப்படுகிறது.
வெளி மாநிலத்தவர்களுக்கும் விழும் பரிசு
எடுத்துக்காட்டாக கேரள ஓணம் பம்பர் லாட்டரிக்கு முதல் பரிசு ரூ.25 கோடி அளிக்கப்படும். இதில் பெயிண்ட் கடை ஊழியர் ஒருவருக்கு முதல் பரிசு அடித்தது. பல கோடி பரிசு என்பதால் ஒரே நாளில் வாழ்க்கை மாறிவிடும் என்ற ஆசையில் லாட்டரிகளை பலரும் ஆர்வத்துடன் வாங்குகிறார்கள். பல லட்சம் டிக்கெட்டுகள் அச்சிட்டு விற்கப்படுவதால், பரிசு விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருக்கு மட்டுமே அளிக்கப்படும்.
இதனால், லட்சக்க்கணக்கானவர்கள், போட்ட காசை கூட எடுக்காமல் நஷ்டம் அடைவததுதான் எதார்த்தமாக உள்ளது. ஆனாலும் ஆசை யாரை விட்டது என்பது போல பலரும் தொடர்ந்து லாட்டரி வாங்கி வருகிறர்கள். கேரள லாட்டரிகளில் வெளி மாநிலத்தவர்கள் சிலருக்கும் பரிசு அடிக்கும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது.
தமிழகத்தில் கள்ளச்சந்தையில் விற்பனை
அதாவது கேரளாவிற்கு சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்காக செல்லும் தமிழ்நாடு, கர்நாடகா போன்ற அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்கள் லாட்டரிகள் வாங்குவதை பார்க்க முடிகிறது. அப்படி வாங்கும் சிலருக்கு பரிசும் அடித்துவிடுகிறது. கேரள லாட்டரிகளை பொறுத்தவரை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த டிக்கெட் என்றால் பரிசு கிடைக்காது.
இது தெரியாமல் தமிழ்நாட்டில் கள்ளசந்தையில் விற்கப்படும் டிக்கெடுகளை வாங்கி பலரும் ஏமாறுகிறார்கள். அதேபோல, கேரளாவில் இருந்து மொத்தமாக டிக்கெட் வாங்கி தமிழகத்திலும் கள்ளச்சந்தையில் விற்பனை நடைபெறுகிறது. இவர்களையும் போலீசார் அவ்வப்போது கைது செய்கிறார்கள். ஆனாலும் இந்த சட்ட விரோத விற்பனை நடைபெற்று வருகிறது.
பார்டரில் போலீசார் சோதனை
இதைக்கட்டுப்படுத்த கேரள - தமிழ்நாடு எல்லையில் கோவை போலீசார் தற்போது தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 34,406 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.14.87 லட்சம் எனவும் 691 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கோவை போலீசாரால் மட்டும் 723 பேர் கடந்த ஆண்டில் கைது செய்யப்பட்டுள்ளார்களாம். 2024 ஆம் ஆண்டை விட 2025 ல் சட்ட விரோதமாக லாட்டரி கடத்தல் நடைபெறுவது அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் போலீசார் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications