கோவை தனியார் பஸ் டிரைவர் ஷர்மிளா டிஸ்மிஸ்..கனிமொழி எம்.பி பயணத்தின் போது நடந்தது என்ன?
கோவை: கனிமொழி எம்.பி பயணம் செய்த தனியார் பேருந்தின் டிரைவர் ஷர்மிளா உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். கனிமொழி எம்.பி கோவை காந்திபுரத்தில் பயணம் செய்த போது பஸ்சில் இருந்த சூப்பர்வைசர் கடுமையாக நடந்து கொண்டதாகவும், அதற்கு ஷர்மிளா வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பேருந்து உரிமையாளர் ஷர்மிளாவை பணி நீக்கம் செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கோவை காந்திபுரம் - சோமனூர் தடத்தில் தனியார் பேருந்தை இயக்கும் ஷர்மிளா, கோவை மாநகரின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கோவை வடவள்ளியைச் சேர்ந்த 24 வயதான இவர், மருந்தாளுநர் படிப்பில் டிப்ளமோ முடித்திருக்கிறார். ஆட்டோ ஓட்டுநரான தந்தையைப் பார்த்துத் தானும் ஓட்டுநராக வேண்டும் என விரும்பினார். அதன்படி சில காலம் ஆட்டோ ஓட்டுநராகவும் கால் டாக்ஸி ஓட்டுநராகவும் இருந்தார்.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பலரைத் தன் ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்ற பிறகு கோவையின் விவி டிரான்ஸ்போர்ட் என்ற தனியார் பேருந்து நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிக்க, டிரைவர் வேலை கிடைத்தது. இதனையடுத்து அதிகம் பிரபலமானார் ஷர்மிளா. பல யுடுயூப் சேனல்களும். பிரபல இணைய தள பக்கங்களிலும் இவரது பேட்டி வெளியானது.
முகநூல் பக்கத்தில் இவர் பதிவிடும் ரீல்ஸ் ஏராளமான லைக்ஸ்களை அள்ளும். சிங்கப்பெண்ணே என்ற பின்னணி பாடல் ஒலிக்க பலரும் பயர் விடுவார்கள். கடந்த வாரம் பாஜகவின் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் காந்திபுரத்தில் ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணம் செய்து வாழ்த்தினார்.
இன்றைய தினம் காலையில் திமுக எம்.பி கனிமொழியும் ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணம் செய்தார். அப்போது ஷர்மிளாவிற்கு வாழ்த்து கூறியதோடு சிறிது நேரத்தில் இறங்கி விட்டார். இதனையடுத்து சில மணி நேரங்களில் பஸ் டிரைவர் ஷர்மிளா பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
கனிமொழி எம்.பி பேருந்தில் பயணம் செய்த போது டிக்கெட் கொடுக்கும் சூப்பர்வைசர் கடுமையாக நடந்து கொண்டதாகவும் அதற்கு ஷர்மிளா பதில் பேசும் போது வாக்குவாதம் நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்தி விட்டு பேருந்து நிறுவன உரிமையாளர்களிடம் விளக்கம் அளிக்க சென்ற போது உடனடியாக ஷர்மிளாவை பணியை விட்டு நீக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து தான் இயக்கி வந்த பேருந்தை நிறுத்தி விட்டு கண்கள் கலங்க நின்றிருந்தார் ஷர்மிளா. செய்தியாளர்களிடம் பேசிய ஷர்மிளா, காலையில் கனிமொழி மேடம் பேருந்தில் பயணம் செய்தார். இது குறித்து நான் ஏற்கனவே நிர்வாகத்திற்கு தகவல் கூறிவிட்டேன். ஆனால் நான் கூறவில்லை என்று சொல்கின்றனர். என்னுடைய பிரபலத்திற்காக அரசியல்வாதிகள், பிரபலங்களை நான் பேருந்தில் பயணம் செய்ய வைப்பதாக கூறுகின்றனர். கனிமொழி மேடம் பஸ்சில் இருந்த போது டிக்கெட் எடுப்பது தொடர்பாக சூப்பர்வைசர் கடுமையாக பேசினார். அப்போது நான் அவர்களைப் பற்றி அப்படி பேசக்கூடாது என்று சொன்னேன். அதை அந்த பெண் கேட்கவில்லை.
கனிமொழி அவர்களின் பிஏ காசு கொடுத்து டிக்கெட் வாங்கித்தான் பயணம் செய்தனர். நான் சொன்னதை பஸ் நிர்வாகத்தினர் கேட்கவில்லை என்றும் ஷர்மிளா தனது தரப்பு நியாயத்தை தெரிவித்துள்ளார். எனக்கு ஆதரவாக எனது அப்பா பேசிய போது நீ உன் பிள்ளையை அழைத்துக்கொண்டு போய்விடு என்று ஒரே வார்த்தையில் கூறி விட்டதாகவும் ஷர்மிளா தெரிவித்தார்.
ஷர்மிளா பேருந்து ஓட்டுவது பற்றிய ரீல்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகின்றன. ரீல்ஸ் மூலம் அதிக ரீச் ஆன ஷர்மிளாவின் பிரபலத்தை பிடிக்காதவர்கள்தான் நிர்வாகத்திடம் தவறாக சொல்லிக்கொடுத்து டிஸ்மிஸ் செய்ய வைத்து விட்டதாகவும் ஷர்மிளாவின் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications