"பிரியாணி ஜிஹாத்.." பிரியாணியில் கருத்தடை மாத்திரை என பரவும் வதந்தி! அதிரடியில் இறங்கிய கோவை போலீஸ்
கோவை: கடையில் விற்பனை செய்யப்படும் பிரியாணியில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்படுவதாக இணையத்தில் பொய்யான தகவல்களைப் பரப்பியோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எப்போதும் அசைவ பிரியர்கள் மத்தியில் மிகவும் பிடித்த ஒரு உணவாகப் பிரியாணி இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிரியாணிக்கான ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.
காலை, மதியம் இரவு என மூன்று வேலையும் பிரியாணி சாப்பிடும் அளவுக்கும் பிரியாணி ரசிகர்கள் இருக்கவே செய்கிறார்கள். இதன் காரணமாகவே சென்னை முதல் சிறு நகரங்கள் வரை எல்லா இடங்களிலும் பிரியாணி கடைகள் இருப்பதை நம்மால் பார்க்க முடியும்

பிரியாணி: அது மட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் ஆன்லைன் டெலிவரி செயலிகள் அதிகம் ஆர்டர் செய்த உணவுப் பட்டியலை வெளியிடும். கடந்தாண்டு சேர்த்து தொடர்ச்சியாக இதில் 7ஆவது ஆண்டாக பிரியாணி தான் டாப் இடத்தில் இருக்கிறது. ஒரு உணவு டெலிவரி தளத்தில் மட்டும் நிமிடத்திற்கு 137 பிரியாணி வாங்கி குவித்துள்ளனர். அதாவது ஒவ்வொரு நொடிக்கும் 2.28 பிரியாணிகள் ஆர்டர் செய்துள்ளனர். அந்தளவுக்கு இந்தியர்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவாகப் பிரியாணி மாறி வருகிறது.
அதேநேரம் சிலர் பிரியாணி குறித்துத் திட்டமிட்டு சில பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு கூட பிரியாணி சாப்பிட்டால் ஆண்மைக் குறைவு வரும் எனப் பொய்யான தகவல்களைச் சிலர் இணையத்தில் பரப்பினர். அப்போதே பல மருத்துவர்களும் இந்த தகவலைத் திட்டவட்டமாக மறுத்தனர். இதனிடையே இப்போது மீண்டும் இதுபோல பொய்யான தகவல்களைச் சிலர் திட்டமிட்டுப் பரப்பி உள்ளனர்.

கோவை: தமிழ்நாட்டில் கோவை நகரில் தான் இதுபோன்ற தகவல் பரவி உள்ளது. கோவையைப் பொறுத்தவரை சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற பொய்யான தகவல்களைப் பரப்பி இரு சமூகங்கள் இடையே மோதலை தூண்டிவிடச் சிலர் முயல்வதாகக் கூறப்படுகிறது. இதனால் இப்படி கருத்துகளைப் பதிவிடுவோர் மீது கோவை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கான பணிகளைக் கோவை சைபர் கிரைம் போலீசார் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே கோவையில் 'பிரியாணி ஜிஹாத்' என்ற ஒன்றை ஆரம்பித்துள்ளதாகச் சிலர் வதந்திகளைப் பரப்பினர். அதாவது கடைகளில் விற்பனை செய்யப்படும் பிரியாணியில் இந்துக்களுக்குக் கருத்தடை மாத்திரை கலந்த பிரியாணி அவர்கள் விற்பதாகக் கூறுகின்றனர். அதேநேரம் அங்குள்ள இஸ்லாமியர்களுக்கு மட்டும் கருத்தடை மாத்திரை கலக்காத பிரியாணி விற்பனை செய்வதாகவும் சில விஷமிகள் பொய்யான தகவல்களைப் பரப்பியுள்ளனர்.
அதிரடி ஆக்ஷன்: மேலும், இது போலீசாரை கண்டறிந்துள்ளதாகவும் அவதூறு பரப்பும் வகையில் திட்டமிட்டு ட்விட்டரில் சிலர் பொய்யான தகவல்களைப் பரப்பி வந்தனர். இது கோவை மக்களிடையே சற்று அச்சத்தை ஏற்படுத்தியது. இது உண்மையாக இருக்காது என்று கோவை மக்களுக்குத் தெரிந்தாலும் கூட திடீரென ட்விட்டரில் பலரும் இதுபோன்ற கருத்துகளைப் பதிவிட்டதால் மக்கள் குழப்பமடைந்தனர். இன்னும் சிலர் கோவை போலீசாரின் ட்விட்டர் பக்கத்தையும் டேக் செய்து இது குறித்து கேள்வி எழுப்பி இருந்தனர்.
இது குறித்து தாமரைக் கண்ணன் என்பவர் போலீசாரிடமும் புகார் அளித்திருந்தார். அதன்படி வழக்குப்பதிவு செய்த கோவை சைபர் கிரைம் போலீசார், இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப திருத்தச் சட்டம் 2008 கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக மொத்தம் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications